இப்பொழுதெல்லாம் நமது அரசியல் தலைவர்கள் எப்போதும் படபடப்புடன், சூடாக உச்ச கொதிநிலையில் பேசுவதை மக்கள் கேட்டு வருகிறார்கள். ஆத்திரத்துடன் வார்த்தைகளைக் கொட்டுகிறார்கள். “சின்ன எதிர்ப்புகளை இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லையே” என்கிற மக்கள் கருத்து தலைவர்கள் காதில் விழப்போவதில்லை.
இவர்கள் பேசுவதைவிட இவர்களது ஆவேசம் மக்களுக்கு காட்சிப் பொருளாகிவிட்டது.
பெரும்பாலான இந்திய தலைவர்கள் அப்படி இருந்ததில்லை. குறிப்பாக தமிழக தலைவர்கள் பொறுமைசாலிகளாகவே இருந்தார்கள்.
சில காட்சிகளை நினைவுகூர்ந்தால் என்ன?
நாடாளுமன்ற கூட்டத்துக்குச் செல்ல, அந்த வளாகத்தில் நீண்ட வராண்டாவில் நடந்து வருகிறார் பிரதமர் வாஜ்பாய். ஓரிடம் வந்தவுடன் உயரமான அந்த சுவரை பார்த்து சற்று நின்று விடுகிறார்.
தன்னுடன் வந்த செயலாளரிடம் “இங்கே மாட்டியிருந்த ஜவஹர்லால் நேரு படம் எங்கே” என்றார். நகர்ந்துவிட்டார்.
நாடாளுமன்ற கூட்டம் முடிந்து திரும்பி வருகிறார். நேருவின் படம் அதே இடத்தில்! அதுதான் பிரதமரின் ‘பவர்’. புன்னகையுடன் கடக்கிறார் வாஜ்பாய்.
பிற்பகலில் நாடாளுமன்றத்தில் இதைப் பற்றி பேசினார்.
“வேறு கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டது… நான் பிரதமராகி விட்டேன் என்பதால் நேருவின் படத்தை அகற்றிவிடுறதா? இது என்ன செயல்? 17 ஆண்டுகள் இந்தியாவை ஆண்டு, உலகப் புகழ்பெற்ற ஓருவரை அவ்வளவு லேசாக ஓதுக்கிவிட முடியுமா” என்றார்.
“இதே மன்றத்தில் அவரை நான் மிகக் கடுமையாக தாக்கி விமர்சிப்பதுதான் வழக்கம். அவர் உற்று கேட்பார். ஓருமுறை அவரை வழக்கத்தை விட தாக்கி பேசினேன். மாலையில் ஓரு விருந்தில் அவரை பார்த்தேன். என்னை நெருங்கி வந்து, ‘இன்று மிக மிக ஆத்திரமாக பேசினீர்கள் உங்கள் பேச்சில் வழக்கமாக சில புதுமையான அழகிய சொற்கள் வரும். என்னை பரவசப்படுத்தும். அது இன்று இல்லாமல் போய்விட்டது’ என்றார் அந்த பெருமகன்.”
அவையில் பலத்த கைத்தட்டல். ஜனநாயக பாடமல்லவா இது. ‘இவர் ஓருநாள் பிரதமராவார்’ என்று வாஜ்பாயை சுட்டிக்காட்டி நேரு ஓருமுறை கூறியதுண்டு.
நம்ம ஊர் காட்சியைப் பார்க்கலாம்…
சென்னை மெரினா கடற்கரையில் திமுகவின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம். எதிர்க்கட்சியில் இருந்த நேரம், திராவிட நாடு கோரிக்கையை இன்னும் கைவிடவில்லை. அறிஞர் அண்ணா தலைமை. என்.வி. நடராசன் பேச வருகிறார். கோபம் கொப்பளிக்க பேசினார். திடீரென குரலை உயர்த்தி “இந்த காங்கிரஸ் அமைச்சர்களை கண்டால் கல்லால் அடித்து விரட்டுங்கள். ஓருவரை விடாதீர்கள். கல்லால் அடியுங்கள்” என்றார். ஓரே ஆரவாரம்.
அண்ணா எழுந்தார். நடராசனை மெல்ல தள்ளிவிட்டு மைக் முன் நின்று, “இப்படி கண்ணியக் குறைவாக பேசுவது அழகல்ல. மிகத் தவறானது. நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நடராசன் உடனே மன்னிப்பு கேட்க வேண்டும்” என உத்தரவிட்டார்.
தயங்கிய நடராசனைப் பார்த்து கையை நீட்டி மன்னிப்பு கேள் என்றார். நடராசன் மன்னிப்பு கேட்டார். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற அரசியலுக்கு அண்ணா அளித்த புகழ் பெற்ற வார்த்தை அங்கேதான் பிறந்தது. “கடமை, கண்ணியம் கட்டுப்பாடு செயலில் மட்டுமல்ல பேச்சிலும் இருக்க வேண்டும் ” என்றார் அண்ணா.
அடையார் புற்றுநோய் மருத்துவமனையில் சீரியசாக உயிருக்குப் போராடுகிற நிலையில் அண்ணா. வெளியே நீண்ட பெஞ்சில் கவர்னர் உஜ்ஜல் சிங், பெரியார், ராஜாஜி, காமராஜ், பி.ராமமூர்த்தி… இப்படி எல்லா தலைவர்களும் இருள்படிந்த முகத்துடன்.
குமுதம் இதழில் ‘தானு’ இதை கார்ட்டூனாகவே வரைந்தார். எப்பேர்பட்ட பண்பாடு.
அரசியல் பேச்சில் கிண்டல், கேலி, மடக்குதல் இருந்தால்தான் புத்திக்கூர்மை வெளிப்படும். ராஜாஜியின் பேச்சுக்கள் அப்படி. மெதுவான குரலில்தான் பேசுவார். நன்றாக காது கொடுத்து கேட்க வேண்டும்.
“நேருவின் அழகில் மயங்கி பெண்கள் காங்கிரஸுக்கு ஓட்டு போடுகிறார்கள்” என்று பொதுக்கூட்டத்தில் கூறிவிட்டார் ராஜாஜி. பொதுக்கூட்டத்தில் சிரிப்பு அலை. உடனே காங்கிரஸ் இயக்கத்தில் உள்ள பெண்மணிகள் ராஜாஜி வீட்டு வாசலில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
மறுநாள் கூட்டத்தில் ராஜாஜி, “நான் அப்படி பேசியது பெண்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்றார். காங்கிரஸ் பெண்மணிகளே திடுக்கிட்டு போனார்கள். போராட்டம் வாபஸ்.
“அரசியலில் ஆத்திரமும், சவாலும் மக்கள் மனதில் நிற்பதில்லை. பெருந்தன்மைதான் ஜொலிக்கும்” என்றார் மெல்லிய குரலில், மருத்துவமனையில் படுத்திருக்கும் அந்த அரசியல்வாதி.