வாவ் தமிழா யூ டியூப் சேனலில் வெளியாகிவரும் ‘புக் டாக்’ தொடரில், தமிழில் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்கள் குறித்து எழுத்தாளர் பா. ராகவன் அளித்த பேட்டியின் தொடர்ச்சி
முதல் பகுதியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
புதுமைப்பித்தன் சிறுகதைகள்
தமிழ் நவீன இலக்கியம் படிக்க விரும்புபவர்கள் தொடங்க வேண்டிய புள்ளி புதுமைப்பித்தன். தமிழில் சிறுகதைகளில் அவர் தொட்ட உயரத்தை அதன் பின்னர் வந்த வேறு யாரும் இன்னும் தொடவில்லை. புதுமைப்பித்தன் சிறுகதைகள் மொத்த தொகுப்பை பல பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளார்கள். மலிவு விலை பதிப்புகள்கூட கிடைக்கும்.
அசோகமித்திரன் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள்
அசோகமித்திரன் சிறுகதைகள், கட்டுரைகள் இரண்டும் முழுத் தொகுப்பு வெளியாகியுள்ளது. அசோகமித்திரன் 2000க்கும் மேற்பட்ட பக்கங்கள் கதையல்லாத விஷயங்களை எழுதியுள்ளார். சினிமா, நாடகம், அயலக எழுத்தாளர் என அவர் தொடாத விஷயம் கிடையாது. 300 முதல் 500 வார்த்தைகளில் எவ்வளவு தகவல்கள்… இண்டர்நெட் இல்லாத அந்த காலத்தில் எங்கே இருந்துதான் இவ்வளவு தகவல்களை அவர் எடுத்திருப்பார் என்று மலைப்பாக உள்ளது. தமிழில் பிரமிப்பூட்டக்கூடிய ‘நான்பிக்ஷன்’ என்றால் அது அசோகமித்திரன் உடையதுதான்.
சுந்தர ராமசாமி சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள்
அசோகமித்திரன் பற்றி சொன்ன அனைத்தும் சுந்தர ராமசாமிக்கும் பொருந்தும். ஓரான் பாமுக், ஹாருகி முரகாமி போன்ற உலகம் கொண்டாடக்கூடிய எழுத்தாளர்கள் எவரையும்விட அசோகமித்தரனையும் சுந்தர ராமசாமியையும் நான் மேலாக சொல்வேன். கற்பனை செய்யமுடியாத உயர் தரம். துரதிஷ்டவசமாக இவர்கள் தமிழில் எழுதினதால் வெளியே தெரியாமல் போய்விட்டார்கள்.
ஏ.கே. செட்டியார், வெ. சாமிநாத சர்மா கட்டுரைகள்
தமிழ் நான்பிக்ஷன் எழுத்துகளில் ஏ.கே. செட்டியார், வெ. சாமிநாத சர்மா இருவர் பங்களிப்பும் மிக முக்கியமானது. ஏ.கே. செட்டியார் படைப்புகள் முழுத் தொகுப்பை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ஆனால்,ம் துரதிஷ்டவசமாக வெ. சாமிநாதசர்மாவின் பல புத்தகங்கள் இப்போது விற்பனையில் இல்லை. இவருடைய மொழி, ஸ்டைல் மிக அற்புதமானது. அசோகமித்திரனுக்கு ஒரு தலைமுறை மூத்தவர். எந்த வளர்ச்சியும் வாய்ப்புகளும் இல்லாத ஒரு காலகட்டத்தில் எங்கே இருந்து இவ்வளவு தகவல்களையும் அவர் எடுத்திருப்பார் என மலைப்புதான் ஏற்படுகிறது. ஒரு வாழ்க்கை வரலாறு நூல் எப்படி எழுதப்பட வேண்டும் என்பதற்கு சாமிநாத சர்மாவின் ‘கார்ல் மார்க்ஸ்’ வாழ்க்கை வரலாறு மிகச் சிறந்த உதாரணம்.
அ. முத்துலிங்கம் கட்டுரைகள் – முழுத் தொகுப்பு
இந்நூலை நற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள். அவசியம் படிக்க வேண்டியது.
ந. பிச்சமூர்த்தி, ஆதவன், வண்ணநிலவன், பூமணி சிறுகதைகள் – முழுத் தொகுப்பு
நம் மொழியின் முன்னோடிகள் இவர்கள் அனைவரும். உலகத்தரத்திற்கு எழுதியவர்கள். ஒரு எழுத்தாளரின் முழுத் தொகுப்பில் ஒரு முழு வாழ்வின் சாரம் இறங்கியிருக்கும். எனவே, இதுபோன்ற முன்னோடி எழுத்தாளர்களின் முழுத் தொகுப்பையும் படிப்பது மிக அவசியம். என் தனிப்பட்ட ரசனையில் அசோகமித்திரன், சுந்தர ராமசாமிக்கு அடுத்த நிலையில் நான் வண்ணநிலவனைத்தான் சொல்வேன்.
சுஜாதாவின் ‘நிழா நிழல்’
சுஜாதாவின் புகழ்பெற்ற நாவல்கள் வரிசையில் இது இருக்காது. அவருடைய தோல்வியடைந்த நாவல்களில் ஒன்றாக சொல்லப்படுவது. ஆனால், எழுத கற்றுக்கொள்பவர்களுக்கு இந்நாவலில் நிறைய இருக்கிறது.
பாலகுமாரனின் ‘இனி இரவு எழுந்திரு’
ஒரு திரில்லர் எப்படி எழுதப்பட வேண்டும் என்பதற்கு அட்டகாசமான ஒரு உதாரணம் இந்த நாவல்.
எடிட்டர் எஸ்.ஏ.பி.
‘குமுதம்’ ஆசிரியர் எஸ்.ஏ.பி. அண்ணாமலை காலமான போது அவரிடம் உதவி ஆசிரியர்களாக இருந்த ரா.கி. ரங்கராஜன், ஜ.ரா. சுந்தரேசன், புனிதன் மூவரும் எழுதிய கட்டுரைகள் தொகுப்பு இந்த நூல். வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தரமான ஜனரஞ்சக எழுத்து எப்படியிருக்கும் என்பதற்கான உதாரணம், தமிழ் இதழியல் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் எப்படி இருந்தது என்கிற சரித்திரம் மறைமுகமாக இந்நூலில் இருக்கிறது.