இலங்கையில் ஓவ்வொரு நாளும் நெருக்கடி கூடிக்கொண்டே போகிறது. மக்கள் வெகுண்டெழுந்து ‘கோ ஹோம் கோத்தா’ போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களைவிட நிலைமை இப்போது மிக மோசம். வரும் நாட்களில் உணவுப் பஞ்சம் ஏற்படும் அளவு; பணம் இருந்தாலும் வாங்க பொருட்கள் இருக்காது எனும் நிலை வரும் என்று ஆட்சியாளர்களே எச்சரிக்கிறார்கள். ஏன் இலங்கை இப்படியொரு நெருக்கடிக்குள்ளானது? இப்போது அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது? வரும் நாட்கள் எப்படி இருக்கும்? இந்த மினி தொடரில் விளக்குகிறார் ஈழத் தமிழ் மூத்த பத்திரிகையாளர் கருணாகரன்…
இலங்கையில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த உள்நாட்டு யுத்தம் நாட்டின் வளர்ச்சியைப் பல ஆண்டுகளுக்குப் பின்தள்ளியது. யுத்த முடிவு நல்லது என்றாலும் அதன்போது ஏற்பட்ட பேரழிவுகள் மாபெரும் மானுடத் துயரம். அதைக் குறித்துப் பலருக்கும் கவலை ஏற்பட்டது. ஆனால், அதையெல்லாம் விட இன்றைய இலங்கையின் நிலை மிகப் பயங்கரமாகியுள்ளது. ‘தலைக்கு மேலேறிய வெள்ளம்’ என்று சொல்வார்களே, அந்த நிலைமைதான் இன்றைய இலங்கையின் நிலவரம். மீட்பருமில்லை. காப்பரமில்லை என்ற நிலை. அவரவர் தம்மைத்தாமே மீட்டுக் கொள்ளவும் காத்துக் கொள்ளவும் வேண்டும் என்ற கட்டம்.
உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அல்லது நம்மை நாமே பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வதைப்போல இது ஒன்றும் இலகுவானதல்ல. எல்லோருக்கும் சாத்தியமாவதுமில்லை. அதனால்தான் அரசு என்பதே இருக்கிறது, எல்லோரையும் பாதுகாப்பதற்கு; வலியோர், எளியோர் உள்பட எல்லோரையும் அரவணைத்துக் கொள்வதற்கு.. ஆனால், இலங்கையில் இது இன்று சாத்தியமற்று, சரிவுக்குள்ளாகியுள்ளது.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தை விட மிகப் பெரிய மானுடத் துயரத்தை (Human tragedy) வரும் நாட்களில் இலங்கை சந்திக்கப்போகிறது. அதை நோக்கியே அது போய்க்கொண்டிருக்கிறது. அதாவது, மயானத்தை நோக்கி. அப்படித்தான் தலைவர்கள் (ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும்) நாட்டையும் நாட்களையும் கொண்டு போனார்கள். இப்பொழுது இதில் மாற்றம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
ஜூலை 09 இல் நடந்த மக்கள் எழுச்சிப் போராட்டம் ஜனாதிபதி கோட்டபாயவையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் பதவி விலகும் நிலையை உருவாக்கியுள்ளது. ஆனாலும் இருவரும் இன்னும் பதவி விலகவில்லை. என்றாலும் அதற்கான சாத்தியங்களே அதிகமுண்டு. அப்படி இருவரும் பதவி விலகி புதிய ஆட்சி (அது சர்வ கட்சி ஆட்சியா அல்லது வேறு ஏதேனும் விதமான ஆட்சியா எதுவாக இருந்தாலும்) அமைந்தாலும் உடனடியாக நாட்டில் மாற்றம் எதுவும் நேராது. நெருக்கடி தணியாது. அதற்கான சாத்தியங்கள் இல்லை.
மட்டுமல்ல, அரசியல் யாப்பிற்கும் நடைமுறை ஆட்சிக்கும் அரசியல் கட்சிகளின் பண்புகளுக்குமிடையில் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கும். இதைச் சுருக்கமாகச் சொன்னால், இதுவரை இருந்ததை விட மிகச் சிக்கலான ஒரு நிலை ஏற்படவுள்ளது.
இதே நிலைமை நீடித்தால் அடுத்து வரும் மாதங்களில் பசியும் பட்டினியும் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு உச்சமடையும். இப்பொழுதே நிலைமை மோசம். இனி உணவின்றி, மருந்தின்றி ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்படைவர். மரணம் தாண்டவமாடும். சமூகச் செயற்பாட்டாளர்களும் மருத்துவர்களும் இதைக்குறித்து எச்சரித்துக் கொண்டிருக்கின்றனர். நிலைமை மோசமடையும்போது கொலையும் கொள்ளையும் களவும் இயல்பாகி விடும். அப்பொழுது அரசினால் எதையும் கட்டுப்படுத்த முடியாது. இதொன்றும் கற்பனையல்ல, நிஜமாகவே நடக்கப்போகிற – விரும்பமுடியாத – தவிர்க்கவே முடியாத – துயர நிகழ்வுகள்.
இலங்கையில் இப்பொழுதே அரசினுடைய கட்டுப்பாட்டில் எதுவுமே இல்லை. யாரும் எந்தப் பொருளையும் எந்த விலைக்கும் விற்கலாம். அப்படித்தான் நடக்கிறது. தினமும் பொருட்களின் விலை ஏறுகிறது. அவரவர் நினைத்த மாத்திரத்தில் எதையும் செய்யலாம் என்ற நிலை. பதுக்கல் தாராளமாக நடக்கிறது. இதனால் தட்டுப்பாடு மிகப் பயங்கரமான அளவுக்கு உருவாக்கப்பட்டுள்ளது. பொருட் தட்டுப்பாட்டினால் பொருட்தேர்வுக்கு இடமில்லை. எது கையில் கிடைக்கிறதோ, எது பெற்றுக்கொள்ளக் கூடியதோ அதைப் பெறுவதே நல்லது என்ற நிலை. தவறினால் அதுவும் இல்லை. அல்லது அடுத்த கணத்தில் இன்னொரு உயர் விலையில் வாங்கிக்கொள்ள நேரிடும்.
பண வீக்கம் உச்சமடைந்திருப்பதே இதற்குக் காரணம். 70 வீதமாக பணவீக்கம் உயர்வடைந்துள்ளது என்று கூறுகிறது இந்த வார நிதி அறிக்கை. இது மேலும் உயரலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அந்நியச் செலாவணி கையிலிருப்பில் இல்லை. இதனால் இறக்குமதி முற்றாகவே தடைப்பட்டிருக்கிறது. மருந்து, உணவுப் பொருட்கள், எரிபொருள் (Feual) என அத்தியாவசியப் பொருட்களைக்கூட இறக்குமதி செய்யமுடியவில்லை. உள்நாட்டு யுத்தத்தினாலும் 1977-ல் அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கையினாலும் இலங்கையில் உற்பத்தித்துறையே முடங்கிப்போனது. அனைத்தையும் இறக்குமதியின் மூலமே இலங்கை பெற்று வந்தது. இப்பொழுது அதற்கும் பணம் இல்லை என்பதால் பெரிய பிரச்சினை உருவாகியிருக்கிறது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களைப் பார்த்தாலே இதைப் புரிந்துகொள்ள முடியும்.
ஒரு லிற்றர் பெற்றோலை அல்லது டீசலைப் பெற்றுக்கொள்வதற்கு மிக நீண்ட வரிசை, நீண்ட காத்திருப்பு. மண்ணெண்ணெய் அறவே கிடையாது. அப்படிக் காத்திருந்தாலும் அவற்றைப் பெற முடியும் என்பதற்கு உத்தரவாதமில்லை. இதனால் போட்டி, நெருக்குவாரம், அடிதடிப் பிரச்சினை, எரிபொருளுக்கான வரிசைக் காத்திருப்பில் மரணம் எனத் தொடரும் பேரவல நிலை. இதுவரையில் இப்படிப் பதினைந்து பேர் இறந்திருக்கிறார்கள்.
இதைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறுகிறது. இதனால், நாடு முழுவதிலுமுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் படையினர் பாதுகாப்புக்கும் நிலைமையைக் கட்டுப்படுத்தவும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இப்பொழுது ஒரு வாரத்துக்கும் மேலாக எல்லா எரிபொருள் நிரப்பு நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. அவற்றுக்கு முன்னே தடுப்பு வளையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய இது நாட்டில் இராணுவ மயப்படுத்தலையே காட்டுகிறது. இதை விட அரசுக்கு வேறு மார்க்கம் தெரியவில்லை. அதனுடைய பார்வைத் திறன் அந்தளவுக்குத்தான் உள்ளது. இதைக் கடந்து விரிந்து பார்க்கக் கூடிய அளவுக்கு ஆட்சித் தலைவர்களுக்குத் திறனில்லை.
நெருக்கடி அதிகரிக்கும்போது மக்கள் உணவுக் களஞ்சியங்களை (அப்படிக் களஞ்சியங்கள் இருக்குமா? என்பது கேள்வி), உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வண்டிகளை எல்லாம் உடைத்துப் பொருட்களை எடுத்துச் செல்வர். இப்பொழுது எரிபொருளை எடுத்துச் செல்லும் கொள்கலன் வண்டிகளுக்கு அந்த நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, படைக்காவல் போடப்பட்டுள்ளது. அப்படி எத்தனை வண்டிகளுக்கு காவல் போட முடியும்? சரி, அப்படித்தான் காவல் போட்டாலும் அல்லது காவலோடு தொடரணிகளாக வண்டிகளை அனுப்பினாலும் அவற்றை வழிமறித்து மக்கள் பொருட்களை எடுத்தால் யார்தான் என்ன செய்ய முடியும்? இறுதி யுத்தத்தின்போது புலிகளின் களஞ்சியங்களையும் அரச களஞ்சியங்களையும் இப்படித்தான் மக்கள் உடைத்துப் பொருட்களை எடுத்தனர். அப்படியொரு நிலை இப்பொழுது ஏற்பட்டால், அரசினால் எப்படி அதைக் கட்டுப்படுத்த இயலும்? அதுதான் நடக்கப்போகிறது. எதையுமே செய்ய முடியாத அரசாக – அரசின் எந்த அறிவித்தலையும் பொருட்படுத்த முடியாத மக்களாக இலங்கை ஆகி விட்டது.
மிகப் பெரிய அழிவையும் பேரவலத்தையும் ஏற்படுத்திய யுத்தம் முடிந்து பன்னிரண்டு ஆண்டுகள் ஆகவில்லை. அதற்குள் இன்னொரு நெருக்கடி, மனிதப் பேரவலம் என்றால் நாடு எப்படியிருக்கும்? மக்களுடைய வாழ்க்கை எவ்வாறிருக்கும்?
மெய்யாகவே இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளுக்குள் நாட்டை மிக உயர்ந்த தரத்திற்கு உயர்த்தியிருக்க முடியும். அதற்கான சூழலும் வாய்ப்புகளும் இருந்தன. சர்வதேச ஆதரவு மிக உச்சமாக இருந்தது. போரினால் பாதிக்கப்பட்ட நாடு என்ற வகையில் பல வகையான உதவிகளை பல்வேறு நாடுகள் செய்தன. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என இந்தியா 60 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளைக் கட்டிக் கொடுத்தது. இதை விட பல்கலைக்கழகங்களுக்கான நிர்மாண உதவி. கலாச்சாரச் செயற்பாடுகளுக்கு, வாழ்வதாரத்துக்கு, சுயதொழில் முயற்சிகளுக்கு எனப் பல உதவிகளைச் செய்தது. யாழ்ப்பாண நகரத்தில் கட்டப்பட்டிருக்கும் கலாசார மத்திய நிலையம் அதிலொன்று. இதை விட தமிழ் நாட்டு அரசின் உதவிகள் வேறுபல.
இப்படி அவுஸ்திரேலியா, கொரியா, சுவிற்சர்லாந்து போன்ற நாடுகள் பாடசாலைகளை விருத்தி செய்தன. அமெரிக்கா, யப்பான் போன்றவை மருத்துவமனைகளை அபிவிருத்தியாக்கின.
மேலும் சுவிற்சர்லாந்து, நோர்வே போன்ற நாடுகள் வீடுகளையும் மக்களுக்கான பொதுக்கட்டிடங்களையும் நிர்மாணித்தளித்தன. யப்பான் குளங்களை விருத்தி செய்து கால்வாய்களைப் புனரமைத்தது. பிரான்ஸ், ஜேர்மனி, பிரிட்டன் போன்றன மருத்துவ உதவி தொடக்கம் பல்வேறு உதவிகளைச் செய்தன. இதை விட ஐ.நா நிறுவனங்கள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட பல சர்வதேச தொண்டு அமைப்புகள் பல வகையான உதவிகளைச் செய்தன. முக்கியமாக சுயதொழில் ஊக்குவிப்புக்காக.
இன்னொரு தரப்பாக புலம்பெயர் மக்களின் நிதிக்கொடைகளும் தாராளமாக இலங்கைக்கு வந்தன. யுத்தத்துக்குப் பிந்திய பத்தாண்டுகளில் இலங்கைக்கு கொடையாகவும் உதவிகளாகவும் வந்த நிதி பல மில்லியன் டொலர். இதை விட கடனாகப் பெற்ற நிதி பல ஆயிரம் கோடி டொலர். இதையெல்லாம் வைத்துக்கொண்டு நாட்டைக் கட்டியெழுப்பியிருக்க முடியும். ஆனால், அதைச் செய்யவில்லை யாரும்.
அன்று 2010இல் ஆட்சியிலிருந்த மகிந்த ராஜபக்ச கிடைத்த நிதியைத் தாராளமாகச் செலவழித்தார். தன்னுடைய குடும்பத்தவர்களை அமைச்சுகளிலும் அரசாங்கத்தின் பெரும் பொறுப்புகளிலும் நியமித்து நிதிச் சுற்றைத் தங்களுக்குள் மட்டுப்படுத்தினார். அப்பொழுது ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த 134 பேர் இவ்வாறு அதிகாரத்தில் இருந்தனர். அமைச்சுகளில் மட்டும் மூவர் இருந்தனர்.
பஸில் ராஜபக்ச, சாமல் ராஜபக்ச என இரண்டு சகோதரர்களோடு மகன் நாமல் ராஜபக்சவையும் வைத்திருந்தார். அவர்கள் ஒரு மிகப் பெரிய கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டனர். நாடு வரலாற்றில் சந்தித்திராத ஊழலில் சூறையாடப்பட்டது. மட்டுமல்ல, தாம் விரும்பிவாறெல்லாம் நிதியைச் செலவழித்தனர். லாபம் தராத, பொருத்தமற்ற விடயங்களில் பல முதலீடுகளைச் செய்தனர். அவற்றில் ஒன்று இலங்கையின் தெற்கிலே அமைக்கப்பட்ட மத்தள சர்வதேச விமான நிலையம். மற்றது, அம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்பட்ட துறைமுகம். இவை இரண்டுக்குமான வழிகாட்டலைச் செய்தது சீனா என்று குற்றம் சாட்டப்பட்டது. ராஜபக்சவினர் சீனாவுடன் நெருங்கி நின்று இந்த மாதிரியான செயற்பாடுகளில் ஈடுபட்டனர். அப்பொழுது அவர்களைக் கேட்பதற்கு யாருமே இருக்கவில்லை. அல்லது யாருடைய குரலையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை. யுத்த வெற்றி அவர்களைச் சிங்கள மக்களிடத்திலே மிகப்பெரிய ஹீரோக்களாக்கியிருந்தது. இதனால், அவர்கள் கேள்விக்கிடமில்லாத அதிகாரத்தோடு இயங்கினர். அதேவேளை குறுகிய இனவாத அரசியலுக்குள் சிக்குண்டு மக்களும் அரசியலாளர்களும் கிடைத்த நல் வாய்ப்பையெல்லாம் நாசமாக்கி விட்டனர்.