மின் கட்டணத்தை உயர்த்தப் போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, இந்த விலையேற்றத்திற்கான காரணங்களை விளக்கினார். அதன் முக்கிய தகவல்களின் தொகுப்பு இது:
மின் கட்டணம் உயர்வு எவ்வளவு?
முதல் 100 யூனிட்டுகள் இலவசம். தமிழ்நாட்டில் 42 சதவீதத்தினர் – சுமார் 2.37 கோடி பயனாளிகள் இந்தப் பிரிவுக்கு கீழே வருகிறார்கள்.
100 -200 யூனிட் வரை பயன்படுத்தும் நுகர்வோருக்கு 27.50 ரூபாய் கட்டணம் அதிகரிக்கும். இந்தப் பிரிவுக்கு கீழே சுமார் 63.35 லட்சம் பயனாளிகள் இருக்கிறார்கள்.
201 – 300 யூனிட் வரை ரூ.72.50 அதிகரிக்கும். சுமார் 36.25 லட்சம் பயனாளிகள் இந்தப் பிரிவில் இருக்கிறார்கள்.
301 – 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.147.50 அதிகரிக்கும். இந்தப் பிரிவில் 18.82 லட்சம் பேர் இருக்கிறார்கள்.
401 -500 யூனிட் வரை பயன்படுத்தும் நுகர்வோர் ரூ.297.50 அதிகமாக செலுத்த வேண்டியிருக்கும். 10.56 லட்சம் பேர் இந்தப் பிரிவில் இருக்கிறார்கள்.
500 யூனிட்டுகளுக்கு மேலே பயன்படுத்தும் மேல்தட்டு பயனாளிகளுக்கு கட்டணம் மேலும் உயரும். 600 யூனிட்டுகளுக்கு 155 ரூபாயும் 700 யூனிட்டுகளுக்கு 275 ரூபாயும் 800 யூனிட்டுகளுக்கு 395 ரூபாயும் 900 யூனிட்டுகளுக்கு 565 ரூபாயும் கூடுதலாக வசூலிக்கப்படும். 500 யூனிட்டுகளுக்கு மேலே சென்றால் மாத அடிப்படையில் கணக்கிடப்படும்.
இலவசம் வேண்டாம், முதல் 100 யூனிட்டுகளுக்கும் கட்டணம் செலுத்துகிறேன் என்பவர்கள் அரசுக்கு தெரியப்படுத்தினால் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும்.
ஏன் இந்த திடீர் முடிவு?
தமிழக மின்சாரத் துறையிடம் மத்திய எரிசக்தி அமைச்சகமும் மத்திய ஒழுங்குமுறை ஆணையமும், மின் கட்டணத்தை உயர்த்த வலியுறுத்தி வந்தது. மின் கட்டணங்களை உயர்த்தாவிட்டால், மத்திய அரசின் மானியங்களை நிறுத்திவிடுவோம் என்று கடிதங்களை அனுப்பின. தற்போது வரும் கடிதங்களிலும் காணொலி கூட்டத்தின் வாயிலாகவும் இது மிகவும் அழுத்தம் திருத்தமாக தெரிவிக்கப்பட்டது. மத்திய எரிசக்தி துறை அமைச்சரை நேரில் சென்று சந்தித்து பேசிய போதும் அவர்கள் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. கறாராக மின் கட்டணத்தை உயர்த்த வலியுறுத்தி மட்டுமே வருகின்றனர்.
மத்திய அரசு சார்பில், ரிசர்வ் வங்கிக்கும் தமிழகத்துக்கு கடன் வழங்க வேண்டாம் என்று கடிதம் எழுதப்பட்டது. இதனால் சுமார் 10 ஆயிரம் கோடி மானியத்தை தமிழக மின்சாரத் துறை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மின் உற்பத்தி, மற்றும் கொள்முதல் ஆகியவற்றுக்கு செலவு அதிகரித்து வருவதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டிய நிலையில் தமிழக அரசு உள்ளதால் கட்டணங்கள் உயர்தப்பட்டுள்ளன என்றும் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
மின்சாரத் துறையின் கடன் விவரம்
2011 – 2012 ஆண்டு வரை மின்வாரியத்துக்கு 43 ஆயிரத்து 493 கோடி ரூபாய் கடன் இருந்தது.
கடந்த அதிமுக ஆட்சியில் 2021 -2022 ஆம் ஆண்டு மின்சார வாரியத்தின் கடன் சுமை, 1 லட்சத்து 59 ஆயிரத்து 820 கோடியாக அதிகரித்தது.
மின்சார வாரியம் கடனுக்கு செலுத்தும் ஆண்டு வட்டி, 16 ஆயிரத்து 511 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மின் வாரியத்துக்கு தமிழக அரசு கடந்த ஆண்டு அளித்த மின் மானியம் 9 ஆயிரத்து 48 கோடி 93 லட்சம். இவற்றில் திமுக பொறுப்பேற்ற ஒரு வருட காலத்தில் 2000 கோடி வட்டி சேமிக்கப்பட்டிருக்கிறது.
விலை ஏற்றம் எப்போது செயல்படுத்தப்படும்?
இந்த விலையேற்றம் குறித்து மத்திய ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளின் அடிப்படையில், மத்திய ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு அளித்த தேதி முதல் இந்த விலை ஏற்றம் அமல்படுத்தப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.