இயக்குனர் வெங்கட் பிரபு தான் இயக்கி வரும் விஜய் படத்தின் பணிகளுக்கிடையே தனது உடன்பிறப்பு பிரேம் ஜியின் திருமண வேலையையும் சேர்த்து செய்து வருகிறார். விக்ரமாதித்தன் வேதாளம் கதை போல பல காலமாக நீண்டு வந்த பிரேம் ஜியின் திருமணம் வரும் 9ம் தேதி நடபெற இருக்கிறது. இதற்கான திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலான பிறகுதான் இந்த விஷயமே மீடியாக்களுக்கு தெரிய வந்தது. இந்த நிலையில் வெங்கட் பிரபுவிடமிருந்து ஒரு வேண்டுகோள் வந்திருக்கிறது. வழக்கம்போல் இதுவும் தீயாய் பரவி வருகிறது.
அதில் குறிப்பாக வெங்கட் பிரபு கூறியிருப்பதாவது, நீண்ட நாட்களுக்குப் பிறகு எங்கள் குடும்பத்தில் நல்ல நிகழ்வு நடக்க இருக்கிறது. பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் சொப்பன சுந்தரியை இப்ப யார் வெச்சிருக்கிறது என்கிற கேள்வி போல பிரேம் ஜிக்கு எப்ப கல்யாணம் என்ற கேள்விக்கு பதில் வரும் 9ம் தேதி கிடைக்கப்போகிறது. தனக்கு பிடித்த பெண்ணை எங்கள் அம்மாவின் ஆசியுடன் கரம் பிடிக்கப் போகிறார். இது புரியாமல் நண்பர் ஒருவர் பத்திரிகையை இணையத்தில் பரவ விட்டார். மேலும் மணப்பெண் மீடியாவை சேர்ந்தவர் என்று வேறு ஒரு புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்கள். மணப்பெண் மீடியாவை சேர்ந்தவர் இல்லை. திருமணம் முடிந்தவுடன் புகைப்படத்தை அனுப்பி வைக்கிறேன். இருந்த இடத்தில் இருந்தபடியே நீங்கள் வாழ்த்தி அதையும் வைரல் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். என்று குறிப்பிட்டிருக்கிறார்.
திரையுலகினர் திருமணம் என்றால் பத்திரிகையாளர்களுக்குத்தான் முதலில் அழைப்பு வரும். ஆனால் அந்த அழைப்பு எதற்காக தெரியுமா ? தயவு செய்து திருமணத்திற்கு நீங்கள் வர வேண்டாம் என்று சொல்வதற்காக இருக்கும். இது ரஜினி திருமணத்திலிருந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது. ரஜினிகாந்த் லதா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்பதை லதா தரப்பிலேயே மீடியாக்களுக்கு செய்தியை கசிய விட்டார்கள். அன்றைய காலகட்டத்தில் அதிக பட்சமாக 10 பேர்தான் பத்திரிகையாளர்களாக இருந்தார்கள். ஒரு நாள் அவரளையெல்லாம் அழைத்து ரஜினி விருந்து கொடுத்தார். காரணம் சொல்லாமலே ரஜினி அழைத்ததால் பத்திரிகையாளர்களில் ஒருவர் என்ன விஷேசம் என்று கேட்க, எனக்கு நாளைக்கு திருப்பதியில் கல்யாணம். யாரும் வரவேண்டாம் என்று ஷாக் கொடுத்திருக்கிறார். இதை எதிர்பார்க்காத பத்திரிகையாளர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். மீறி வந்தால் என்று ஒருவர் கேட்க, உதைப்பேன் என்று ரஜினி கொஞ்சம் கூட யோசிக்காமல் சொல்லியிருக்கிறார். பிறகு சாரி என்று வருத்தமும் தெரிவித்தார். ஆனால் திருமணம் நடந்த நாளில் ஒரு புகைப்படக்காரர் சென்று போட்டோ எடுக்க முயல கைகலப்பாகி விட்டது.
இன்னொரு சம்பவத்தில்; ரஜினியின் மகள் ஐஸ்வர்யா திருமணத்தின் போது ரசிகர்கள் யாரும் சென்னைக்கு வர வேண்டாம். உங்களுக்கு தனியாக திருமண விருந்து வைக்கிறேன் என்று ரஜினி சொல்லியதும் திரையுலகம் அறிந்ததே.
இதன் பிறகு அதிக எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது சூர்யா – ஜோதிகா திருமணம்தான் இருவரின் காதல் விவகாரங்கள் மீடியாக்கள் அதிகமாக ஊதி பெரிதாக்கி அன்றாடம் தலைப்பு செய்தியாக்கியது. இதனால் சிவகுமார் குடும்பத்தினர் ஊட கங்கள் மீது வருத்தத்தில் இருந்தனர். திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு எல்லோரயும் சந்தித்து நடிகர் சிவகுமார் தயவு செய்து யாரும் திருமணத்திற்கு வராதீர்கள் என்று அழைப்பிதழைக் கொடுத்தார். இதுவும் மீடியாக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனாலும் அவர்கள் திருமண புகைப்படங்களை மீடியாக்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தின.
சில வருடங்களுக்கு முன்பு நயன் தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் அதிக பரபரப்பை ஏற்படுத்தியது. ஈசிஆர் சாலையில் தனியார் ஓட்டலில் திருமணம் நடைபெற்றது. இதற்கு சில நாடக்ளுக்கு முன்பு பத்திரிகையாளர்களை சந்தித்த நயன் தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் அனைவருக்கும் அழைப்பிதழைக் கொடுத்து திருமணத்திற்கு வரவேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். இந்த போக்கு இன்று பிரேம் ஜியின் திருமணம் வரைக்கும் தொடர்ந்து வருகிறது.