அலியா பட்டுக்கு இது அதிர்ஷ்ட காலம். தொட்டதெல்லாம் பணமாய் கொட்டுகிறது.
கடந்த ஜூலை மாதம் அம்பானி குழுமத்துடன் அலியா ஒரு ஒப்பந்தம் போட்டார். அந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 300லிருந்து 350 கோடி ரூபாய். ஆமாம் அத்தனை கோடி ரூபாய்தான்.
சும்மாய் கொடுக்கவில்லை. அலியா பட்டின் குழந்தைகள் உடைகள் தயாரிப்பு நிறுவனத்தை வாங்கிக் கொள்வதற்கான ஒப்பந்தம் போட்டிருக்கிறது அம்பானி குழுமம்.
அலியா பட்டுக்கு இப்போது மட்டுமல்ல, கடந்த சில வருடங்களாகவே அதிர்ஷ்ட காற்று ஆடிக் காற்று போல் வீசிக் கொண்டே இருக்கிறது.
2022 ஏப்ரலில் காதலித்த ரன்பீர் கபூரையே கல்யாணம் செய்துக் கொண்டு நவம்பர் மாதத்தில் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். 7 மாதத்தில் குழந்தையா என்று கேட்காதீர்கள். அலியா நினைத்தால் எல்லாம் வேகமாய் நடக்கும்.
30 வயதுதான் ஆகிறது. பல சூப்பர் ஹிட் படங்கள். இந்தியப் படவுலகின் கனவுக் கன்னி என்ற பெருமைகளுடன் 600 கோடி ரூபாய்க்கு மேல் சொத்தும் சேர்த்துவிட்டார். மும்பையில் ஒரு வீடு லண்டனில் ஒரு வீடு என்று வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்.
இப்போது எதற்கு அலியா புராணம் என்று கேட்கலாம். அவர் திரையில் பயன்படுத்திய புடவைகள் விலைக்கு வந்திருக்கிறது. வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்வதற்குதான்.
அலியா பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
Rocky Aur Rani Kii Prem Kahaani திரைப்படத்தில் நான் அணிந்த சேலைகளை விற்கிறேன். வாங்கிக் கொள்ளுங்கள். அதில் கிடைக்கும் பணம் எளிய பெண்கள் மற்றும் குழந்தைகளுகளின் உடல் நலத்துக்கு பயன்படுத்தப்படும் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.
அவர் அணிந்த சேலைகளை வாங்குவதற்கு கடுமையான போட்டியிருக்கும். அந்தப் புடைவைகளை வாங்க போட்டி போடுபவர்கள் ஆண்கள் அதிகமாக இருப்பார்களா? பெண்கள் அதிகமாக இருப்பார்களா?