தமிழ்நாடு தலைநகர் சென்னையில் ஆயிரக்கணக்கான அரசு பேருந்துகள் இயங்கி வருகின்றன. இந்த பேருந்துகளில் தினமும் லட்சகணக்கான பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். முக்கியமான வழித்தடங்களில் எப்போதும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிவதை காண முடியும். இதனால் மாநகர பேருந்துகளில் அவ்வப்பொது, பேருந்து நடத்துநர்களுக்கும் பயணிகளுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்படும். இதில், சில வாக்குவாதங்கள், மோதல்கள் கைகலப்பு வரை சென்று விடுவதும் உண்டு. அப்போது பயணிகள் சமரசம் செய்து வைப்பதையும் பார்க்க முடியும். நேற்று நடைபெற்ற இதுபோன்ற ஒரு மோதல் உயிர்பலி வரை சென்றதுதான் சோகம்.
சென்னை கோயம்பேடு – எம்.கே.பி நகர் இடையே 46 G என்ற வழித்தட எண் கொண்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்து ஒன்று நேற்று சென்னை அரும்பாக்கம் அருகே உள்ள அண்ணா ஆர்ச் அருகே வந்த போது கண்டக்டர் ஜெகன் குமார் என்பவரிடம் பயணி கோவிந்தன் என்பவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். மதுபோதையில் இருந்த பயணி கோவிந்தன் தகராறில் ஈடுபட்ட போது பேருந்தில் இருந்து கீழே விழுந்த கண்டக்டர் ஜெகன் குமார் உயிரிழந்தார்.
நடத்துநர் உயிரிழந்ததால் அமைந்தகரை பகுதியில் உடனே அரசு பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பயணிகள் தவிப்புக்கு உள்ளாகினர். அதன்பின்னர் பேச்சுவார்த்தைக்கு பின்னர் பேருந்துகளை இயக்கினர்.
பயணி கோவிந்ததனை போலீசார் கைது செய்துள்ளனர். கோவிந்தனும் காயம் அடைந்ததால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டிக்கெட் எடுப்பது தொடர்பாக நடத்துநருக்கும் பயணி கோவிந்தனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக போலீசார் கூறினர்.