மருத்துவர்கள் கடவுளின் அவதாரம் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகி உள்ளது. இம்முறை இதை நிரூபித்திருப்பவர் பெங்களூருவைச் சேர்ந்த டாக்டர் கோவிந்த் நந்தகுமார். போக்குவரத்து நெரிசலில் அவரது கார் சிக்கிக்கொள்ள 3 கிலோமீட்டர் தூரம் ஓடியே மருத்துவமனைக்குச் சென்று நோயாளிக்கு அறுவைச் சிகிச்சை செய்து காப்பாற்றியுள்ளார்.
போக்குவரத்து நெரிசலுக்கு மிகவும் பெயர் பெற்ற நகரம் பெங்களூரு. நூற்றுக்கணக்கான ஐடி நிறுவனங்கள் இங்கு உள்ளன. லட்சக்கணக்கான ஊழியர்கள் இவற்றில் பணியாற்றுகின்றனர். இவர்களில் பலரும் சொந்தமாக வாகனங்களை வைத்துள்ளதால் பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலுக்கு எப்போதும் குறைவில்லை. அதிலும் ‘பீக் ஹவர்ஸ்’ என்று சொல்லப்படும் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலைப்பற்றி சொல்லவே வேண்டாம்.
இப்பேர்ப்பட்ட பெங்களூரு நகரத்தில் உள்ள மணிபால் மருத்துவமனையில் குடலியல் அறுவைசிகிச்சை மருத்துவராக பணியாற்றி வருகிறார் கோவிந்த் நந்தகுமார். 30 வயதான இவர், குடல் சார்ந்த அறுவைச் சிகிச்சைகளை செய்வதில் வல்லவர்.
சமீபத்தில் ஒருநாள் காலையில் இளம்பெண் ஒருவருக்கு, இவர் லேப்ரோஸ்காப்பி முறையில் பித்தப்பை அறுவைச் சிகிச்சை செய்யவேண்டி இருந்தது. இதற்காக காலையில் வீட்டிலிருந்து கிளம்பியுள்ளார் கோவிந்த் நந்தகுமார்.
சார்ஜாபூர் – மராதள்ளி சாலையில் சென்றபோது இவரது கார் வாகன நெரிசலில் சிக்கிக்கொண்டது. சிறிது நேரம் காத்திருந்தும் கார் நகரவில்லை. போக்குவரத்து நெரிசலும் குறைவதாக இல்லை. கார் கண்ணாடியைத் திறந்து வெளியில் தலையை நீட்டி பார்த்துள்ளார். கண்ணுக்கெட்டிய தூரம்வரை வாகனங்கள் நின்றிருந்தன. இப்படியே காரில் போனால் மருத்துவமனைக்கு செல்ல 2 மணி நேரமாவது ஆகும் என்று தோன்றியது.
அன்று அவர் செய்யவேண்டிய அறுவைசிகிச்சை மிகவும் அவசரமானது. இதில் தாமதம் ஏற்பட்டால் நோயாளியின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்பதால் என்ன செய்வதென்று யோசித்தார். சில வினாடிகளில் காரில் இருந்து இறங்கி ஓடத் தொடங்கினார். தனது கார் நின்றிருந்த இடத்தில் இருந்து மருத்துவமனை வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் ஓடி, 45 நிமிடங்களில் மருத்துவமனையை வந்தடைந்தார். உரிய நேரத்தில் அறுவைசிகிச்சை செய்து நோயாளியையும் காப்பாற்றியிருக்கிறார்.
தனது நோயாளியைக் காப்பாற்ற டாக்டர் அன்று செய்த சாகசம், 2 வாரங்கள் கழித்து இப்போது தெரியவந்துள்ளது. இதற்காக அனைவரும் பாரட்டிக்கொண்டு இருக்க, அமைதியாக அவற்றை ஏற்றுக்கொள்கிறார் டாக்டர் கோவிந்த் நந்தகுமார்.
“எப்போதும் அந்த சாலை வழியாகத்தான் நான் மருத்துவமனைக்கு வருவேன். அன்றைய தினம் அறுவைசிகிச்சைக்காக குறித்த நேரத்திலேயே நான் வீட்டில் இருந்து கிளம்பிவிட்டேன். ஆனால் நடுவழியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டேன். இனியும் காத்திருந்தால் நோயாளியின் உயிருக்கு ஆபத்து என்று கருதியதால் காரை விட்டு இறங்கி ஓடியே மருத்துவமனைக்கு வந்துவிட்டேன். நான் வருவதற்குள் எங்கள் குழு உறுப்பினர்கள் நோயாளிக்கு அனஸ்தீஷியா கொடுத்து, ஆப்ரேஷன் தியேட்டரை தயார் நிலையில் வைத்திருந்தனர். அனைவரின் உதவியாலும் அறுவைசிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது” என்கிறார் கோவிந்த் நந்தகுமார்.