இந்தியாவில் கிரெடிட் கார்டு பயன்பாடு டெபிட் கார்டு பயன்பாட்டை முந்தியுள்ளது. ‘சமீப காலத்தில் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி செலவு செய்வது, டெபிட் கார்டுகள் மூலமான செலவுகளைவிட அதிகமாக உள்ளது என்பதுடன், நாளுக்கு நாள் இந்த இடைவெளி அதிகரித்தும் வருகிறது’ என தெரிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.
ரிசர்வ் வங்கி தரவுகள்படி, ‘கடந்த ஆண்டில் கிரெடிட் கார்டு ஸ்வைப்கள் 20% அதிகரித்துள்ளது. அதேநேரம் டெபிட் கார்டு பரிவர்த்தனைகள் 31% குறைந்துள்ளது.
கடந்த ஏப்ரல் (2023) மாதத்தில் கிரெடிட் கார்டுகளின் மூலம் ரூ. 1.32 லட்சம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் டெபிட் கார்டுகள் மூலமான செலவு ரூ.54,000 கோடிதான்.
ஏப்ரல் மாதம் கிரெடிட் கார்டுகள் மூலம் ஒட்டுமொத்தமாக 25.60 கோடி ரூபாய் பரிவர்த்தனை நடந்துள்ளது. ஆனால், இதே காலத்தில் டெபிட் கார்டு மூலம் 22.90 கோடி பரிவர்த்தனைகள்தான் நடந்துள்ளன.
ஏப்ரல் மாதம் வரையான தரவுகள் படி புழக்கத்தில் உள்ள கிரெடிட் கார்டுகள் எண்ணிக்கை 8.65 கோடி, இது முந்தைய ஆண்டை விட 15 சதவீதம் அதிகம். இந்த எண்ணிக்கை விரைவில் 10 கோடியை தொடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் மாதத்தில் மட்டும் 12 லட்சம் கிரெடிட் கார்டுகள் புதிதாக வழங்கப்பட்டுள்ளது என ஐ.சி.ஐ.சி.ஐ. செக்யூரிட்டீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆக்ஸிஸ் வங்கியின் கிரெடிட் கார்டு சந்தைப் பங்களிப்பு பிப்ரவரியில் 11.7 சதவிகிதமாக இருந்தது ஏப்ரலில் 14.2 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
எஸ்.பி.ஐ. கார்டின் சந்தைப் பங்களிப்பு பிப்ரவரியில் 19.8% ஆக இருந்தது. அது ஏப்ரலில் 19.5% ஆக உயர்ந்துள்ளது.
ஹெச்.டி.எப்.சி வங்கியின் சந்தை பங்களிப்பு மார்ச் மாதத்தில் 20.6 சதவிகிதமாக இருந்தது ஏப்ரல் மாதத்தில் 20.7 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
சரி, இந்த கிரெடிட் கார்டு பயன்பாடு திடீர் அதிகரிப்புக்கு என்ன காரணம்?
கிரெடிட் கார்டு என்றாலே அதிக வட்டிப் போடுவார்கள், மாட்டிக்கொள்வோம் என்ற தொடக்க கால பயம் குறைந்து இப்போது, கிரெடிட் கார்டு பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கு பிறகு தொடங்கி கிரெடிட் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு டெபிட் கார்டு பயன்படுத்தி வந்தவர்கள், யுபிஐ பரிவர்த்தனைக்கு மாறிவிட்டார்கள். அதேநேரம் கிரெடிட் கார்டு பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் போது, பெரும்பாலானோர் பெரிய அளவிலான தொகைகளுக்கு கிரெடிட் கார்டையே பயன்படுத்துகிறார்கள் கேஷ்பேக், பரிசு புள்ளிகள், தவணை வசதி, தள்ளுபடிகள் மற்றும் வெகுமதிகள் போன்ற கவர்ச்சிகரமான சலுகைகள் இதற்கான காரணங்களாக இருப்பதாக பேங்க்பசார் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. சிறிய அளவிலான தொகை எனில் டெபிட் கார்டை விட, யு.பி.ஐ., பரிவர்த்தனை வசதியை இப்போது பெரும்பாலானோர் பயன்படுத்துகிறார்கள்.
இறுதியாக…
இந்தியாவில் கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரித்து வந்தாலும், உலகளவில் கிரெடிட் கார்டு பயன்பாட்டில் இந்தியா மிக பின்தங்கிதான் உள்ளது. ‘இந்திய மக்கள்தொகையில் 5 சதவிகிதத்துக்கும் குறைவானவர்களே கிரெடிட் கார்டுகளை வைத்திருக்கிறார்கள்’ என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன. அதேநேரம், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் இந்தியா உலகளவில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.