வீட்டிலும் ஆபீஸிலும் அதிகம் உழைப்பது ஆண்களா பெண்களா என்பது நீண்ட காலமாக இருந்துவரும் கேள்வி. பெரும்பாலான வீடுகளில் கணவன் – மனைவிக்குள்ளே இதை வைத்துத்தான் சண்டை தொடங்கும். இந்த விவாதத்துக்கு முடிவு கட்டும் வகையில் national representative data (2019-2020) தரவுககள் இதற்கு ஒரு விடையைச் சொல்லியிருக்கிறது.
இந்த தரவுகளின்படி இந்தியாவில் நகர்ப்புறங்களில் 70 சதவீத ஆண்களும், கிராமப்புறங்களில் 78 சதவீத ஆண்களும் வேலைக்குச் செல்கின்றனர். அதே போல் நகர்ப்புறங்களில் 17 சதவீத பெண்களும், கிராமப்புறங்களில் 16 சதவீத பெண்களும் வேலைக்கு செல்கின்றனர். தோராயமாக, நகர்புற ஆண்கள் 8.30 மணி நேரமும், கிராமப்புற ஆண்கள் 7 மணி நேரமும் அலுவலகத்திலோ அல்லது ஆலைகளிலோ வேலை பார்க்கின்றனர். நகர்ப்புற பெண்கள் 6.30 மணி நேரமும், கிராமப்புற பெண்கள் 4.45 மணி நேரமும் அலுவலக பணியில் நேரத்தை செலவிடுகிறார்கள்.
அலுவலக வேலைகளில் வேண்டுமானால் ஆண்களின் பங்கு பெரிதாக இருப்பதாக தெரியலாம். ஆனால் வீட்டு வேலைகளைப் பொறுத்தவரை ஆண்களைவிட அதிகமாக பெண்கள்தான் செய்கிறார்கள். வீட்டு வேலைகளை பொறுத்தவரை, கிராமப்புற பெண்கள் 4.50 மணி நேரமும் நகர்ப்புற பெண்கள் 2.45 மணி நேரமும் அதற்காக செலவு செய்கின்றனர். கிராமப்புற ஆண்கள் 40 நிமிடங்களும், நகர்ப்புற ஆண்கள் 30 நிமிடமும் மட்டுமே செலவு செய்கின்றனர்.
இந்த நேரம் செலவிடுதல் பல காரணங்களுக்காக மாறுபடுகிறது. அதில் முக்கிய காரணம் திருமணம். திருமணமாகாத வேலைக்கு செல்லும் பெண்கள் சராசரியாக 1.30 மணி நேரத்தை வீட்டு வேலைகளுக்கு ஒதுக்குகின்றனர். திருமணத்துக்கு பிறகு இது 5.30 மணி நேரமாக அதிகரிக்கிறது. ஆனால் திருமணமாகாத வேலைக்கு செல்லும் ஆண்கள், 25 நிமிடம் வீட்டு வேலைகளில் செலவு செய்கின்றனர். ஆனால் திருமணமான பின் இது 47 நிமிடங்களாக அதிகரிக்கிறது.
கிராமப்புற பெண்களைத் தவிர அனைவரும் சராசரியாக நாள் ஒன்றுக்கு 1.45 மணி நேரம் ரிலாக்ஸாக இருக்க செலவு செய்கின்றனர். கிராமப்புற பெண்களுக்கு ரிலாக்ஸ் செய்ய 1.10 மணி நேரம் மட்டுமே கிடைக்கிறது.
சுய பராமரிப்புக்காகவும், உறக்கத்துக்காகவும் ஆண்கள் சுமார் 12 மணி நேரம் செலவு செய்கின்றனர். பெண்களை பொருத்தவரை நகர்ப்புறத்தில் 11 மணி நேரமும், கிராமப்புறத்தில் 11.50 மணி நேரமும் செலவு செய்கின்றனர்.