சென்னை சூப்பர் கிங்ஸின் சிங்கங்களின் வரிசையில் புதிதாக ஒருவர் சேர்ந்திருக்கிறார். அவரது பெயர் சிசிண்டா மங்களா (Sisinda Mangala). நியூஸிலாந்தின் வேகப்பந்து வீச்சாளரான ஜெமிசன் காயத்தால் ஐபிஎல்லில் இருந்து விலகிய நிலையில் அவருக்கு பதிலாக மங்களாவை வாங்கியிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.
மங்களாவை சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியதாக தகவல் வெளியானதில் இருந்தே யார் அவர் என்று தேடத் தொடங்கியுள்ளனர் விசில்போடும் ரசிகர்கள்.
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர்தான் இந்த மங்களா. 32 வயதான இவர் சமீபத்தில் நடந்த தென் ஆப்பிரிக்க டி20 லீக் தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் மத்தியில் 5-வது இடத்தைப் பிடித்தவர். இந்த தொடரில் மட்டும் அவர் 14 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் ஏலத்தில் 50 லட்சம் ரூபாய் என்ற அடிப்படை விலையுடன் பங்கேற்ற மங்களாவை அப்போது யாரும் விலைக்கு வாங்கவில்லை. இந்நிலையில் 1 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட ஜெமிசன், காயத்தால் விலகியதால் மங்களாவை 50 லட்ச ரூபாய்க்கு வாங்கியிருக்கிறது சிஎஸ்கே.
தென் ஆப்பிரிக்க அணிக்காக 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 4 டி20 போட்டிகளில் மட்டுமே இதுவரை மங்களா ஆடியிருக்கிறார். அதிலும் மொத்தமாகா 9 விக்கெட்களை மட்டுமே எடுத்திருக்கிறார். ஆனால் சர்வதேச போட்டிகளில் ஆடாவிட்டாலும் டி20 லீக் போட்டிகளில் இவரது செயல்பாடு சிஎஸ்கேவின் தேர்வுக் குழுவை கவர்ந்திருக்கிறது.
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்காக சிறப்பாக பந்துவீசி வரும் மங்களா, டி20 கிரிக்கெட் போட்டிகளில் 136 விக்கெட்களைக் கொய்துள்ளார். குறிப்பாக தென் ஆப்பிரிக்க டி20 லீக் போட்டிகளில் கடைசி 5 ஓவர்களான டெத் ஓவர்களில் மிகக் குறைந்த ரன்களையே இவர் கொடுத்துள்ளார். பந்துவீச்சுடன் சேர்ந்து பேட்டிங்கிலும் கலக்கும் மங்களா, கடைசி ஓவர்களில் ஹிட்டராக விளங்குகிறார். டி20 போட்டிகளில் அதிகபட்சமாக 63 ரன்களைக் குவித்துள்ள மங்களாவின் ஸ்டிரைக் ரேட் 120.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மங்களாவை வாங்கியதற்கு 3 முக்கிய காரணங்கள் உள்ளன.
முதல் காரணம் டெத் ஓவர்ஸ். கடந்த ஐபிஎல் போட்டியில் டெத் ஓவர்ஸ் எனப்படும் கடைசி 5 ஓவர்களை அதிக ரன்களை வாரி வழங்கியது சிஎஸ்கே. இம்முறை அதை கட்டுப்படுத்த தோனி திட்டமிட்டுள்ளார். அப்போது அவரது ராடரில் சிக்கிய வீரர்தான் மங்களா. க்டைசி ஓவர்களில் சராசரியாக 7 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுக்காதவர் என்பதால் அவரை டிக் செய்திருக்கிறார் தோனி. உடனே அணி நிர்வாஅகமும் அவரை வாங்கியிருக்கிறது.
இரண்டாவது காரணம் அவரது தற்போதைய ஃபார்ம். கடந்த 6 மாதங்களாக தான் பங்கேற்ற போட்டிகளில் எல்லாம் சிறப்பாக செயல்பட்டுள்ளார் மங்களா. அது இந்த ஐபிஎல் தொடரிலும் நீடிக்கும் என்று சிஎஸ்கே நம்புகிறது.
மூன்றாவது விஷயம் அனுபவம். கொஞ்சம் காமெடியாக சொல்வதென்றால் 30 வயதைக் கடந்த வீரர்களைத்தான் சிஎஸ்கே எப்போதும் விரும்பும். அவர்கள் 100 போட்டிகளுக்கு மேல் ஆடிய அனுபவத்தைக் கொண்டவர்களாக இருப்பார்கள் என்பது சிஎஸ்கே நிர்வாகிகள் மற்றும் தோனியின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையால் அவரை அள்ளி வந்திருக்கிறார்கள்.
2023 ஐபிஎல்லில் அந்த சிங்கம் சிஎஸ்கேவுக்காக எந்த அளவில் கர்ஜிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.