மக்களிடையே படிக்கும் வழக்கம் வேகமாக குறைந்து வருகிறது. ஆன்மிகம், அரசியல், அறிவியல், தகவல் தொழில்நுட்பம் என தங்களைச் சுற்றி நடக்கும் பல்வேறு விஷயங்களப் பற்றியும் தெரிந்துகொள்ள மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால் அவற்றைப் பற்றிய புத்தகங்கள் ஏராளமாக இருந்தாலும், அவற்றைப் படிக்க அவர்களுக்கு பொறுமையோ, நேரமோ இருப்பதில்லை. அதேநேரத்தில் செல்போனுடன் செலவழிப்பதற்கு மட்டும் அவர்களுக்கு ஏராளமான நேரம் இருக்கிறது.
இந்த சூழலில் தாங்கள் விரும்பும் செல்போனிலேயே தங்களுக்கு பிடித்த விஷயங்களைக் கொண்ட புத்தகங்களை செவிவழியே படிக்க அவர்களுக்கு உதவும் வகையில் ‘மேஜிக் 20 தமிழ் செயலி (ஆப்) உருவாக்கப்பட்டுள்ளது.
அருண் பாரதி, பாலாஜி, கார்த்திகேயன் ஆகிய 3 இளைஞர்கள் இணைந்து இந்த செயலியை உருவாக்கியுள்ளனர். கதைகள் நாவல்களை பாட்காஸ்ட் செய்யும் செயலிகளுக்கு மத்தியில் கதைகள் அல்லாத மற்ற விஷயங்களைச் சொல்லும் நான் பிக்ஷன் வகை புத்தகங்களை இந்த ‘மேஜிக் 20’ செயலி நமக்கு தருகிறது.
அது என்ன ‘மேஜிக் 20 தமிழ்’ என்ற கேள்வி பலருக்கும் எழலாம். இதற்கான விடையைக் கூறும் இந்நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான கார்த்திகேயன், “மேஜிக் 20 தமிழ் அப் என்பது நான்ஃபிக்ஷன் வகை புத்தகங்களை தமிழில் ஆடியோ வடிவில் வழங்கும் செயலியாகும். இந்த செயலியில் பல தலைப்புகளில் புத்தகங்கள் உள்ளன. எவ்வளவு பெரிய புத்தகமாக இருந்தாலும் அதன் முக்கியமான மையக்கருத்தை 20 நிமிடங்களுக்குள் தொகுத்து வழங்குவதால் இதற்கு ‘மேஜிக் 20 தமிழ்’ என பெயர் வைத்துள்ளோம்” என்கிறார்.
இதுபற்றி மேலும் அவர் கூறும்போது, “உலகளவில் பெரிய நிறுவனங்களில் பணியாற்றியவர்கள், நிறுவனங்களின் வளர்ச்சிக்கு புதிய உத்திகளை கையாண்டவர்கள், அடிப்படை சிந்தனையிலேயே மாற்றத்தை உருவாக்கியவர்கள் என பலரும் ஆங்கில மொழியில் பல தலைப்புகளில் பல புத்தங்களை எழுதியிருக்கிறார்கள். இந்த புத்தகங்களை சுருக்கத்தையும், மையக்கருத்தையும் தமிழில் அனைவரிடமும் கொண்டுசென்று சேர்ப்பதே எங்கள் நிறுவனத்தின் நோக்கம்.
எல்லா புத்தகங்களையும் 20 நிமிடத்தில் பாட்காஸ்ட் செய்ய முடியாது என்பதால் சில புத்தகங்களின் முக்கிய பகுதிகளைப் பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் 20 நிமிடம் என ஆடியோவாக கொடுக்கிறோம். எங்கள் குழுவினர் ஒவ்வொரு புத்தகத்தையும் விரிவாக படித்து அதிலுள்ள மையக் கருத்துகளை தொகுத்து கொடுக்கிறோம். இந்த செயலியை பயன்படுத்துவதன் மூலம் அந்த புத்தகத்தை முழுமையாக படித்த அனுபவம் பயனாளர்களுக்கு கிடைக்கும்.
எங்கள் செயலி ஆடியோ வழியில் புத்தகங்களைக் கொடுப்பதால், இதற்காக தனிப்பட்ட முறையில் பயனர்கள் நேரத்தை ஒதுக்க வேண்டியதில்லை. காரில் போகும்போதோ அல்லது அலுவலகத்திலோ, வீட்டிலோ ஏதாவது வேலையைச் செய்யும்போதே இதைக் கேட்டுக்கொள்ளலாம்” என்கிறார்.
மேஜிக் 20 தமிழ் செயலியில் புத்தகங்கள் மட்டுமல்லாமல் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் நிறுவனர்களின் உரைகள், மாஸ்டர் கிளாஸ் என அறிவை விரிவு செய்வதற்கான பல விஷயங்கள் உள்ளன. இந்நிறுவனத்தில் நேச்சுரல் நிறுவனத்தின் நிறுவனர் சி.கே. குமரவேல், இப்போ பே நிறுவனத்தின் நிறுவனர் மோகன், குவி நிறுவனத்தின் பாலா என இளம் தொழிலதிபர்கள் முதலீடு செய்துள்ளனர்.