No menu items!

பாடகி மின்மினியை ஒதுக்கினாரா இளையாராஜா? – என்ன நடந்தது?

பாடகி மின்மினியை ஒதுக்கினாரா இளையாராஜா? – என்ன நடந்தது?

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடியதற்காக, இளையராஜா தன்னை திட்டியதாக மலையாள சேனல் ஒன்றுக்கு பாடகி மின்மினி பேட்டி அளித்த்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இளையராஜாவின் இசையில் ‘லவ்வுன்னா லவ்வு மண்ணெண்ணை ஸ்டவ்வு’ பாடல் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் மின்மினி. இதைத்தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ரோஜா படத்தில் ‘சின்னச் சின்ன ஆசை’, கருத்தம்மாவில் ‘பச்சைக்கிளி பாடும் பாட்டு’ உள்ளிட்ட பல பாடல்களைப் பாடிய மின்மினி, குரல் உடைந்து போனதால் பாடுவதை நிறுத்தினார். இப்போது சில மலையாளப் படங்களில் பாடி வருகிறார்.

சில தினங்களுக்கு முன் இரண்டு மலையாள சேனல்களுக்கு பேட்டியளித்திருந்தார். அந்தப் பேட்டிகள்தாம் இப்போது சர்ச்சையாகியிருக்கிறது.

மனோரமா ஆன்லைனுக்கு கொடுத்த பேட்டியில் இளையராஜா தனக்கு வாய்ப்பு கொடுத்தது எப்படி என்பதைப் பற்றி விரிவாக நன்றியுணர்வோடு சொல்லி இருக்கிறார் மின்மினி.

அந்த பேட்டியில், “ஜெயன் அங்கிள் – அதாவது பாடகர் ஜெயச்சந்திரன் என்னை இளையராஜாவிடம் அழைத்துச் சென்றார். இளையராஜாவை அவரது கம்போசிங் அறையில் சந்தித்தேன். கவிஞர் வாலி, கங்கை அமரன் உள்ளிட்டோர் அப்போது அங்கே இருந்தார்கள். என்னை அழைத்த இளையராஜா, பெயர் என்ன என்று கேட்டார். நான் மினி என்று சொன்னேன்.

‘மினின்னெல்லாம் ஒரு பேர் இருக்கா?’ என்று கேட்ட இளையராஜா, நான் முறையாக சங்கீதம் படித்திருக்கிறேனா என்று கேட்டார். நான் இல்லை என்று சொன்னேன்.

‘சரி ஏதாவது பாடிக் காட்டு’ என்றார். நான் பாடி முடித்த்தும், வேறு ஏதாவது ஒரு பாடலை பாடச் சொன்னார்.

பாடி முடித்ததும், “இனிம இங்கே நிறைய வேலை இருக்கும். அதனால ஊருக்கெல்லாம் போக வேண்டாம்” என்றார். ஊரில் நிறைய கச்சேரிகள் இருக்கே எப்படி போகாமல் இருக்க முடியும் என்று யோசித்தேன். ஆனால் என் அப்பா, இளையராவிடம் சென்னையிலேயே இருப்பதாக வாக்களித்தார். அதன் பிறகு, மீரா படத்தில் ‘லவ்வுன்னா லவ்வு… மண்ணெண்ணை ஸ்டவ்வு’ பாடலை பாடும் வாய்ப்பைக் கொடுத்தார் இளையராஜா. என் பெயரும் மின்மினி என்று மாற்றப்பட்ட்து. இந்த பாடலுக்கு பிறகு இளையராஜாவிடம் பல பாடல்களைப் பாட எனக்கு வாய்ப்பு கிடைத்தது” என்று கூறியிருக்கிறார் மின்மினி.

இந்த பேட்டியில் இளையராஜாவைப் பற்றி உயர்வாக பேசியிருக்கும் மின்மினி, அமிர்தா டிவியில் பாடகர் எம்.ஜி.ஸ்ரீகுமார் நடத்தும் நிகழ்ச்சியில் இளையராஜா பற்றி திடுக்கிடும் ஒரு விஷயத்தைச் சொல்லி இருக்கிறார்.

“இளையராஜாவிடம் பாடிக்கொண்டு இருந்த காலத்திலேயே தேவா உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் பாட எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதைப்பற்றியெல்லாம் இளையராஜா எதுவும் சொல்லவில்லை. அப்போது ஒருநாள் ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்து ‘சின்னச் சின்ன ஆசை’ பாடலைப் பாட எனக்கு அழைப்பு வந்தது. போய் பாடினேன். அந்த பாடல் பெரிய அளவில் ஹிட்.

அந்த சமயத்தில் ‘தாலாட்டு’ படத்தில் ஒரு பாடலைப் பாட இளையராஜாவிடம் இருந்து அழைப்பு வந்த்து. அந்த பாடலின் ரெக்கார்டிங் நடந்துகொண்டு இருந்தபோது இளையராஜா நான் பாடிக் கொண்டு இருந்த அறைக்குள் வந்தார்.

‘நீ எதுக்கு அங்க இங்க எல்லாம் போய் பாடிட்டு இருக்கே? இங்க மட்டும் பாடினா போதும்” என்று கோபமாக சொன்னார். .

அது மைக் மூலம் ரிக்கார்டிங் ஸ்டுடியோ முழுக்க கேட்டது. அவர் அப்படி சொன்னதும் எனக்கு அழுகை வந்தது. அருகில் இருந்த பாடகர் மனோவும், மற்ற இசைக் கலைஞர்களும் என்னை சமாதானப்படுத்தினார்கள். அந்த சம்பவத்துக்கு பின் என்னை இளையராஜா அழைக்கவில்லை” என்று அந்தப் பேட்டியில் கூறியிருக்கிறார் மின்மினி.

மின்மினியின் குரல் பின்னாளில் பாதிக்கப்பட்டதற்கும் இந்த சம்பவத்துக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என்று எம்.ஜி.ஸ்ரீகுமார் கேட்டதற்கு, “தெரியவில்லை. அந்த சம்பவம் என் மனதை வெகுவாக பாதித்தது. ஆனால் அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தால்தான் என் குரல் போனதா என்று தெரியவில்லை” என்று சொல்லியிருக்கிறார் மின்மினி.

அதேபோல் ஒரு நாள் காலையில் ‘என்னுள்ளே… என்னுள்ளே.. ‘ பாடலை எழுதிப் பயிற்சி பெறச் சொன்ன இளையராஜா, பின்னர் மதியம் ஸ்வர்ணலதாவை வைத்து அந்த பாடலை பதிவு செய்த்தாகவும் மின்மினி கூறியிருக்கிறார்.

குரல் உடைந்திருந்த சமயத்தில் ரஹ்மான் இசையில் ‘பச்சக்கிளி பாடும் பாட்டு’ என்ற பாடலை கருத்தம்மா படத்துக்காக பாடியதைப் பற்றியும் அவர் இந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

“பாட முடியாத நிலையில் என் குரல் பாதிக்கப்பட்டு இருந்ததால், பல இசையமைப்பாளர்களின் அழைப்பை நான் நிராகரித்தேன். அப்போது ஒரு நாள் ஏ.ஆர்.ரஹ்மான் சாரின் அழைப்பு வந்த்து. கருத்தம்மா படத்தில் ஒரு பாடலைப் பாட அழைத்தார். ஆனால் நான் குரல் சரியில்லை என்றேன்.

அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான், ‘ஹலோன்னு போன்ல சொல்ற அளவுக்கு குரல் இருக்குல்ல. அது போதும் என்று சொல்லி ‘பச்சைக்கிளி பாடும் பாட்டு’ பாடலைப் பாடும் வாய்ப்பை அளித்தார். என் குரல் சரியில்லாத்தால் பலமுறை பாடவைத்து, ஒவ்வொரு இட்த்தில் இருந்தும் வார்த்தைகளை தேடிப் பதிவுசெய்து பாட்டை உருவாக்கினார்” என்று சொல்லி இருக்கிறார்.

மின்மினியின் இந்தப் பேட்டி சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. மினிமின் பாட முடியாமல் போனதற்கு இளையராஜாதான் காரணம் என்று இளையராஜாவை விமர்சித்துக்கு கடுமையான கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

மின்மினி சொன்னது தவறு. ரஹ்மானுக்காக சின்னச் சின்ன ஆசை பாடிய பிறகும் இளையாராஜா இசையில் மின்மினி பல பாடல்களை பாடியிருக்கிறார் என்று அவர்கள் பட்டியல் போடுகிறார்கள். லவ்வுனா லவ்வு பாடல் வந்த 1992ஆம் வருடத்தில் இளையராஜா இசையில் மினிமினி 22 பாடல்களைப் பாடியிருக்கிறார்.

ரோஜா திரைப்படமும் மீரா திரைப்படமும் 1992ஆம் வருடம் வெளிவந்தன. ரோஜா ஆகஸ்ட் மாதமும் மீரா டிசம்பர் மாதமும் ரீலிசானது.

தமிழ் சினிமாவில் 1992, 1993 ஆகிய வருடங்கள்தாம் உச்ச வருடங்களாக மினிமினிக்கு இருந்தது. 1995க்குப் பிறகு அவரது பாடல் வாய்ப்புகள் குறைய தொடங்கியது.

அதற்கு காரணம் இளையராஜா அல்ல, அவரது குரல் பாதிக்கப்பட்டதுதான் என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

ரஹ்மானுக்குப் பாடினால் இளையாராஜா பாடல் வாய்ப்புகள் தரமாட்டார் என்பது தவறான கருத்து. பாடகி சுஜாதாவை அறிமுகப்படுத்தியது இளையராஜா. ஆனால் ரோஜா படத்தில் பாடிய பிறகுதான் சுஜாதா புகழின் உச்சத்துக்கு சென்றார். ஆனால் அதன்பிறகும் இளையாராஜா படங்களில் பாடி வந்திருக்கிறார்.

எஸ்.பி.பி, ஹரிஹரன், ஜானகி, சித்ரா என பல பாடகர்கள் இளையராஜாவுக்கும் ரஹ்மானுக்கும் பாடியிருக்கிறார்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

இளையராஜாவுக்கும் சர்ச்சைகளுக்கும் எப்போதுமே நல்ல தொடர்பு உண்டு. இப்போது அது மின்மினி வடிவில் மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...