முதியவர்களை பாதிக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று ஞாபக மறதி. இந்த ஞாபக மறதி பிரச்சினையால் வீட்டில் இருந்து வெளியில் வரும் வயதானவர்கள் பலர் மீண்டும் வீட்டுக்குச் செல்ல வழி தெரியாமல் தொலைந்து போவது அடிக்கடி நடக்கும் சம்பவங்கள். இவை குடும்பத்தினருக்கு பெரும் மன உளைச்சலை கொடுக்கும்.
அதற்கு ஒரு தீர்வு வந்திருக்கிறது.
ஒரு வளையல் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள் சென்னை அரும்பாக்கம் காவல் நிலைய போலீஸார். இந்த வளையலில் முதியவரின் பெயர், தொலைபேசி எண், உறவினர்களி தொலைபேசி, அருகிலிருக்கும் காவல் நிலையத்தின் பெயர் எழுதப்பட்டிருக்கும். இந்த வளையலை அணிந்துக் கொண்டு முதியவர்கள் தைரியமாக வெளியில் செல்லலாம். வழி தெரியாமல், உறவினர்கள் பெயர் மறந்து திண்டாடினால் அந்த வளையலைப் பார்த்தால் போதும் உதவி கிடைத்துவிடும்.
சமீபத்தில் அரும்பாக்கம் காவல் நிலைய பகுதியில் நடந்த ஒரு சம்பவம்தான் இப்படி ஒரு யோசனையை அங்குள்ள போலீஸாருக்கு கொடுத்துள்ளது.
சென்னை அரும்பாக்கம் காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட ராஜேஸ்வரி என்ற முதிய பெண்மணி கடந்த வாரம் காணாமல் போயுள்ளார். இதுபற்றி அவரது உறவினர்கள் புகார் தெரிவிக்க, போலீஸார் தேடி வந்துள்ளனர். ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டிருந்த அந்த பெண்மணிக்கு தனது பகுதியின் பெயர் சரியாக ஞாபகம் இல்லை. என்எஸ்கே நகர் என்பதற்கு பதிலாக என்.எஸ்.நகர் என்று கூறி சுற்றி வந்துள்ளார். இந்த நிலையில் பொதுமக்களில் ஒருவர், அவர் சொன்னது என் எஸ் கே நகராக இருக்கலாம் என்று கணித்துள்ளார். இதைத் தொடர்ந்து அவர் மீட்கப்பட்டார். இந்த சம்பவத்தைப் பார்த்த அரும்பாக்கம் உதவி ஆய்வாளர் பிரகாஷுக்கு இந்த வளையல் யோசனை தோன்றியுள்ளது.
இதுபற்றி கூறும் அரும்பாக்கம் காவல் ஆய்வாளர் பிரபு, “ஞாபக மறதி உள்ளிட்ட பிரச்சினைகளால் காணாமல் போகும் முதியோரை கண்டுபிடிப்பது பெரிய சவாலாக இருக்கிறது. சில சமயங்களில் வீட்டுக்கு இரண்டு தெருக்கள் தள்ளியே சுற்றிக்கொண்டு இருந்தாலும் அவர்களை கண்டுபிடிக்க முடிவதில்லை. அவர்களை விரைவில் கண்டுபிடிக்க வசதியாக அவர்களில் பெண்களின் கையில் வளையலையும், ஆண்களின் கையில் காப்பையும் அணிவிக்கும் யோசனையை உதவி ஆய்வாளரான பிரகாஷ் தெரிவித்தார். இதன்படி வளையலை வடிவமைத்தோம். இந்த வளையல்களை முதியோர்கள் அணிவதால், மற்றவர்கள் அதைப் பார்த்து உறவினர்களுக்கோ அல்லது போலீஸாருக்கோ தகவல் சொல்ல முடியும்.
முதியோருக்கு உதவும் இந்த வளையலைப் பற்றி உயர் அதிகாரிகளுக்கு எடுத்துச் சொன்னோம். இதை ஏற்றுக்கொண்ட அவர்கள், இதே போன்ற வளையல்களை சிலர் போலியாக தயாரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்பதால் அவ்வாறு நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறினார்கள்.
இதைத்தொடர்ந்து போலிகள் இல்லாத வகையில் மேம்படுத்தப்பட்ட முத்திரையுடன் கூடிய வளையல்களை தயாரித்து அவற்றை முதியோருக்கு வழங்குவது பற்றி ஆலோசித்து வருகிறோம். விரைவில் அதுபோன்ற வளையல்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படும்” என்றார்.
அரும்பாக்கத்தில் தொடங்கியிருக்கும் இந்த முயற்சி வெற்றி பெற்றால், அது சென்னையில் உள்ள மற்ற காவல் நிலையங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டு, முதியோர்கள் தொலைந்து போவது குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளன.