No menu items!

பாக்யராஜ், டி. ராஜேந்தர் தான் காரணம் – Book Talk With வசந்தபாலன்

பாக்யராஜ், டி. ராஜேந்தர் தான் காரணம் – Book Talk With வசந்தபாலன்

வாழ் தமிழா யூடியூப் சேனலில் (Wow Tamizhaa – YouTube) வரும் Book Talk தொடரில் திரைப்பட இயக்குநர் வசந்தபாலனை சந்தித்தோம். வசந்தபாலன் பேட்டியின் இரண்டாவது பகுதி இது.

எழுத்தாளர் சு. வெங்கடேசனின் ‘காவல்கோட்டம்’ நாவலில் இருந்து ஒரு பகுதியை ‘அரவான்’ படமாக நீங்கள் எடுத்தீர்கள். பூமணியின் ‘வெக்கை’ நாவலில் இருந்து வெற்றிமாறன் ‘அசுரன்’ எடுத்தார்; அடுத்து சி.சு.செல்லப்பாவின் ‘வாடிவாசல்’ நாவலை எடுக்கப்போகிறார். கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை மணிரத்னம் எடுத்துள்ளார். இந்த வரிசையில் சினிமாவாக எடுக்க வாய்ப்புள்ள தமிழ் நாவல்கள் என்று எதையெல்லாம் நீங்கள் நினைக்கிறீர்கள்?

ஒரு இயக்குநருக்கு, திரைக்கதை ஆசிரியருக்கு தேவை ஓற்றை தீப்பொறிதான். நான் ரங்கநாதன் தெருவை பார்த்தேன், அந்த காட்சிதான் ‘அங்காடி தெரு’ படத்துக்கான தீப்பொறி. ‘வெயில்’ படத்தைப் பொறுத்தவரைக்கும் ஒரு அண்ணன் ஒரு தம்பி; ஒருவன் வெற்றிபெற்றவன், ஒருவன் தோல்வியடைந்தவன் – இந்த வித்தியாசம்தான் அந்த தீப்பொறி. அதிலிருந்து பிறகு மொத்த திரைக்கதை உருவானது. இந்த தீப்பொறி ஒரு கவிதையில் இருந்துகூட கிடைக்கலாம். ந. முத்துக்குமாரின் ஒரு கவிதையில் இருந்துதான் சூரி நடிக்கும் படத்தை எடுக்க முதலில் வெற்றிமாறன் திட்டமிட்டார். இப்போது ஜெயமோகனின் சிறுகதையை எடுக்கிறார்.

யமோகனின் எல்லா படைப்புகளுக்கும் சினிமாவாகும் தன்மை உள்ளது. அவரது ‘ரப்பர்’ நாவலை சினிமாவாக எடுத்தால் தமிழில் ஒரு கிளாசிக்காக அது இருக்கும். பிரபஞ்சன், அசோகமித்திரன், பூமணி ஆகியோருடைய பல சிறுகதைகள், நாவல்கள் சினிமாவுக்கான கதையை கொண்டிருப்பவை. இதுபோல் தமிழில் சினிமாவாக வாய்ப்புள்ள படைப்புகள் நிறைய இருக்கின்றன. இந்த படைப்புகளில் நான் சொன்ன திரைக்கதைக்கான தீப்பொறி குவிந்து கிடக்கிறது.

இதை, ‘காவல்கோட்டம்’ நாவலில் இருந்து ‘அரவான்’ படத்துக்கான அந்த ‘தீப்பொறி’யை எப்படி பெற்றீர்கள் என்ற உதாரணத்துடன் விளக்க முடியுமா?

எனக்கு வேல ராமமூர்த்தியின் ‘குற்றப்பரம்பரை’ நாவலை படமாக்க வேண்டும் என்று ஆர்வம் இருந்தது. பின்னர் பாரதிராஜாவும் பாலாவும் அதை செய்யப் போகிறார்கள் என்று தகவல் வந்தது. குறிப்பாக அதில் கன்னம் வைத்து திருடும் கலை மீதும் வரலாற்று காலகட்டத்தில் எளிய மனிதர்களின் வாழ்க்கை எப்படியிருந்தது என்பதிலும் எனக்கு பெரிய ஈடுபாடு இருந்தது. அதையெல்லாம் சினிமாவுக்குள் கொண்டுவர வேண்டும் என்று விரும்பினேன். இந்நிலையில்தான், எதேச்சையாக ‘காவல்கோட்டம்’ படிக்கத் தொடங்கினேன். அன்று நடு இரவு இருக்கும். படித்துக் கொண்டிருந்தபோது அதில் ஒரு சிறுகதை போன்ற பகுதி என்னை ஈர்த்தது. ஊருக்காக ஒருவன் பலியாகிறான் – இதுதான் அந்த தீப்பொறி. இதை படம் பண்ணலாமே என்று வெங்கடேசனிடம் பேசிவிட்டு, திரைக்கதை எழுதத் தொடங்கினேன்.

ஜெயமோகனின் ‘வெண்முரசு’ நாவலை நீங்கள் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறீர்களா?

ஆறு நாவல் தொடர்ந்து படித்தேன். அவர் இரவு 12.01க்கு பதிவேற்றுவார். அதுவரை காத்திருந்து அதை படித்துவிட்டுத்தான் தூங்க செல்வேன். ஒருவேளை வேறு வேலைகளால் தவறிவிட்டால் காலையில் எழுந்ததும் நேரே சென்று கம்யூட்டரை ஆன் செய்து முதலில் படித்துவிடுவேன். அது பிரமாத அனுபவம். பீமனுக்கும் துரியோதனனுக்கும் ஆகாது என்று நமக்கு தெரியும். ஆனால், ஏன் ஆகாது? அவர்களுக்குள் எங்கே மோதல் உருவானது என்பதை ஜெயமோகன் தன் பார்வையில் விளக்குகிறார். இதுபோல் இந்த ஆறு நாவல்களிலும் மிகப் பிரமாதமான பல இடங்கள் உள்ளது. ‘மகாபாரதம்’ மீண்டும் மீண்டும் எத்தனையோ பேர்களால் எழுதப்பட்டுள்ளது. எஸ். ராமகிருஷ்ணனும் எழுதியுள்ளார். எழுத எழுத அது வளர்ந்துகொண்டே செல்கிறது.

திரைக்கதை உருவாக்கங்களில் எழுத்தாளர்கள் பங்கெடுப்பது நமது பக்கத்து மாநிலமான மலையாளத்தில் அதிகம் இருக்கிறது. ஆனால், தமிழில் மிகக் குறைவுதான். இதற்கு என்ன காரணம்?

கே. பாக்யராஜ், டி. ராஜேந்தர் – இவர்கள் இருவரும்தான் முக்கியமான காரணம். குறிப்பாக இருவருமே கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம் என்று ஒரு நீளமான பட்டியலை போட்டதுதான் காரணம். பாக்யராஜ் போன்ற ஒருவர் வராமல் இருந்திருந்தால் இங்கேயும் எழுத்தாளர்களின் தேவை இருந்திருக்கும். செல்வராஜ், கலைமணி போன்ற எழுத்தாளர்களிடம் இருந்து கதை வாங்கிதான் பாரதிராஜா படங்கள் எடுத்தார். பாக்யராஜ் வந்த பின்னர் இயக்குநர் என்பவர் இவை எல்லாவற்றையும் செய்யவேண்டும் என்ற பார்வை வந்துவிட்டது. அது இன்றும் தமிழ் இயக்குநர்களுக்கு பெரும் பாரம்தான். முழுக் கதையையும் சொல்கிற ஆளுமையோடுதான் ஒரு தயாரிப்பாளரை சந்திக்க வேண்டியுள்ளது. ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒரு எழுத்தாளரிடம் இருந்து கதையை வாங்கி, அதற்கேற்ற இயக்குநரையும் நடிகரையும் தேடுகிற ‘ஹாலிவுட் மாடல்’ இங்கே இல்லை. ஆனால், இனிமேல் இதில் மாற்றம் வரலாம். ஜெயமோகனின் சிறுகதைதான் கெளதம் வாசுதேவ் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு’, ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதைதான் வெற்றிமாறனின் ‘விடுதலை.’ அடுத்து ஜெயமோகனின் ‘யானை டாக்டர்’ சிறுகதையும் சினிமாவாகப் போகிறது. கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை மணிரத்னம் எடுக்கிறார். மணிரத்னம், கெளதம் வாசுதேவ் மேனன், வெற்றிமாறன் போன்ற பெரிய இயக்குநர்கள் தொடங்கி வைத்த இந்த வழி, வரும் தலைமுறை இயக்குநர்களுக்கு பாதையாக அமையும் என்று நம்புகிறேன்.

இந்த பேட்டியின் முதல் பகுதியை வாசிக்க

ICU-விலிருந்து என்னை காப்பாற்றியது எழுத்து – வசந்தபாலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...