No menu items!

ஃப்ளாப் ஆன கமலின் திட்டங்கள்!

ஃப்ளாப் ஆன கமலின் திட்டங்கள்!

தமிழ் சினிமாவில் சுமார் 4 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு கமல் நடித்த ‘விக்ரம்’ படம் வெளியானது. அந்தப் படம் இந்தளவிற்கு வெற்றிப் பெறும் என கமலும் நினைத்து கூட பார்க்கவில்லை. லோகேஷ் கனகராஜூம் எதிர்பார்க்கவில்லை. ஆனால் ‘விக்ரம்’ கமலின் சினிமா வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிட்டது.

‘விக்ரம்’ படம் கொடுத்த தெம்பினால், தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃப்லிம்ஸ் இண்டர்நேஷனல் மூலம் அடுத்தடுத்து படங்களைத் தயாரிக்க மும்முரம் காட்டினார் கமல்.

இதையடுத்துதான் ராஜ்கமல் தயாரிக்க இருப்பதாக ஏழு படங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகின. இதில் விஜய் டிவியின் முகங்களான சிவகார்த்திகேயனும், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியும் இணையும் படம், அடுத்து தேசிங்கு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம், மணிரத்னம் இயக்கத்தில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் கைக்கோர்க்கும் ‘தக் லைஃப்’, இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம், பிரசாத் முருகேசன் இயக்கத்தில் உதயநிதி நாயகனாகும் படம், அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘லவ் டுடே’-வின் பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வைக்கும் படம், அறிமுக இயக்குநர் படத்தில் நயன்தாரா நடிக்கவிருக்கும் படம் என மொத்தம் 7 படங்கள் பட்டியலிடப்பட்டன.

ராஜ்கமல் 7 படங்கள் தயாரிக்கிறதா என்று ஆச்சர்யத்தில் கோலிவுட்டே அரண்டுப் போனது.

ஆனால் இந்த பட்டியலில் பெரும் மாற்றம் இருப்பதாக இப்போது தகவல் கசிந்திருக்கிறது. சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி நடிக்கும் படம் ஏறக்குறைய முடிவடையும் தருவாயில் இருக்கிறது. அதனால் இந்தப் படம் தப்பித்துவிட்டது. அடுத்து மணி ரத்னம் – கமல் இணையும் ‘தக் லைஃப்’ உறுதியாகிவிட்டது. இந்த இரண்டுப் படங்களைத் தவிர மற்ற படங்கள் எல்லாம் கேள்விக்குறியாகி இருக்கின்றன என்கிறார்கள்.
சம்பள பிரச்சினையால், பட்ஜெட் பிரச்சினையால் விக்னேஷ் சிவன் – பிரதீப் ரங்கநாதன் இணையும் ‘எல்.ஐ.சி.’ படம் ’லியோ’ படத்தைத் தயாரித்த லலித்குமார் வசம் சென்றுவிட்டது.

தேசிங்கு – சிம்பு இணையவிருந்த படம் இப்போது அப்படியே வேறொரு தயாரிப்பு நிறுவனத்திற்கு கைமாற்றிவிட பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

‘தக் லைஃப்’ முடியும் வரை ஹெச். வினோத் காத்திருப்பாரா என்ற சந்தேகம் எழுந்திருப்பதால், அநேகமாக அந்தப் படமும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாம்.

இதரப் படங்களை அனைத்தையும் அப்படியே ட்ராப் செய்துவிடலாமா அல்லது வேறு ஏதாவது தயாரிப்பு நிறுவனம் முன்வந்தால் அவர்களிடம் ஒப்படைத்துவிடலாமா என்றும் யோசிக்கப்பட்டு வருகிறதாம்.

பரபரவென கிளம்பிய ராஜ்கமல் ஃப்லிம்ஸ் இப்படி தடுமாற என்ன காரணம்?

இத்தனைப் படங்களையும் அடுத்தடுத்து தயாரிக்க, தேவையான பட்ஜெட்டுக்கு பணம் இல்லையாம். மற்ற நிறுவனங்களைப் போல வட்டிக்கு கடன் வாங்கி படமெடுக்க கமலுக்கு விருப்பமில்லையாம். இப்போதுதான் இருந்த கடன்களையெல்லாம் அடைக்க முடிந்திருக்கிறது. இதற்குமேலும் கடன் வாங்கி அவஸ்தைப் பட முடியாது என்று கமல் முடிவெடுத்து இருக்கிறார் என்கிறார்கள்.

அப்படியானால் இந்தப் படங்களை எல்லாம் என்ன நம்பிக்கையில் தயாரிக்கப் போவதாக அறிவித்தார்கள் என்ற கேள்விக்கு பதில்.. நீங்க ஓகே சொல்லுங்க. முதலீடு செய்ய நிறைய நிறுவனங்கள் ஆர்வமாக இருக்கின்றன. உங்களோடு சேர்ந்து படம் தயாரிக்க அவர்கள் பணம் கொடுப்பார்கள் என்று கமலுக்கு அவரது நெருங்கிய வட்டாரத்தில் இருந்து உற்சாகம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இப்படிதான் சிவகார்த்திகேயன் படம் இப்போது எடுக்கப்பட்டு வருகிறது. சோனி நிறுவனத்தின் முதலீடும் இந்தப் படத்தில் இருக்கிறது. ‘தக் லைஃப்’ படத்தயாரிப்பில் ரெட் ஜெயண்ட்டும் கைக்கோர்த்திருக்கிறது. இதனால் இந்தப் படத்திற்கும் பிரச்சினை இல்லை.

மற்றப்படங்கள் வெறும் அறிவிப்போடு கைவிடப்பட இருப்பதால், தனது ப்ளான்கள் எல்லாம் ஃப்ளாப் ஆனதால் கமல் கடுப்பில் இருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதன் தொடர்ச்சியாக, இனி ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகத்தை அவரது அண்ணன் மகளும், மணிரத்னத்தின் மகளுமான சுஹாசினி கவனிக்க இருப்பதாகவும் பேச்சு அடிப்படுகிறது.

’தக் லைஃப்’ படத்தயாரிப்பில் இருந்து ராஜ்கமல் தயாரிப்பு நிர்வாக பொறுப்பை சுஹாசினி மேற்கொள்ள ஆரம்பித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சுஹாசினியின் வரவால், இதுவரையில் ராஜ்கமல் தயாரிப்பு நிர்வாகத்தை கவனித்து கொண்டவர்கள் ஓரங்கட்டப்படலாம் என தெரிகிறது. காரணம் இவர்கள்தான் பட்ஜெட்டுக்கு பணம் வரும் என்று கமலுக்கு யோசனை கொடுத்தவர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...