No menu items!

புத்தகம் படிப்போம்: தமிழ் எழுத்தின் வரலாறு

புத்தகம் படிப்போம்: தமிழ் எழுத்தின் வரலாறு

உலகில் இன்று மக்கள் பயன்பாட்டில் உள்ள மொழிகளில் மிக மூத்தது தமிழ். நம் தமிழுக்கு இன்னொரு பெருமையும் உள்ளது. மிக நீண்ட கால வரலாறு உடைய செம்மொழியாக மட்டுமல்லாமல் ஆரம்ப காலம் முதல் தனக்கென ஒரு சொந்த எழுத்து வடிவத்தைக் கொண்ட மொழியாகவும் தமிழ் இருக்கிறது. வேறு எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு இது. இப்போதும்கூட உலகில் பெரும்பாலான மொழிகளுக்கு எழுத்து வடிவம் இல்லை; இதனால் சில மொழிகள் பிற மொழிகளின் எழுத்து வடிவத்தையே பயன்படுத்துகின்றன. தமிழின் இந்த பெருமையை சான்றுகளுடன் ஆதாரபூர்வமாக நிறுவும் நூல், அறிஞர் தி.நா. சுப்பிரமணியன் எழுதிய ‘பண்டைத் தமிழ் எழுத்துகள்.’  1938ஆம் ஆண்டு முதலில் வெளியான இந்நூல் தற்போது மீண்டும் மறு பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.

பண்டைய காலத்தில் தமிழர்கள் பயன்படுத்திய எழுத்து ‘தமிழி’ அல்லது ‘தமிழ் பிராமி’ என்று அறிஞர்களால் குறிப்பிடப்படுகிறது. பிராமி என்பது ஒரு எழுத்து முறை. இது பழங்காலத்தில் தெற்காசியா முழுவதும் வழக்கத்தில் இருந்தது. இதனால் தமிழ்நாட்டில் கிடைத்த அக்கால எழுத்துகள் ‘தமிழ் பிராமி’ என்று குறிப்பிடப்பட்டன. இதுதான் இன்று நாம் பயன்படுத்தும் தமிழ் எழுத்துகளுக்கு முன்னோடி.

தமிழி எழுத்துகளுக்கு முன்பு கருத்துப் பரிமாற்றத்திற்காக தமிழர்கள் குறியீடுகளை பயன்படுத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ள அகழாய்வுகளில் கிடைத்துள்ள கற்காலத்தைச் சேர்ந்த முதுமக்கள் தாழி, மட்பாண்டங்கள், அணிகலன்கள் போன்றவற்றில் இந்த ‘குறியீடுகள்’ இடம்பெற்றுள்ளன. இந்த குறியீடுகளுக்கும், பண்டைக்கால சுமேரிய, எகிப்திய, சீன, கிரேக்க, ஜப்பான் நாட்டுக் குறியீடுகளுக்கும், முக்கியமாக சிந்து வெளிக் குறியீடுகளுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் நடந்த அகழாய்வுகளில் மேல் அடுக்குகளில் கிடைத்த மட்பாண்டங்களில் குறியீடுகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கும்போது தமிழி எழுத்துகள் கிடைக்கத் தொடங்குகிறது. அதாவது குறியீடுகளுக்கு பின்னர் தமிழி எழுத்துகளை தமிழர்கள் பயன்படுத்த தொடங்குகின்றனர். இது குறித்து தனது ‘தொல்லியல் நோக்கில் சங்க காலம்’ என்ற நூலில் கா. ராஜன், “பண்டைய தமிழ் மக்கள் கி.மு. 1000 ஆண்டு வாக்கிலேயே ஒரு வகையான எழுத்துப் பொறிப்புகளை அல்லது வரிவடிவத்தை தமது கருத்துப் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தினர். தமிழ்நாட்டில் அகழாய்வு செய்யப்பட்ட அனைத்து இடங்களிலும் இக்குறியீடுகள் கிடைக்கிறது. தமிழ் வரிவடிவங்களைப் போன்றே இவையும் இடமிருந்து வலமாக எழுதப்பட்டுள்ளது.

தமிழ் பிராமி (தமிழி) வரி வடிவம் தமிழ்நாட்டில் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பாக இக்குறியீடுகள் சங்ககால மக்களின் எண்ணங்கள் அல்லது கருத்து பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஒருவகை வரிவடிவமே என எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது” என்கிறார்.

மையிலாடுதுறையில் உள்ள செம்பியன் கண்டியூர் என்னும் இடத்தில், கல்லால் ஆன புதிய கற்காலத்தைச் சார்ந்த கைகோடாலி ஒன்று கிடைத்தது. அதில் நான்கு குறியீடுகள் இருந்தன. புகழ்பெற்ற தென்னிந்திய தொல்பொருள் ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன், அக்குறியீடுகளை ஆய்வு செய்து ‘முருகன்’ என படித்தார். மேலும், இதன் காலம் கி.மு. 1500 முதல் கி.மு. 2000 எனவும், இந்தக் கல்கோடாலி தமிழ்நாட்டு பகுதியில் உள்ள கல்வகையினைச் சார்ந்தது என்பதால் இது வட இந்தியாவிலிருந்து வந்திருக்க முடியாது எனவும் குறிப்பிடுகிறார். இதனடிப்படையில், தமிழ்நாட்டு மக்களும் சிந்துவெளி மக்களும் ஒரே மொழியைப் பயன்படுத்தியவர்களே எனவும் நிறுவுகிறார் ஐராவதம் மகாதேவன்.

பண்டைய தமிழர்கள் எழுதுவதற்கு ஏதோ ஒரு வகையான வரிவடிவத்தை, கி.மு. 1000 ஆண்டு வாக்கிலேயே பயன்படுத்தினர் என கா. ராஜன் சொல்லிய நிலையில், ஐராவதம் மகாதேவன் இன்னும் 500 – 1000 ஆண்டுகள் முன்னே சென்று கி.மு. 1500 – 2000 வாக்கிலேயே தமிழர்கள் எழுத்தை பயன்படுத்தியுள்ளனர் என்பதை கண்டுபிடித்து நிறுவினார். ஆக, கி.மு. 1500 வாக்கிலேயே தமிழர்கள் குறியீடுகளை கருத்துப் பரிமாற்றத்திற்கென பயன்படுத்தத் தொடங்கி, கி.மு. 1000 வாக்கில் அக்குறியீடுகளை, தமிழ்நாடெங்கும் ஒரு எழுத்து வரிவடிவமாகப் பரவலாக பயன்படுத்தி உள்ளனர் என தெரிகிறது.

மேலும், பண்டைய தமிழ்நாட்டில் சமூகத்தின் அனைத்துப் படிநிலை மக்களும் பரவலாக தமிழி எழுத்தைப் பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதும் தெரிகிறது. வட இந்தியாவில் இந்நிலை இல்லை என்பதும், அங்கு மிக மிகக் குறைந்த அளவு எழுத்துப் பொறிப்புகளே கிடைத்துள்ளன என்பதுடன் அவைகளும் அரசர்கள் பயன்பாட்டில் மட்டும் இருந்ததுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்பே குறிப்பிட்டது போல் இந்த குறியீடுகளுக்கு பின்னர் தமிழி எழுத்து வருகிறது. ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற அகழாய்வில் பழங்காலத் தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்பை கண்டறிந்துள்ளதாக, தொல்லியல் அறிஞர் சத்தியமூர்த்தி கூறுகிறார். அந்த எழுத்துப் பொறிப்பின் காலம், அறிவியல் ஆய்வின்படி கி.மு.1500 முதல் கி.மு.500 எனவும் கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே, தமிழ் பிராமி (தமிழி) எழுத்தின் காலம் கி.மு. 500க்கு முற்பட்டதாக இருக்க வேண்டும் என்பது அவரது முடிவு. அதன் முன்னர் கொற்கை, பொருந்தல் ஆகிய இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகள் மூலமும் தமிழ் பிராமி (தமிழி) எழுத்தின் காலம் கி.மு. 500க்கு முற்பட்டது என நிறுவப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த கண்டுபிடிப்புகள் மூலம், தமிழ் பிராமி எழுத்து, அசோகர் பிராமி எழுத்துக்கு இரு நூற்றாண்டுகள் முற்பட்டது (அசோகர் பிராமியின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு) என்பதோடு, அசோகர் பிராமியில் இருந்து தமிழ் பிராமி உருவாகவில்லை என்பதும் நிரூபிக்கப்பட்டது. முனைவர் கா. ராஜன், அகழாய்வுத்துறை முன்னாள் இயக்குநர் கே.வி. ரமேஷ், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அகழாய்வுத் துறை பேராசிரியர் திலிப் கே. சக்ரபர்த்தி ஆகியோர் உட்பட பல முக்கிய அறிஞர்களும்கூட சந்தேகத்திற்கிடமின்றி அசோகன் பிராமிக்கு முற்பட்டது தமிழ் பிராமி என்று தெரிவித்துள்ளார்கள். ஆனால், ஐராவதம் மகாதேவன், சுப்பராயலு ஆகியோர், தமிழ் பிராமி அசோகன் பிராமிக்கு முற்பட்டது என்ற கருத்தை மறுக்கின்றனர். ஐராவதம் மகாதேவன் தமிழ் பிராமியை கி.மு. 2ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்கிறார். கா. ராஜன் தமிழி எழுத்தின் தொடக்க காலம் கி.மு. 8ஆம் நூற்றாண்டு என சொல்வதுடன் ஒப்பிட இது 6 நூற்றாண்டுகள் பின்னால் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் காலத்தால் முற்பட்டது தமிழ் பிராமியா அசோகர் பிராமியா, அசோகர் பிராமியில் இருந்து தமிழ் பிராமி தோன்றியதா அல்லது தமிழ் பிராமியில் இருந்து அசோகர் பிராமி தோன்றியதா என்ற விவாதம் நீண்ட காலமாக அறிஞர்களிடையே இருந்து வருகிறது. மேலும், பண்டைய நூல்களில் தமிழ் எழுத்து தமிழி என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளதால், அதனை தமிழ் பிராமி என்பதற்குப் பதில் ‘தமிழி’ என்று அழைப்பதுதான் பொருத்தமாகும் என்றும் சில அறிஞர்கள் சொல்லி வருகின்றனர்.

இந்நிலையில் பிராமி எழுத்துகளே தமிழ் எழுத்திலிருந்துதான் வளர்ந்திருக்க வேண்டும் என்ற கருத்தை 1938ஆம் ஆண்டு வெளிவந்த ‘பண்டைத் தமிழ் எழுத்துக்கள்’ எனும் நூலில் முதன்முதலில் கூறினார் தி.நா. சுப்பிரமணியன். இவரின் இந்த முடிவு கீழடி அகழாய்வால் தற்போது உறுதிபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘இது சாதாரண விஷயமல்ல. வெகுசில தமிழ்நாட்டு அறிஞர்களுக்கே கல்வெட்டு படிக்கத் தெரிந்த காலம் அது. தமிழ்நாட்டு கல்வெட்டுகளைத் தமிழ்தான் என்று சொல்வதற்கே பலரும் தயங்கிய வேளை. அப்போது அவற்றைத் தமிழ்க் கல்வெட்டுகள் என்று சொல்லியது மட்டுமல்லாமல், அந்தத் தமிழ்ப் பிராமி எழுத்துகள்தாம் அசோகனின் பிராமிக்கும் தாய் என்று சொல்வதற்குத் தம் கல்வியிலும் அறிவிலும் களப்பணியிலும் தி.நா. சுப்பிரமணியனுக்கு பெரிய நம்பிக்கை இருந்திருக்க வேண்டும்’ என்கிறார், தமிழ் எழுத்துகளை கணினியில் பயன்படுத்துவதற்கான பணிகளை செய்தவர்களில் ஒருவரான மணி மணிவண்ணன்.

எட்டு ஆண்டுகள் முயன்று இந்நூலை எழுதியுள்ளார் தி.நா. சுப்பிரமணியன். இன்றும் பண்டைத் தமிழ் எழுத்துகளைப் பயில்வோர்க்கு அரிச்சுவடி நூலாக இதுவே உள்ளது. மேலும், தமிழ் எழுத்து வரலாறு தொடர்பான நூல்கள் அனைத்திற்கும்கூட இதுவே தாய் நூலாக இருந்துள்ளது.

இன்று நாம் பயன்படுத்தும் தமிழ் எழுத்துகள் எப்படி உருவாகி, வளர்ந்து வந்தது என்பதை தெரிந்துகொள்ள இந்நூலைப் படிப்பது அவசியம்.

***

இந்நூலின் டிஜிட்டல் வடிவத்தை ஆன்லைனில் இலவசமாக படிக்க

அச்சு நூலை வாங்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...