பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த ஆட்டத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்திருக்கிறது. இருந்தாலும் இந்த முறை ஐபிஎல் கோப்பையை வெல்ல இது மட்டும் போதுமா என்ற கேள்வி கிரிக்கெட் ரசிகர்களிடையே எழாமல் இல்லை.
நேற்றைய போட்டி வெற்றிகரமாக முடிந்த பிறகும்கூட சிஎஸ்கே மீது சந்தேகம் எழுவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அவை என்ன என்பதைப் பார்ப்போம்.
ரஹானே மீது நம்பிக்கை:
இந்த ஐபிஎல் தொடரில் அஜிங்க்ய ரஹானே மீது சிஎஸ்கே நிர்வாகம் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கிறது, கடந்த பல போட்டிகளில் அவர் சிஎஸ்கேவின் தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்கப்பட்டுள்ளார். ஆனால் அந்த நம்பிக்கையை ரஹானே கொஞ்சமும் காப்பாற்றுவதாக இல்லை.
இந்த தொடரில் 10 போட்டிகளில் ஆடியிருக்கும் ரஹானே மொத்தமாக 208 ரன்களைத்தான் எடுத்திருக்கிறார். 20.80 ரன்களை சராசரியாக வைத்திருக்கும் அவரது ஸ்டிரைக் ரேட்டும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. 123.07 என்ற மிகக் குறைந்த ஸ்டிரைக் ரேட்டைத்தான் அவர் பெற்றிருக்கிறார்.
ஒரு காலத்தில் கேதார் ஜாதவ் எப்படி சிஎஸ்கேவை தனது பேட்டிங்கால் ஒழித்துக் கட்டினாரோ, அப்படிப்பட்ட ஒரு பேட்டிங்கைத்தான் வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால் அப்படி இருந்தும், மொயின் அலி, ரச்சின் ரவீந்திரா போன்ற வீர்ர்களை தொடக்க ஆட்டக்கார்ர்களாக இறக்காமல் இன்னும் ரஹானேவையே தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்கி வருகிறது சிஎஸ்கே.
புதிய சோதனைகளுக்கு பயப்படும் சிஎஸ்கே:
இந்த ஐபிஎல்லைப் பொறுத்தவரை பல அணிகள் பரீட்சார்த்தமாக பல புதுமைகளைப் செய்து வருகின்றன. உதாரணமாக கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி சுனில் நரைனை துணிச்சலாக தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்குகிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, தொடக்கத்தில் விக்கெட்கள் போனாலும் கவலைப்படாமல் பவர் ப்ளே என்று சொல்லப்படும் முதல் 6 ஓவர்களில் குறைந்தது 70 ரன்களையாவது விளாசுவதில் கவனம் செலுத்துகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, மற்ற பேட்ஸ்மேன்கள் இருந்தாலும், அவர்களுக்கு முன் அஸ்வினை இறக்கி மாற்றம் காண முயல்கிறது.
ஆனால் சிஎஸ்கே அணி இன்னும் புதிதாக சிந்திக்கவும், பரீட்சார்த்தமான முடிவுகளை எடுக்கவும் தயங்குகிறது. அதிரடி வீர்ரான ஷர்துல் தாக்குரை ஒரு முறையாவது 3-வதோ அல்லது 4-வதோ களம் இறக்கி ஆடவைத்து பார்க்கலாம். ஆனால் அப்படி ஏதும் செய்யாமல், முதல் 10 ஓவர்களில் விக்கெட்கள் விழாமல் தற்காத்துக் கொள்வது அடுத்த 10 ஓவர்களில் ரன்களைக் குவிப்பது என்ற பழைய பார்முலாவையே கட்டிப் பிடித்துகொண்டு இருக்கிறது.
பாதியில் கழன்ற வீர்ர்கள்:
சிஎஸ்கே அணியின் மற்றொரு பலவீனம் அதன் முன்னணி பந்துவீச்சாளர்கள் கழன்றுகொண்டது. சிஎச்கேவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பதிரனா, காயத்தால் பாதிக்கப்பட்டு இலங்கை திரும்பிவிட்டார். அவருடன் தீக்ஷணாவும் போய்விட்டார். மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான முஸ்தபிசுரும் டி20 உலகக் கோப்பைக்காக வங்கதேசம் சென்றுவிட்டார். தீபக் சாஹரும் காயத்தால் அவதிப்படுகிறார்.
ஐபிஎல் விதிப்படி முதல் 7 போட்டிகளுக்கு பிறகு புதிதாக வீர்ர்கள் யாரையும் ஒப்பந்தம் செய்யவும் முடியாது. அதனால் இருக்கும் பந்துவீச்சாளர்களை வைத்து ஒப்பேற்ற வேண்டிய நிலைக்கு சிஎஸ்கே தள்ளப்பட்டுள்ளது.
இந்த தடைகளையும், பலவீனங்களையும் மீறி சிஎஸ்கே அணியால் பட்டம் வெல்ல முடியுமா என்பதுதான் ரசிகர்களின் சந்தேகமாக இருக்கிறது. இதையும் மீறி சிஎஸ்கே பட்டம் வென்று தனது ரசிகர்களை சந்தோஷப்படுத்துமா என்று பார்ப்போம்..