No menu items!

தமிழ்நாட்டுக்கு பூகம்ப அபாயம் – ஏன்? எதற்கு? எப்படி? Dr Elango Explains

தமிழ்நாட்டுக்கு பூகம்ப அபாயம் – ஏன்? எதற்கு? எப்படி? Dr Elango Explains

துருக்கி, சிரியா நாடுகளில் சமீபத்தில் நிகழ்ந்த நிலநடுக்கம் உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்துவரும் நிலையில் அங்கிருந்து தினமும் வரும் செய்திகள், வீடியோக்கள், புகைப்படங்கள் நாடுகளின் எல்லைகளை கடந்து நம் அனைவர் மனதையும் கலங்கச் செய்துள்ளன. இதிலிருந்தே இன்னும் நாம் மீளாத நிலையில் டச்சு ஆராய்ச்சியாளர் ஃபிராங்க் ஹூகர்பீட்ஸ் இந்தியாவுக்கும் நிலநடுக்க ஆபத்து உள்ளது என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இவர் துருக்கி, சிரியா, லெபனான் நிலநடுக்கங்களை மூன்று நாட்களுக்கு முன்னர் கணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகியுள்ளது.

இந்தியாவை விரைவில் நிலநடுக்கம் தாக்குமா? இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை பேராசிரியர் எல். இளங்கோ ’வாவ் தமிழா’ யு டியூப் சேனலுக்கு அளித்த பேட்டி இங்கே.

ஃபிராங்க் ஹூகர்பீட்ஸ் கணித்துள்ளது போல் இந்தியாவை நிலநடுக்கம் தாக்குமா? உங்கள் கணிப்பு என்ன?

இந்தியாவில் மட்டுமல்ல உலகத்தின் பல பகுதிகளில் நிலநடுக்கம் வருவதற்கான வாய்ப்புகள் எப்போதும் உள்ளது. எப்படி என்பதை சொல்கிறேன்.

உலகம் முதலில் ஒரே தட்டாக இருந்தது. பின்னர் அது உடைந்து, விரிவடைந்து, நகர்ந்து இப்போதுள்ளதுபோல் 7 தட்டுகளாக ஆனது. தண்ணீரில் மிதக்கும் தாமரை இலைகள் போல இந்த தட்டுகள் பூமிக்கடியில் இருக்கும் பாறைக் குழம்புகள் மேல் மிதந்து கொண்டிருக்கின்றன.  இந்த நிலத்தட்டுகள் சுமார் 80 கி.மீ. முதல் 120 கி.மீ. வரை தடிமன் கொண்டதாக இருக்கும். இதனடியில் பாறைகள் கொதிக்கும் குழம்பாக இருக்கும். பாறைக் குழம்பின் கொதிநிலை காரணமாக மேலே இருக்கும் நிலத்தட்டுகள் ஒன்றுடன் ஒன்று உராய்வதுடன் நகர்ந்தும் செல்கிறது.

நிலத்தட்டுகள் ஒரு வருடத்திற்கு ஒரு செ.மீ. முதல் சுமார் 13 செ.மீ. வரை நகர்கிறது. இந்த நகர்வு மிகமிக மெதுவாக நிகழ்வதால் நம் கண்ணுக்கு தெரிவதில்லை. ஆனால், பல ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கி பார்க்கும்போது, ஒவ்வொன்றும் பல  ஆயிரம் கிமீ தள்ளி இருந்து, நகர்ந்து, இப்போதுள்ள இடத்துக்கு வந்துள்ளதை பார்க்க முடியும். இப்படி இந்தியா ஒவ்வொரு காலகட்டத்திலும் எங்கே இருந்தது என்பதை கண்டுபிடித்துள்ளோம்.

இப்போது, இந்த நேரத்திலும்கூட இப்படி பூமியில் பல பகுதிகளில் நிலம் நகர்ந்துகொண்டே இருக்கிறது. உதாரணமாக, இந்தியா வடகிழக்கை நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கிறது.  இப்படி நகரும்போது ஏற்படும் நிலத்தட்டுகளின் லேசான உராய்வும்கூட பெரும் நிலநடுக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. புவித்தட்டுகளின் எல்லையில் அமைந்துள்ள இடங்களில்தான் அதிக நில அதிர்வுகள் ஏற்படும். இப்போது துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கும் இதுவே காரணம். நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகள்            புவித்தட்டுகளின் எல்லையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பாவும் ஆசியாவும் இணைந்த நிலப்பரப்புகள் எனினும், 2 கண்டங்களும் தனித்தனி தட்டுகளில் அமைந்துள்ளன. அதிலும் இந்தியா, ஆசிய தட்டில் இல்லாமல் தனி தட்டாகவே அமைந்துள்ளது. எனவேதான் இந்தியா துணைக்கண்டம் என்றழைக்கப்படுகிறது. இந்திய மற்றும் ஆசிய தட்டுகள் தொடர்ந்து வடக்கு நோக்கி நகர்கின்றன. இதில் ஆசிய தட்டை விட இந்திய தட்டு வேகமாக நகர்வதால், இந்திய தட்டு ஆசிய தட்டை மோதி அந்த அழுத்தத்தில் உருவானதே இமயமலைப் பிரதேசம். இமயமலை இன்னும் வளர்ந்து கொண்டிருப்பதன் காரணமும் இது தான். இரு நிலத்தட்டுகளின் அழுத்தத்தால் இமயமலைப் பகுதி வளரும் பொழுது உராயும் பாறைகள் அசைந்து கொடுப்பதால் இப்பகுதி நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்புள்ள பகுதியாக கருதப்படுகிறது.

இந்தியாவில் பல இடங்களில் கருவிகளைப் பொறுத்தி இந்தியத் தட்டு நகர்வின் வேகம் கணிக்கப்படுகிறது. அப்படி பார்த்ததில் இந்தியா வடகிழக்கை நோக்கி ஒரு ஆண்டுக்கு 5 செமீ நகர்வதாக தெரிய வந்துள்ளது. இந்த நகர்வு இந்திய தட்டு முழுவதும் ஒரே மாதிரி இருந்தால் நமக்கு ஆபத்தில்லை. ஆனால், அப்படியில்லாமல் ஒவ்வொரு இடத்திலும் பதிவாகும் வேகம் மாறுபடுகிறது. உதாரணமாக ஹைதராபாத்தில் 5.3 செமீ நகர்ந்திருந்தால் கான்பூரில் 5 செமீதான் நகர்ந்துள்ளது. அப்படியானால் இடையில் எங்கோ நிலம் உள்வாங்கிக் கொண்டிருக்கிறது அல்லது மேலே உயர்ந்துகொண்டிருக்கிறது என்று அர்த்தம். விரிந்திருக்கும் ஒரு பேப்பரை இரண்டு பக்கம் இருந்தும் நெருக்கும்போது பேப்பர் ஆங்காங்கே உயர்ந்தும் தாழ்ந்தும் இருப்பதுபோல் இந்தியத் தட்டில் நடந்துகொண்டிருக்கிறது. எனவே, இந்தியா முழுவதும் நிலநடுக்கம் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

நிலநடுக்கத்துக்கான வாய்ப்புகள் அடிப்படையில் இந்தியாவை 5 பகுதிகளாக பிரித்துள்ளோம். இதில் நிலநடுக்கத்துக்கு வாய்ப்பு இல்லாத பகுதி என்ற நிலையில் இருந்து தமிழ்நாடு மூன்றாவது நிலைக்கு சென்றுள்ளது. எனவே, தமிழ்நாட்டுக்கும் பூகம்ப அபாயம் உள்ளது.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...