அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதற்காக வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் அளிக்க ஜூன் 30ஆம் தேதி வரை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அவகாசம் கேட்டுள்ளதுக்கு, ‘ஒரே கிளிக்கில் பெறக்கூடிய தகவல்களுக்காக ஜூன் 30ஆம் தேதி வரை அவகாசம் கேட்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் இருக்கிறது’ என அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
என்ன நடந்தது?
அரசியல் கட்சிகள், கட்சியை நடத்தவும் நிர்வாக செலவுகளுக்காகவும் பெரும் நிறுவனங்கள் மற்றும் மக்களிடமிருந்து நன்கொடை வாங்குவது பல காலமாக நடந்துக் கொண்டிருப்பதுதான். ஆனால், இதில் யார் எந்தக் கட்சிக்கு எவ்வளவு நன்கொடை கொடுத்தார்கள் என்பதும், எந்தக் கட்சி யார் யாரிடம் இருந்து எவ்வளவு நன்கொடை பெற்றது என்பதும் கணக்கில் வரும். தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் இதை தெரிந்துகொள்ள முடியும்.
இந்நிலையில், 2017இல் மோடி அரசு தேர்தல் பத்திரம் என்னும் புதிய திட்டத்தை அறிவித்தது. இது ஒரு உறுதிமொழிப் பத்திரம் போன்றது. இந்த பத்திரங்கள் ரூ. 1,000 முதல் ரூ. 1 கோடி வரையிலான பல்வேறு மதிப்புகளில் இருக்கும். இதை இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் அல்லது நிறுவனமும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளில் வாங்கலாம். தாங்கள் விரும்பும் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் தனது பெயரைக் குறிப்பிடாமல் இதன் மூலம் நன்கொடை அளிக்கலாம். யார் எந்த கட்சிக்கு எவ்வளவு நன்கொடை கொடுத்தார்கள் என்கிற விவரத்தை தேர்தல் ஆணையம் உட்பட யாரும் தெரிந்துகொள்ள முடியாது.
இந்த திட்டத்தை அறிவித்த போதே எதிர் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் மட்டுமல்லாமல் தேர்தல் ஆணையம், இந்திய ரிசர்வ் வங்கியும் இதனை எதிர்த்தது. எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல், மோடி அரசு இந்தத் திட்டத்தை 2018 ஜனவரி 29ஆம் தேதி சட்டப்பூர்வமாக்கியது.
இதனையடுத்து, இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நான்கு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை ஒன்றாக விசாரித்த
நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட பிரிவு கடந்த மாதம், ‘தேர்தல் பத்திரம் அரசமைப்பிற்கு விரோதமானது’ என்று கூறி ரத்து செய்து தீர்ப்பளித்தது. மேலும், “ஏப்ரல் 12, 2019 முதல் அதுவரை விற்கப்பட்ட பத்திரங்களின் விவரத்தை 2024 மார்ச் 6ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும்’ என்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு உத்தரவிட்டது.
இதன்படி, தேர்தல் பத்திரம் குறித்த விவரங்களை இன்று தேர்தல் ஆணையத்தில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஒப்படைத்திருக்க வேண்டும். இந்நிலையில், நேற்று முன் தினம் (4-3-24), இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) ரிட் மனு தாக்கல் செய்தது.
அதில், ‘தரவுகளை டிகோடிங் செய்வது மற்றும் அதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் அதைப் பூர்த்தி செய்வதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. தேர்தல் பத்திரம் வாங்குபவர்களின் அடையாளத்தை ரகசியமாக வைத்திருக்கும் வகையில் பத்திரங்களின் விற்பனை மற்றும் அதைப் பணமாக்குவது தொடர்பான விரிவான நடைமுறையை வங்கி தயாரித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட 29 கிளைகளில் இவை பின்பற்றப்படுகின்றன.
அதாவது, பத்திரம் வாங்குபவர்களின் அடையாளம் ரகசியமாக இருப்பதை உறுதி செய்வதற்காக, பத்திர வழங்கல் தரவு மற்றும் பத்திரத்தைப் பணமாக்கிய தரவு ஆகிய இரண்டும் தனித்தனி இடங்களில் பராமரிக்கப்படுகின்றன. தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்ட கிளைகளில் அதை வாங்கியவர்களின் தகவல்கள் சீல் செய்யப்பட்ட கவரில் வைக்கப்படும். பின்னர் இந்த சீல் செய்யப்பட்ட கவர்கள் மும்பையில் உள்ள எஸ்பிஐ வங்கியின் பிரதான கிளைக்குக் கொடுக்கப்படும்.
தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை பெற ஒவ்வொரு அரசியல் கட்சியும் அங்கீகரிக்கப்பட்ட 29 கிளைகளில் ஏதேனும் ஒன்றில் கணக்கு வைத்திருக்க வேண்டும். இந்தக் கணக்கில் மட்டுமே அந்தக் கட்சி பெற்ற தேர்தல் பத்திரங்களை டெபாசிட் செய்து பணமாக்க முடியும். பணமாக்கலின்போது, அசல் பத்திரம், பே-இன் ஸ்லிப் ஆகியவை சீல் செய்யப்பட்ட கவரில் மும்பையில் உள்ள எஸ்பிஐ கிளைக்கு அனுப்பப்படும்.
இங்ஙனம், இரண்டு தகவல் தொகுப்புகளும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் தனித்தனியாகச் சேமிக்கப்பட்டுள்ளன. இப்போது அவற்றைப் பொருத்துவது, அதிக நேரம் தேவைப்படும் பணியாக இருக்கும்.
பத்திரங்களை யார் வாங்கினார்கள் என்பது பற்றிய தகவலை வழங்க ஒவ்வொரு பத்திரத்தின் வெளியீட்டு தேதியுடன் நன்கொடையாளர் வாங்கிய தேதியைப் பொருத்த வேண்டும். இரண்டு வெவ்வேறு தரவுத் தொகுப்புகள் இருப்பதால் நாங்கள் 44,434 செட் தகவல்களை டிகோட் செய்ய வேண்டும், பொருத்திப் பார்த்து அவற்றை ஒப்பிட வேண்டும். எனவே, தீர்ப்பில் நிர்ணயம் செய்யப்பட்ட மூன்று வார கால அவகாசம், முழு செயல்முறையையும் முடிக்கப் போதுமானதாக இருக்காது. மேலும் உத்தரவைக் கடைப்பிடிக்க எங்களுக்குக் கூடுதல் அவகாசம் வழங்கப்பட வேண்டும்” என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
எதிர்கட்சிகள் விமர்சனம்
ஜூன் மாதம் வரை கால அவகாசம் கேட்டு எஸ்பிஐ தாக்கல் செய்த இந்த மனுவை எதிர்கட்சிகள் விமர்சித்துள்ளன. “மக்களவை தேர்தலைக் கருத்தில் கொண்டே எஸ்பிஐ இவ்வாறு தெரிவித்துள்ளது; ஏனெனில், ஜூன் மாதம் தேர்தல் முடிந்துவிடும்” என்பது அவர்களது வாதம்.
“22,217 பத்திரங்களை வாங்கியவர்களின் விவரங்களை, பணமாக்கல் விவரங்களுடன் பொருத்த நான்கு மாத கால அவகாசம் தேவை என்று வங்கி கூறுவது முட்டாள்தனமானது. பத்திரங்கள் வாங்கப்பட்டது மற்றும் அதைப் பணமாக்கியது ஆகிய இரண்டு தகவல்களுமே சீல் செய்யப்பட்ட உறைகளில் மும்பை கிளையில் உள்ளன. இந்த விவரம் வங்கி சமர்ப்பித்துள்ள வாக்குமூலத்தில் உள்ளது. எனவே, வங்கி உடனே இந்தத் தகவல்களை ஏன் வெளியிட முடியாது?” என்று ஆர்டிஐ ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
“நன்கொடையாளர்களின் தகவல்களைத் தெரிவிக்க எஸ்பிஐ, தேர்தலுக்குப் பிறகு வரை கால அவகாசம் கேட்பது, தேர்தலுக்கு முன்பு வரை மோடியின் உண்மையான முகத்தை மறைக்கும் கடைசி முயற்சி. நன்கொடை வியாபாரத்தை மறைக்க நரேந்திர மோடி தனது முழு பலத்தையும் பயன்படுத்தியுள்ளார். ஒரே கிளிக்கில் பெறக்கூடிய தகவல்களுக்காக ஜூன் 30ஆம் தேதி வரை அவகாசம் கேட்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் இருக்கிறது. நாட்டின் ஒவ்வொரு சுதந்திர அமைப்பும் ‘மோதானி குடும்பமாக’ மாறி அவரது ஊழலை மறைக்க முயல்கின்றன.
தேர்தல் பத்திரங்கள் குறித்த உண்மையைத் தெரிந்துகொள்வது நாட்டு மக்களின் உரிமை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ள நிலையில் இந்தத் தகவலை தேர்தலுக்கு முன் பகிரங்கப்படுத்தக் கூடாது என்று எஸ்பிஐ ஏன் விரும்புகிறது?” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
எஸ்பிஐயின் மனு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள சிபிஐஎம் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி, “இது நீதியைக் கேலி செய்வதாகும். மக்களவை தேர்தலில் பாஜகவையும் மோடியையும் காப்பாற்றவே எஸ்.பி.ஐ கூடுதல் காலஅவகாசம் கேட்கிறதா?” என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“எதிர்பார்த்தபடியே மோடி அரசு எஸ்பிஐ மூலம் மனு தாக்கல் செய்து தேர்தல் பத்திரம் வாங்குவோர் குறித்த தகவல்களை வெளியிட தேர்தல் முடியும் வரை அவகாசம் கோரியுள்ளது. இந்தத் தகவல் இப்போது வெளிவந்தால் லஞ்சம் கொடுத்த பலர் பற்றியும், அவர்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகளின் விவரங்களும் அம்பலமாகும்” என்ரு உச்ச நீதிமன்றத்தின் பிரபல மற்றும் மூத்த வழக்கறிஞரான பிரசாந்த் பூஷண் கூறியுள்ளார்.
வங்கித்துறையில் பணியாற்றியவரும் தமிழ்நாடு அமைச்சருமான பழனிவேல் தியாகராஜன், ‘தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியவர்கள் தரவுகளை சேகரிக்க 2 நிமிடங்கள் கூட ஆகாது. அதற்கு 4 மாதம் தேவை என SBI கால அவகாசம் கோரியுள்ளது மிகவும் கேவலமானது. தரவுகளை நாளைக்கே சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டாலும், அதனை வழங்கும் திறனை SBI வங்கி கொண்டிருக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் வங்கி தொழிலிலேயே இருக்கக் கூடாது. 1.5 கோடி மதிப்புள்ள சிஸ்டங்களை நிறுவிய பிறகு, 3 வாரங்களில் நன்கொடையாளர்கள் மற்றும் பெறுநர்களின் பட்டியலை SBI உருவாக்க முடியாது? SBI க்கு இது வெட்கமற்ற கேலிக்கூத்து… வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது ஒரு தேசத்தின் மிகப்பெரிய வங்கி.. இவ்வளவு ஆழத்தில் மூழ்கியது ஒரு சோகம் அளிக்கிறது” என்று பிடிஆர் தெரிவித்துள்ளார்.