இலங்கையில் ஓவ்வொரு நாளும் நெருக்கடி கூடிக்கொண்டே போகிறது. மக்கள் வெகுண்டெழுந்து ‘கோ ஹோம் கோத்தா’(Go Home Gotha) போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களைவிட நிலைமை இப்போது மிக மோசம். வரும் நாட்களில் உணவுப் பஞ்சம் ஏற்படும் அளவு; பணம் இருந்தாலும் வாங்க பொருட்கள் இருக்காது எனும் நிலை வரும் என்று ஆட்சியாளர்களே எச்சரிக்கிறார்கள். ஏன் இலங்கை இப்படியொரு நெருக்கடிக்குள்ளானது? இப்போது அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது? வரும் நாட்கள் எப்படி இருக்கும்? இந்த மினி தொடரில் விளக்குகிறார் ஈழத் தமிழ் மூத்த பத்திரிகையாளர் கருணாகரன்…
இலங்கையின் தொடரும் துயரம், அது இனவாதத்தில் மூழ்கிக் கிடப்பது. ஒருவரையொருவர் குற்றம் சாட்டினாலும் இதற்கு எந்தச் சமூகத்தினரும் விலக்கல்ல. இனவாதத்தில் மூழ்கிக் கிடப்பதால், அரசியல் தவறுகளைக் காணும் திறன் குறைந்துவிடுகிறது. அல்லது அவற்றைக் காணமுடியாமல் போகிறது. தவறுகளை யாரும் சுட்டிக் காட்டினாலும் அது இனவாதத்தின் முன்னே எடுபடாது.
“நீ எதைச் சொல்கிறாய் என்பதை விட எந்தத் தரப்பின் ஆளாக நின்று சொல்கிறாய்?” என்றே பார்க்கிறார்கள். இதனால் எப்போதும் எதிர்த் தரப்பினரின் தவறுகள் மட்டுமே கண்ணுக்கும் கருத்துக்கும் புலப்படுகின்றன. கூடவே எதிர்த் தரப்பை எப்போதும் பகை நிலையில் வைத்துக் கொள்ளும் மன நிலையும் உருவாகி விடுகிறது. யுத்தம் உருவாகியதும் அது நீடித்ததும் இதனால்தான்.
யுத்தம் முடிந்த பிறகும் அது உருவாக்கிய பகை மனநிலை மாறவேயில்லை. ஒரு சிறிய தேசம் பெரிய யுத்தத்தில் சிக்குண்டிருக்க வேண்டியிருந்ததற்குப் பின்னால் உள்ள உளநிலை இது என்பதை இங்கே நினைவிற் கொண்டு பார்க்க வேண்டும். மட்டுமல்ல, இந்த இனவாதம் உருவாக்கிய பகையினால்தான் இந்திய அமைதிப்படை கூட இலங்கைக்கு வரவேண்டியிருந்தது.
இதையெல்லாம் தமக்கான வாய்ப்பாக அரசியற் சக்திகள் பயன்படுத்திக் கொண்டன. ஏட்டிக்குப் போட்டியாக இனவாதத்தை வளர்த்து அதிலேயே ஒவ்வொரு தரப்பும் குளிர்ந்தன. இன்னும் குளிர் காய்கின்றன.
இலங்கையில் உள்ள கட்சிகளில் பலவும் இன(வாத)க் கட்சிகள் என்பதை அவதானிக்கலாம். ஒவ்வொரு இனத்துக்கும் என அந்தந்த இனத்தை அடையாளப்படுத்தும் கட்சிகள் உருவாகியுள்ளன. தமிழ்த் தேசியக் கட்சிகள், மலையகக் கட்சிகள், சிங்களக் கட்சிகள், முஸ்லிம் கட்சிகள் என; அந்தந்த இன மக்கள் பெரும்பாலும் தமது இனம்சார்ந்த கட்சிகளுக்கே வாக்களிக்கின்றனர். ஆகவே, இந்தத் தன்மையைத் தமக்குச் சார்பாக – தமக்கு ஏற்ற விதத்தில் எடுத்துக் கொண்டனர் ராஜபக்சக்களும்.
விசேடமாக, விடுதலைப் புலிகளுடனான போரில் இலங்கை அரசு பெற்ற வெற்றியைத் தமது வெற்றியாகச் சிங்களச் சமூகத்திற்குக் காட்டினர் ராஜபக்சவினர். சிங்கள மக்களும் அப்படித்தான் நம்பினார்கள். அரசின் வெற்றி என்பதற்கு அப்பால், அது ராஜபக்சக்கள் பெற்ற வெற்றி என. இதற்கொரு வலுவான காரணமும் இருந்தது. ஏற்கனவே ஆட்சியிலிருந்த ஜே.ஆர். ஜெயவர்த்தன, பிரேமதாச, சந்திரிகா குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க, டீ.பி. விஜயதுங்க போன்றோர் புலிகளுக்கு எதிராகப் போரை முன்னெடுத்திருந்தாலும் புலிகள் தோற்கடிக்கப்பட்டது ராஜபக்சக்களின் காலத்தில்தான். இதொரு பெரிய சாதனையாகச் சிங்கள மக்களால் உணரப்பட்டது.
புலிகள் தோற்கடிக்கப்பட்ட பிறகு – 30 ஆண்டுகளுக்குப் பின்பு – சிங்கள மக்கள் முதற்தடவையாக நாடு முழுவதற்கும் பயணித்தனர். தினமும் பல ஆயிரக்கணக்கானோர் சுற்றுலாப் பயணிகளாக உள்நாட்டில் பயணிக்கத் தொடங்கினர்; குறிப்பாக வடக்குக் கிழக்குப் பகுதிகளுக்கு. இந்தப் பிரதேசங்கள் முன்னர் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது அவர்களால் வர முடியாதிருந்தது.இப்பொழுது நாட்டின் எந்தப் பகுதிக்கும் எவரும் எப்போதும் செல்ல முடியும் என்ற சூழலை உருவாக்கியதால் நாட்டை முழுமையாக மீட்டெடுத்த வீரர்கள் என்ற உணர்வு ராஜபக்சக்களைக் குறித்து சிங்கள மக்களிடம் உருவாகியது.
இதற்கேற்ப சிங்கள மக்கள் நாடு முழுவதையும் சுற்றிப் பார்ப்பதற்கான ஏற்பாடுகளை ராஜபக்சக்கள் செய்தனர். அந்தக் காலப்பகுதியில் ராஜபக்சக்கள் நன்மையோ தீமையோ எதைச் செய்தாலும் அதைச் சிங்கள மக்கள் முழுதாக ஏற்றனர்.
இதை மேலும் வலுப்படுத்துவதாக , யுத்த முடிவுக்குப் பிறகு நாட்டின் அபிவிருத்திக்கும் புனரமைப்புக்கும் என சர்வதேச சமூகத்தினாலும் வழங்கப்பட்ட உதவிகளும் பெருமளவில் ராஜபக்சக்களின் கைகளுக்கு வந்தன. அவற்றை வைத்துக்கொண்டு மீளெழுச்சி, விரைவான அபிவிருத்தி எனக் கவர்ச்சிகரமான திட்டங்களை வரைந்து அவற்றை முன்னெடுத்தனர். மேலதிகமாக சீனா தொடக்கம் இந்தியா வரை வழங்கிய நன்கொடைகள், உதவித் திட்டங்கள், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவற்றில் பெறப்பட்ட கடனுதவி உள்பட பல இடங்களிலும் பணத்தைப் பெற்றனர். இது ராஜபக்சக்களின் கைகளில் நிதிப்பெருக்கத்தை உண்டாக்கியது. இங்கேதான் அவர்களுடைய ஊழலும் தொடங்கியது.
மெல்ல மெல்ல சிறிய அளவில் ரகசியமாக ஆரம்பிக்கப்பட்ட ஊழலானது, பின்னர் பகிரங்கமாகவே நடக்கத் தொடங்கியது. ராஜபக்சக்களில் ஒருவரான பசில் ராஜபக்ச, ‘மிஸ்டர் 10 %’ என்று வெளிவெளியாக அழைக்கப்பட்டார். எந்த நிதித்திட்டத்திலும் அவருக்குப் பத்து வீதம் கொடுக்கப்பட வேண்டும் என்பது எழுதாத விதியாகியது. அப்பொழுது பசில் ராஜபக்ச (கோத்தாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச ஆகியோரின் சகோதரரே இந்த பசில் ராஜபக்ச) பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்தார். அனைத்து நிதிக் கையாள்கையும் நிதித் திட்டமிடல்களும் பசிலின் காலடியிலேயே நடந்தன. இதைக் குறித்து அப்பொழுது ஊடகங்களும் எதிர்க் கட்சிகளும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தபோதும் அது சிங்கள மக்களிடத்திலே பெரிதாக எடுபடவில்லை.
உண்மையான வீரர்கள் மீது சுமத்தப்படும் போலிக் குற்றச்சாட்டு, பொய் விமர்சனம் என்ற எண்ணமே சிங்கள மக்களிடம் இருந்தது. இது உண்மைதான் என்று சிலர் நம்பினாலும் அதனால் என்ன, அவர்கள் புலிகளிடமிருந்த நாட்டைக் காப்பாற்றியிருக்கிறார்கள். அவர்கள் இந்த மாதிரிச் செய்யும் சிறு பிழைகளைப் பொறுத்துக் கொள்வோம் என்ற மனநிலையில் இருந்தனர். இதனால் எதிர்க்கட்சிகளாலும் எதையும் செய்ய முடியவில்லை.
அந்தளவுக்குப் போர் வெற்றி பலருடைய கண்களையும் மறைத்திருந்தது. ராஜபக்சக்களும் இந்த விமர்சனங்கள், குற்றச்சாட்டுகளைக் குறித்துக் கவலைப்படவில்லை. சனங்கள் கவனிக்காத போது அவர்கள் எதற்காகப் பதற்றமடைய வேண்டும்?
மீளெழுச்சி, விரைவான அபிவிருத்தி என்ற திட்டங்களின் வழியே மக்கள் மயங்கிப் போகும் அளவுக்கு வீதிகள் புனரமைக்கப்பட்டன. வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன. போர் நடந்த பகுதிகளில் கூட ஒரு ஓலைக் குடிசையைக் காண முடியாது என்ற அளவில் அத்தனை வீடுகளும் புதிதாகக் கட்டப்பட்டன. அல்லது புனரமைப்பு – மீளமைப்பு – செய்யப்பட்டன. நாடு முழுவதற்கும் மின்சாரம் என்ற அறிவிப்பின் கீழே துரிதகதியில் மின்னிணைப்புச் செய்யப்பட்டது.
வடக்குக் கிழக்கில் உள்ளோருக்கு விசேட ஏற்பாடாக வீடுகளுக்கான அனைத்து மின்னிணைப்புகளும் இலவசமாக வழங்கப்பட்டது. மருத்துவமனைகள், பாடசாலைகள் எல்லாம் வளமாக்கப்பட்டது. இது ராஜபக்சக்களின் மீதான அபிமானத்தை – மதிப்பை – கூட்டியது. ராஜபக்சக்கள் போரில் மட்டுமல்ல, அபிவிருத்தியிலும் மிகப் பெரிய வீரர்கள், சாதனையாளர்கள் என்றே மக்கள் நம்பினர்.
நடந்த போரில் ராஜபக்சக்களின் குற்றங்களைக் குறித்து யாருக்கும் கவலைகள் இருக்கவில்லை. தமிழ்த் தரப்பில் இதைப்பற்றிப் பேசப்பட்டபோது, இதொரு சர்வதேசச் சதி, தேவையில்லாத பிரச்சினை என்றே சிங்களப் பெரும்பான்மையிடத்தில் பேசப்பட்டது. மறுவளத்தில் சிங்கள மக்களைத் திருப்திப்படுத்தும் வகையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வை முன்வைப்பதை ராஜபக்சக்கள் தவிர்த்தனர்.
போருக்குப் பிந்திய சூழலில் தமிழ் பேசுகின்ற மக்களுக்கான உரிமைகளைப் பேணுவதிலும் அவர்களைப் பாதுகாப்பதிலும் பின்னின்றனர். இது சிங்கள மக்களையும் பௌத்த மதகுருக்களையும் மகிழ்வித்தது. இதனைப் பயன்படுத்திச் சிங்களத் தேசியவாதத்தை மேலும் வளர்த்தனர் ராஜபக்சக்கள்.
ராஜபக்சக்களைக் குறித்துச் சிங்கள மக்கள் எப்படிக் கருதினார்களோ, அப்படியே தமிழ்ச் சமூகமும் கருதியது. இலங்கை அரசின் போர் அது, அதன் ஒடுக்குமுறையே பாதிப்பை உண்டாக்கியது என்பதற்கு அப்பால் ராஜபக்சக்களே முதன்மை எதிரி என்பதாக. அதனால்தான் ராஜபக்சவினரை போர்க்குற்றத்தில் தண்டிக்க வேண்டும் என்று தமிழர்கள் குரல் எழுப்பினார்கள். இன்னும் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ் மக்கள் எதிர்க்க எதிர்க்க சிங்கள மக்களிடத்திலே ராஜபக்சக்களுக்கான பேராதரவு பெருகியது. இதைத் தமக்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட ராஜபக்சக்கள், தொடர்ந்தும் அரசியல் அரங்கில் இருப்பதற்கான முயற்சிகளை எடுத்தனர். இந்த முயற்சிகள் பல வகையானவை. அரசியற் சூழ்ச்சிகள், நிதியூட்டல்களின் மூலம் எதிர்த்தரப்பில் உள்ளவர்களைத் தங்கள் வசப்படுத்துவது, ஆதிக்க அரசியல் மூலம் அதைத் தக்க வைப்பது, எதிர்த்தரப்பை எப்படியாவது எதைச் செய்தாவது பலவீனமாக்குவது என.
இதற்கெல்லாம் சிங்கள மக்கள் நிபந்தையின்றிப் பேராதரவளித்தனர். இந்த ஆதரவைப் பெற்றுக் கொண்ட ராஜபக்சக்கள் தொடர்ந்தும் ஊழலில் ஈடுபட்டனர். போர் முடிவடைந்த பின்னர் இலங்கைக்கு பல ஆயிரம் மில்லியன் கணக்கில் வந்த டொலர்களை எல்லாம் அபிவிருத்தி என்ற பேரில் தாராளமாகச் செலவழித்தனர். இவ்வாறு நிதியைச் செலவழிப்பது தவறானது. மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களில் பல பொருத்தமற்றவை.
நட்டத்தை விளைக்கக் கூடியவை என்று பலரும் சுட்டிக் காட்டினர். உதாரணமாக அம்பாந்தோட்டைத் துறைமுகம், மத்தள விமான நிலையம், தாமரைத் தடாகம் என்ற வணிக மையம் போன்றவை. ஆனாலும், அதைப் பெரும் பரப்புப் பொருட்படுத்தியதில்லை.
இருந்தாலும் ஒரு எதிர்ப்பலை அதிருப்தியாளர்களிடமிருந்து ராஜபக்சக்களுக்கு எதிராக 2015இல் உருவாகியது. அது பின்னர் வெளிச்சக்திகளால் ஊட்டம் பெற்று வளர்ந்தது. அதன் விளைவாக 2015இல் மாற்றாக ஒரு புதிய ஆட்சி வேண்டும் என்று மக்கள் தீர்மானித்தனர்.
ரணில் விக்கிரமசிங்க – மைத்திரிபால சிறிசேன தலைமையிலான கூட்டரசாங்கமொன்று உருவாகியது. ராஜபக்சவினர் தோற்கடிக்கப்பட்டனர். அவர் எதிர்பார்த்திராத நிலைகுலைவை அந்தத் தோல்வி உண்டாக்கியது. இதேசமயம், இந்த அரசாங்கத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஆதரவை வழங்கியது. முஸ்லிம் மற்றும் மலையக் கட்சிகள் இதில் பங்கேற்றன. ஏறக்குறைய சிறுபான்மைச் சமூகங்களின் ஆதரவுடன் அந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் ‘நல்லாட்சி’ என்ற பேரில் ஆரம்பமாகியது. தகவல் அறியும் சட்டம், மனித உரிமைகளுக்கான இடம், நீதி மற்றும் பொதுச் சேவைகள், தேர்தல் போன்றவற்றுக்கு சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்தமை போன்ற முக்கியமான விடயங்கள் இந்த ஆட்சியில் நிகழ்ந்தேறின.
ஆனாலும், அது திருப்தியளிக்க் கூடிய அளவில் முழுமைப்பட்ட நல்லாட்சியாக அமையவில்லை. ஒன்று, அதுவும் ஒரு இனவாத சக்திகளின் கூட்டு என்பதால் அந்த ஆட்சிக்குள் ஏகப்பட்ட குழப்பங்கள் தொடர்ந்தன. இரண்டாவது, ராஜபக்சவினர் அந்த ஆட்சியைத் தொடர அனுமதிக்கவில்லை.
‘நல்லாட்சி அரசாங்கம்’ பெயரளவில் இருந்ததே தவிர, நடைமுறையில் சுத்துமாத்து அரசாங்கம் என்றே செயற்பட்டது. இதனால் அரசாங்கத்தில் இணைந்திருந்து கொண்டே அரசாங்கத்தின் செயற்பாடுகளை மறுத்தனர் பலர் – விமர்சித்தன பல கட்சிகள். உதாரணமாக, நல்லாட்சி அரசாங்கத்தின் அறிவிப்புகளில் – வேலைத்திட்டங்களில் ஒன்று பகை மறப்பு, நல்லிணக்கம் அல்லது மீளிணக்கம், புதிய அரசிலமைப்பு உருவாக்கம் போன்றவற்றை நிறைவேற்றவேண்டும் என்பது. சர்வதேச சமூகமும் மென் நிபந்தனையாக இவற்றை வலியுறுத்தியது.
ஆனால், இதைச் செய்வற்கு அந்த அரசாங்கம் முழுமனதோடு முயற்சிக்கவில்லை. முயற்சிப்பதாக ஒரு தோற்றம் மட்டுமே காண்பிக்கப்பட்டது. இதைக் குறித்து அந்த அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்த மனோ கணேசன், றிஸாட் பதியுதீன் போன்றோர் தமது அதிருப்தியை வெளியிட்டனர். ஏனையோர் என்ன செய்வதென்றே தெரியாத குழப்பத்திலிருந்தனர். இதெல்லாம் அந்த அரசாங்கத்தைத் தளம்ப வைத்தது. இறுதியில் ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனவும் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவும் நேரில் அடிபட்டுக்கொள்ளும் நிலை வரை சென்றது.
இப்படி உள்ளும் புறத்திலும் ஏற்பட்ட அழுத்தங்கள், நெருக்கடிகளால் அந்த அரசாங்கம் நான்காண்டுகளில் – ஆட்சிக்காலத்துக்கு முன்பதாக – கவிழ்ந்தது. கவிழ்ந்தது என்று குறிப்பிடுவதை விட, கவிழ்க்கப்பட்டது என்று சொல்வதே சரியாகும்.
ஏனென்றால், மைத்திரிபால சிறிசேனவுக்கும் (ஜனாதிபதிக்கும்) ரணில் விக்கிரமசிங்கவுக்கும் (பிரதமருக்கும்) இடையில் ஏற்பட்ட முரணைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த விளைந்தார் மகிந்த ராஜபக்ச. ஒருநாள் அவர் அரசியல் சாசனத்துக்கும் மக்கள் ஆணைக்கும் மாறாக குறுக்கு வழியில் பிரதமராகினார். பதவியிலிருந்த ரணில் விக்கிரமசிங்க விரட்டப்பட்டார். இதற்கான வாய்ப்பை ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்சவுக்கு வெற்றிகரமாக உருவாக்கிக் கொடுத்தார்.
ஆனாலும், இந்த அரசியற் சதி தொடரவில்லை. இது தவறு என்று எதிர்த்தரப்பினர் நீதிமன்றம் வரை சென்று வாதிட்டதால் மகிந்த ராஜபக்ச விரட்டப்பட்டார். மைத்திரிபால மதிப்பை இழந்தார். ராஜபக்சவினர் ஓயவில்லை. தொடர்ந்து அரசியற் சூழ்ச்சிகளைச் செய்து நான்காண்டுகளில் அந்த அரசாங்கத்தைக் கவிழ்த்தனர். இந்த அரசியல் குழப்பங்களால் இலங்கையின் நிதி முகாமைத்துவம், அபிவிருத்தி போன்றவற்றைக் கவனிப்பதற்கு யாருக்கும் நேரமிருக்கவில்லை. இவற்றில் அவதானமும் செல்லவில்லை. நாடு கடன் பொறியில் வீழ்ந்தது.
ஆம், இலங்கையின் இன்றைய அரசியற் குழப்பங்கள், மக்கள் போராட்டங்கள், பொருளாதார நெருக்கடி எல்லாமே கடந்த பத்து ஆண்டுகாலத் தவறுகளின் விளைவே. இது இப்போதைக்குத் தீராது. பதிலாக வேறு வடிவம் எடுக்கப்போகிறது. காரணம், இதைப் புரிந்துகொண்டு செயற்படக் கூடிய அறிவும் திறனும் மன விரிவும் கொண்ட யாருமில்லை. இந்த வெற்றிடத்தில் இருளே நிரம்பிக் கிடக்கிறது.
(தொடரும்)
இத்தொடரின் முந்தைய அத்தியாயங்களை படிக்க…