நோயல் நடேசன்
நான் மெல்பேனில் வைத்திருந்த மிருக மருத்துவ சிகிச்சை நிலையத்தை இந்திய மருத்துவர் ஒருவருக்கு விற்று நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. வாரம்தோறும் சனிக்கிழமைகளில் மாத்திரம் அரை நாள் பொழுது மாத்திரம் அங்கு, அந்த மருத்துவருக்காக வேலை செய்வேன். இளைப்பாறிய மிருக மருத்துவர் என்ற பட்டம்தான் எனக்கு இப்பொழுது பொருந்தும். இன்னமும் விசா விண்ணப்பங்களில் மிருக மருத்துவர் என்றே எழுதுகின்றேன். அவ்வாறே என்னை மிருக மருத்துவராக தொடர்ந்து நினைக்கும் மாடலீனது கதையிது.
பழக்க தோசம் விடாது அல்லவா? இன்னமும் எனது மிருக மருத்துவ நிலையத்துக்கு அருகே உள்ள சுப்பர் மார்க்கட், தபால் அலுவலகம், வங்கி, கஃபே என்பனவற்றைத் தொடர்ந்தும் எனது தேவைகளுக்குப் பாவிக்கிறேன். வீடுமாறி பல கிலோமீட்டர்கள் தூரத்திலிருந்தாலும், முன்னர் சென்று வந்த வங்கி அல்லது கஃபேயிலிருந்து என்னையறியாமல் எனது பழைய மிருக மருத்துவ நிலையத்தை நோக்கி எனது கார், ஊர் தண்ணீர் வண்டி மாடாக சென்று திரும்பும். அவ்வாறு செல்லும்போது, சில நாட்கள் அந்த மருத்துவ நிலையத்தில் தற்போது பணியாற்றுபவர்களுடன் சில நிமிடங்கள் பேசிவிட்டு வருவேன். கால் நூற்றாண்டு காலம் காலலைந்து, உழைத்து, உணவுண்டு, சுவாசித்து, உயிர் வாழ்ந்த இடம்.
மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் இந்த பழக்க தோசம் உள்ளது.
அந்த வேலைத் தளத்துக்கு அருகாமையில் உள்ள சுப்பர் மார்க்கட்டில் அவசரமாக எனது நாய்க்கு உணவைத் தேடி ஒவ்வொரு செல்ஃபாக அலைந்து கொண்டிருந்தேன். கொவிட் காலத்திலிருந்து வழக்கமாக ஒன்லைனில் வாங்குவது வழக்கம். இம்முறை வரவிருந்த பொதி தாமதமாகிவிட்டது.
அது ஒரு வியாழக்கிழமை மதியம். எப்பொழுதும் இந்த நாள் பலருக்கும் முக்கியமானது. காரணம்: அன்று அவுஸ்திரேலியாவில் ஓய்வூதிய நாள். கையில் அல்லது ஏ.டி.எம் கார்டில் பணம் தவழும் நாள். கஃபேக்கள், சுப்பர் மார்க்கட்டுகள் திருவிழாக்கோலமாகக் களைகட்டும். முக்கியமாக நரைத்த தலை மனிதர்கள் தேனீக்களாக மாறும் நாள்.
சரியான உணவு எனக் கை வைத்து எடுக்கும்போது எனதருகே ஒரு பெண்ணின் குரல் கேட்டது. “எனது லைலாவை கருணைக் கொலை செய்ய யோசிக்கிறேன், நோயல்.“
ஆச்சரியத்துடன் திரும்பியபோது அருகில் மாடலீன் சிரித்தபடி நின்றாள்.
அவளது சிரிப்பு குழந்தையின் சிரிப்பாக மனிதர்களை வலையில் சிக்க வைக்கும் கண்ணி போன்றது. ஆனால், இயற்கையின் சதியால் அவளுக்கு ஒரு கை முழங்கைக்குக் கீழ் இல்லை. கொஞ்சம் பருமனான இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க பெண். அத்துடன் அவுஸ்திரேலியா அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான பண உதவியில் இருப்பவள்.
அவளது பூடில் இன நாயான லைலாவுக்கு பன்னிரெண்டு வயது. கோட்டிசோன் என்ற ஹோமோன் அதிகமாகச் சுரக்கும் வியாதியால் ஒவ்வொரு நாளும் அதற்கு மாத்திரை வேண்டும். அத்துடன் அதன் உடல் நிறையை குறைக்கும் விசேட உணவும் கொடுக்கவேண்டும்.
வசதியானவர்களுக்கே இந்த மருந்தும் உணவும் தொடர்ந்து விலைகொடுத்து வாங்கும்போது கையைக் கடிக்கும். அரசின் உதவிப் பணத்தில் வாழும் ஒருவருக்கு அது முடியாத காரியம் என்பது தெரியும். ஆனால், சிகிச்சை செய்யும்போது அவர்களுக்கு அது கட்டுப்படியாகுமா, இல்லையா என்பதை மருத்துவர்களான நாங்கள் பார்க்க முடியாது. உதவிப் பணத்தில் இருப்பவர்களையும் பெரிய ரியல் எஸ்ரேட் முதலாளியாக இருப்பவரையும் ஒரே மாதிரியாகவே பார்ப்பதே எமது அறம்.
“மாடலீன், இதுபற்றி நீயே முடிவெடுக்க வேண்டும். நாங்கள் தீர்மானிக்க முடியாது. ஆனால், எனது தனிப்பட்ட கருத்து என்னவென்றால், 12 வயதாகிய லைலாவை கடந்த இரண்டு வருடங்களாக நீ பராமரித்ததே பெரிய விடயம். மற்றவர்களால் அவ்வாறு செய்திருக்க முடியாது. யோசித்து முடிவெடு” என்றேன்.
என்னைச் சிறிது நேரம் தனது அகல் விழிகளால் கண் கொட்டாது பார்த்து விட்டு விடைபெற்றாள்.
அழகான பெண். அநியாயத்துக்கு அவள் கை ஊனமாகிவிட்டது என மீண்டும் நினைத்துக்கொண்டேன்.
இலங்கையில் வட மத்திய பகுதியான மதவாச்சியில் முன்னர் அரச மிருக மருத்துவராக நான் இருந்த காலத்தில் வெள்ளிக்கிழமைகளில் மாலையில் யாழ்ப்பாணத்திலிருந்த எமது வீடு செல்வதற்காக, மன்னார் பாதையிலிருந்த பஸ் நிலையத்திற்கு எனது மருத்துவ சிகிச்சை நிலையத்திலிருந்து கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் வெயிலில் நடந்து வருவேன். அங்கு பஸ்ஸை எதிர்பார்த்தவாறு நிற்கும்போது சிலர் அங்கே அவசரமாக வந்து,”மாத்தையா, புழுவுக்கு மருந்துவேண்டும்” எனக் கேட்பார்கள். பெரும்பாலானவர்கள் சிங்கள விவசாயிகள். சிரித்துக்கொண்டே எந்தப் பதிலும் சொல்லாது அவர்களது பஸ் சீட்டில் எழுதிக் கொடுப்பேன்
ஒரு நாள் நான் வவுனியா போகும் பஸ்சில் ஏறி சீட்டில் அமர்ந்துவிட்டேன். பஸ்ஸும் புறப்படத் தயார். அப்பொழுது பஸ் யன்னல் ஊடாக ஒருவர் மருந்து கேட்டார். என்னிடம் பேனா இல்லை அவரிடமும் இல்லை. பக்கத்திலிருந்த பெண்ணிடம் கடன்வாங்கி அப்போதும் எழுதிக் கொடுத்தேன்.
அவுஸ்திரேலியாவில் அப்படி எதுவும் எனக்கு நடப்பதில்லை. ஆனால், எனது மருத்துவரான மனைவிக்கு இவ்வாறு நடக்கும். திருமண வைபவம் மற்றும் பொது நிகழ்வுகளில் பலர் கேட்பதைக் கவனித்துள்ளேன். மருத்துவத் தொழிலில் இது தவிர்க்க முடியாதது. ஒரே ஒரு சங்கடம் என்னவென்றால், நான் ஆசனத்திலிருந்து எழும்பினால் மனைவியின் பக்கத்து இருக்கையில் எவராவது அமர்ந்துவிடுவாரகள்.
அவுஸ்திரேலியாவில் மாடலீன் மட்டும் என்னை எங்கே கண்டாலும் அவ்வாறு என்னைக் கேட்பதற்குக் காரணம் சிறுமியாகவே அவளை எனக்குத் தெரியும். மாடலீனது தாய், எலிசபெத் பல நாய்களை வைத்திருந்தவர்.
எலிசபெத் எங்கள் மருத்துவ நிலையத்திற்கு அருகில் இருந்தவர். ஏதும் தேவைக்கு வந்தால், இலகுவில் திரும்பிப் போவது கிடையாது. தொடர்ந்து பெய்யும் மார்கழி மழைபோல் எனது நேர்சான ஷரனுடன் பேசியபடியிருப்பார். நான் சிறிது நேரத்தில் உள்ளே போய்விடுவேன். அப்பொழுது, தீபாவளி காலத்தில் புடவைக் கடைகளின் கண்ணாடி அலுமாரிகளிலிருந்து வண்ணம் வண்ணமாக சேலைகள் வெளியே வருவதுபோல் எலிசபெத்தின் குடும்ப விவகாரங்கள் வெளியே வந்து விழும். எனது நேர்ஸ் ஷரனும் மெதுவாக ஒவ்வொன்றையும் வெளியே எடுத்துவிடுவார்.
அவற்றில் சில: எலிசபெத்தின் தந்தை ஒரு புகழ் பெற்ற மருத்துவர். ஆனால், எலிசபெத் அம்புலன்ஸ் சாரதியாக காலம் முழுவதும் வேலை செய்து இளைப்பாறியவர். கணவர் ஏதோ விபத்தில் இறந்துவிட்டார். மகனொருவனும் மாடலீனும் அவரது இரு பிள்ளைகள். இவற்றைத் தவிர அம்புலன்சில் வேலை செய்த காலத்தில் அவர் காப்பாற்றிய உயிர்கள், காப்பாற்ற முடியாதவர்கள் என பல கதைகளை சொல்வார். தனது உயிரையும் மற்றவர்கள் உயிரையும் காப்பாற்ற ஷகரஸட் (Shahrazad) சொன்ன ஆயிரத்துதொரு அரேபியக் கதைகளாக அவை வெளிவரும்.
எலிசபெத்திடம் கடைசியாக இரண்டு நாய்கள் இருந்தன. ஒன்று லைலா என்ற பூடில் மற்றையது லில்லி என்ற பப்பலோன் இனத்து சிறிய பிரான்சிய நாய். ஆரம்பத்திலே அவை சாதாரணமானதாக இருந்தவை. ஆனால், லைலா என்ற பூடிலுக்கு சாதாரண நாய்களின் உணவு ஒத்துப் போகாது. வயிற்றுப்போக்கு வந்துவிட்டது. பல நாள் சிகிச்சையின் பின்னர் அதற்கு உணவு ஒவ்வாமை எனக் கண்டு பிடித்தேன். இறுதியில் விசேடமான உணவு வரவழைத்துக் கொடுத்தோம். எலிசபெத் பல வருடங்களாக அதன் உணவுக்காக எங்களிடம் வருவதும், ஆயிரத்தொரு கதை சொல்வதுமாக இருந்தது.
ஒரு நாள், எலிசபெத்திற்கு மூளையில் புற்றுநோய் வந்து மருத்துவமனையில் இருப்பதாக எனது நேர்ஸ் சொன்னாள். அறுபது வயதான எலிசபெத்திடம் நாங்கள் இதை எதிர்பார்க்கவிலலை.
எலிசபெத் இறந்தால், அவளது நாய்களை மகள் மாடலீனால் வளர்க்க முடியாது என அப்பொழுது நான் நினைத்தேன். ஏதாவது ஒரு புதிய குடும்பத்தை அவளது நாய்களுக்கு நாங்கள் ஒழுங்கு பண்ணவேண்டும் என ஒரு பொறுப்பை எங்களுக்குள் நாம் எடுத்துக்கொண்டோம் .
அக்காலத்தில் எங்களுக்குத் தெரிந்த வயதான இலங்கைப் பெண் தனது நாயைத் தொலைத்ததாக அழுதபடியிருந்தார். அவருக்கு ஆறுதல் கூறி, எங்களிடமிருந்து நல்ல செய்தியை எதிர்பார்ப்பீர்கள் எனச் சொல்லியனுப்யிருந்தோம்.
சில நாட்களில் மாடலீன் வந்து, “எங்கள் அம்மாவின் நாய்களுக்கு புதிய இடம் பார்க்க முடியுமா?” எனக் கேட்டாள். அதை நாம் இலங்கைப் பெண்ணிடம் கூற, அவர் மிகவும் சந்தோசமாக சம்மதித்தார்.
எலிசபெத் சிலநாட்களில் எங்கள் மருத்துவ நிலயத்திற்கு வந்தார். ‘‘தனது மூளையிலுள்ள கான்சரை வெட்டி எடுத்துவிட்டார்கள். அது கிளையோபிளாஸ்ரோமா (Glioblastoma). இந்த வகையில் பத்துக்கு ஒருவர் குணமடைவார்கள் என்பதால் எனக்கு நம்பிக்கை உள்ளது. எனக்கு ஆறு மாதங்கள் தப்பினால் குணமாகிவிட்டது என அர்த்தம் என்றார்கள் இப்போதைக்குத் தலையலங்காரத்துக்குப் பணம் செலவழிக்க வேண்டியதில்லை’’ எனத் தலை மயிர்களை தொலைந்த நிலையில் எலிசெபத் சொன்னார். அவரது தன்னம்பிக்கை எங்களுக்கு ஆச்சரியத்தையும் சந்தோசத்தையும் கொடுத்தது.
அப்பொழுது நாங்கள், அவரது நாய்களுக்கு ஒரு புதிய இடம் பார்த்திருப்பதாகவும் சொன்னபோது மகிழ்ச்சியடைந்தார். மாடலீனால் ஒரு நாயை மட்டும் பார்க்க முடியும். அந்த நாயையும் நீங்கள் கவனித்துக் கொள்ளுங்கள் எனக் கேட்டிருந்தார்.
இது நடந்து சில மாதங்களில் எலிசபெத்திற்கு வலிப்பு வந்து அம்புலன்சில் கொண்டு சென்றபோது, இறந்துவிட்டதாக எங்களுக்கு தகவல் வந்தது. அம்புலன்சில் தான் பலரைக் காப்பாற்றிய விடயத்தை ஆயிரத்தொரு அரேபியக் கதைகளாக எங்களுக்குச் சொல்லிய எலிசபெத் தனது இறுதிக் காலத்தில் அம்புலன்சில் உயிரைவிட்டுள்ளார் என எங்களுக்குள் பேசிக்கொண்டோம்.
எலிசபெத்திற்கான இறுதி அஞ்சலியாக மரணச்சடங்கிற்கு சிவப்பு ரோஜா மலர் கொத்து அனுப்பினோம்.
மாடலீன் ஒரு நாயை தான் வளர்ப்பதாக சொன்னதால், மற்றைய நாயை அந்த இலங்கை பெண்மணியிடம் ஒப்படைத்தோம். பல காலத்தில் எலிசபெத்திற்கு கொடுத்த வாக்குறுதிப்படி லைலாவினதும் லில்லியினதும் மருத்துவ விடயங்களை பல முறை விசேட சலுகையில் செய்தோம்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு மாடலீனது நாய்க்கு கோட்டிசோன் அதிகமாகும் நோய் வந்துவிட்டது. அக்காலத்தில் நான் எனது வேலையை விட்டதுடன், மருத்துவ நிலையத்தை விற்றுவிட்டேன்.
எலிசபெத் கேட்டுக்கொண்டதற்கிணங்க மாடலீனியை பொறுத்தவரை எங்கும் எப்போதும் தனது லைலாக்கான கருத்துகளைக் கேட்பதற்கான உரிமையைக் கொடுத்துள்ளேன். ஒரு மிருக வைத்தியர் அரசியல்வாதிபோல் வாக்குறுதியை மீற முடியாது என்பதால்.