No menu items!

அர்ஷ்தீப் சிங் – இந்திய பந்து வீச்சின் புதிய ஆச்சர்யம்

அர்ஷ்தீப் சிங் – இந்திய பந்து வீச்சின் புதிய ஆச்சர்யம்

பும்ரா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி என்று வேகப்பந்து வீச்சில் இந்தியாவுக்கு ஏற்கெனவே நிறைய நட்சத்திரங்கள் உள்ளனர். அந்த நட்சத்திரங்களின் வரிசையில் சமீபமாக சேர்ந்திருக்கிறார் அர்ஷ்தீப் சிங். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரிலேயே தன் சிறப்பான பந்துவீச்சால் ரசிகர்களை ஈர்த்த அர்ஷ்தீப், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் ஒரு முழு நாயகனாக உருவெடுத்துள்ளார். தான் வீசிய 2-வது ஓவரிலேயே டி காக், ராசோ, டேவிட் மில்லர் ஆகியோரின் விக்கெட்களை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க பேட்டிங்கின் முதுகெலும்பை உடைத்துள்ளார்.

“யார்யா நீ… இத்தனை நாளா எங்கய்யா இருந்தே?” என்று ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு இப்போது உயர்ந்து நிற்கிறார் அர்ஷ்தீப் சிங்…

அர்ஷ்தீப் சிங்கின் பிறந்த ஊர் மத்தியப் பிரதேசத்தில் உள்ள குணா. இருப்பினும் அவர் வளர்ந்ததெல்லாம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கரார் நகரத்தில்தான். சண்டிகர் நகரில் இருந்து 13 கிலோமீட்டர் தள்ளியுள்ளது கரார் நகரம்.

அர்ஷ்தீப் சிங்கின் அப்பா தர்ஷன் சிங் ஒரு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டி அதிகாரியாக இருந்தார். சிறுவயதில் பிள்ளைகள் தெருவில் ஆடும்போது பெற்றோர்கள் வேடிக்கை பார்ப்பார்களே… அப்படித்தான் தர்ஷன் சிங்கும் ஒரு நாள் தன் மகன் பூங்காவில் கிரிக்கெட் ஆடுவதைப் பார்த்துள்ளார். அர்ஷ்தீப் சிங் வேகமாக ஓடிவந்து பந்து வீசும் லாவகத்தைப் பார்த்ததும், மெய்சிலிர்த்துப் போயுள்ளார் தர்ஷன் சிங். ஒரு சிறந்த பந்துவீச்சாளராக உருவாவதற்கான வாய்ப்புகள் தன் மகனுக்கு பிரகாசமாக இருப்பதாக அவருக்குத் தோன்றியுள்ளது. இதுபற்றி தன் மனைவியிடம் கூறியிருக்கிறார்.

சண்டிகரில் உள்ள ஒரு கிரிக்கெட் பயிற்சி மையத்தில் தங்கள் மகனைச் சேர்த்துள்ளனர். 13 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பயிற்சி மையத்துக்கு 7 வயது குழந்தையை தனியாக எப்படி தினமும் அனுப்புவது என்று முதலில் யோசித்திருக்கிறார் அவரது அப்பா.

ஆனால் அந்தப் பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாக கூறிய அர்ஷ்தீப்பின் அம்மா, சைக்கிளில் தினமும் 13 கிலோமீட்டர் மிதித்து தனது மகனை பயிற்சி மையத்துக்கு கொண்டுபோயிருக்கிறார். பயிற்சி முடிந்த பிறகு மீண்டும் அதேபோன்று 13 கிலோமீட்டர் தூரம் சைக்கிளை மிதித்து வீட்டுக்கு கொண்டுவந்துள்ளார். தனது அம்மாவின் அன்றைய முயற்சிதான் இன்று தன்னை இந்திய அணியில் இடம்பெறும் அளவுக்கு வளர்த்துள்ளது என்கிறார் அர்ஷ்தீப் சிங். ஆரம்பத்தில் அம்மாவால் கொண்டுபோய் விடப்பட்டவர், அதன்பிறகு தானே சைக்கிளில் பயிற்சி மையத்துக்கு சென்றுவரத் தொடங்கினார்.

சண்டிகர் பயிற்சி மையத்தில் ஜஸ்வந்த் ராய் என்பவரால் கூர்தீட்டப்பட்டார் அர்ஷ்தீப் சிங். “சிறுவயதிலேயே பந்தை நன்றாக ஸ்விங் செய்வார் அர்ஷ்தீப் சிங். ஆரம்ப காலகட்டத்திலேயே ஒரு ஓவரின் 6 பந்துகளையும் 6 விதமாக வீசி என்னை அர்ஷ்தீப் அசரடித்துள்ளான்” என்று கூறுகிறார் ஜஸ்வந்த் ராய்.

மாவட்ட மற்றும் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிய அவர், பஞ்சாப் கிங்ஸ் அணியில் சேர்க்கப்பட்ட பிறகு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கினார். இந்த அணிக்காக அவர் பந்துவீசிய விதம், இந்திய அணிக்கு இவரை தேர்வுபெற வைத்துள்ளது.

ஐபிஎல் போட்டியின் மூலம் இந்திய அணியில் இடம்பிடித்த வீரர்கள் பலரும் சர்வதேச போட்டிகளின் நெருக்கடியை தாங்க முடியாமல் பாதியிலேயே பின்வாங்கியுள்ளனர். ஆனால் அர்ஷ்தீப் சிங், அங்கும் தனது ஆற்றலை நிரூபித்துள்ளார். கடைசி ஓவர்களில் பும்ராவைவிட குறைவாக ரன்களைக் கொடுக்கும் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்ற பிறகு பேசிய அர்ஷ்தீப் சிங், “எதிர்காலத்திலும் இதேபோல் இந்திய அணிக்காக சிறப்பாக பங்களிக்க விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

நமக்கும் இதுதானே வேண்டும்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...