திமுக சட்டென்று கூட்டணிக் கணக்குகளை முடித்துக் கொண்டது. 2019 ஃபார்மூலா அடிப்படையில் வேகமாய் தொகுதி பங்கீட்டை சிக்கல் இல்லாமல் நிறைவேற்றிவிட்டது. 2019 ஃபார்மூலாவை தாண்டிய ஒரே விஷயம் கமலின் மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரு ராஜ்ய சபா சீட் கொடுத்ததுதான்.
அதிமுகவும் பாஜகவும் கூட்டணிகளை முடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றன. அவற்றுக்கு தலைவலி கொடுப்பது இரண்டு கட்சிகள். பாமக, தேமுதிக.
அதிமுகவுக்கு இதுவரை பெரிய கட்சிகள் எதுவும் கூட்டணிக்கு வரவில்லை. கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் மட்டுமே அதிமுக கூட்டணியில் இணைந்திருக்கிறது. அதற்கு இப்போது பாமகவும் தேமுதிகவும் அத்தியாவசியமாக இருக்கிறது. முக்கியமாய் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவு இருந்தால் மட்டுமே அதனால் வட மாவட்டங்களிலும் கொங்கு மண்டலத்திலும் கணிசமான வாக்குகளைப் பெற முடியும். அதனால் பாமகவுடனான கூட்டணிக்கு தீவிரமாய் முயற்சி செய்துக் கொண்டிருக்கிறது.
பாமகவுக்கு இது அறுவடை காலம். 2021 சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணியில் போட்டியிட்டு 3.8 சதவீத வாக்குகளை பெற்றது. இந்த வாக்குகளைப் பெறதான் அதிமுகவும் பாஜகவும் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கின்றன. அதிமுகவுடன் கூட்டணி அமைக்க 10 நாடாளுமன்றத் தொகுதிகளும் ஒரு ராஜ்ய சபா இடமும் பாமக கேட்டதாக தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால் 6 தொகுதிகள் மட்டும் தருவதாக அதிமுக கூறியிருக்கிறது. ராஜ்ய சபா சீட்டையும் மறுத்திருக்கிறது.
மறுபக்கம், பாஜக 8 தொகுதிகளை கொடுக்க முன் வந்திருக்கிறது. கூடவே ஒரு ராஜ்ய சபை இடமும் கொடுப்பதாக கூறியிருக்கிறது.
பாஜகவின் யோசனை அன்புமணி ராமதாசுக்கு பிடித்திருக்கிறது. ஆனால் அவர் அப்பா பெரியவர் ராமதாசுக்கு பிடிக்கவில்லையாம். அதிமுகவுடன் இணைந்தால்தான் வெற்றிப் பெற முடியும் அது மட்டுமில்லாமல் 2026 சட்டப் பேரவைத் தேர்தலுக்கும் உதவியாக இருக்கும் என்று கூறினாராம். ஆனால் அன்புமணி, 2014 உதாரணத்தைக் கூறியிருக்கிறார். அந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, அதிமுகவை எதிர்த்து போட்டியிட்ட அன்புமணி தர்மபுரி தொகுதியில் வென்றார். அதனால் இந்த முறையும் வெற்றிக்கு வாய்ப்பிருக்கிறது என்று கூறியிருக்கிறார். அது மட்டுமில்லாமல் அடுத்து மத்தியில் ஆட்சி அமைக்கப் போவது பாஜகதான் இப்போது அவர்களுடன் இருந்தால் அமைச்சராகும் வாய்ப்பும் இருக்கிறது. இந்தக் கணக்குகளுக்கு இடையில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. அன்புமணி ராமதாஸ் மீது வழக்குகள் இருக்கின்றன. அதையும் கூட்டணி முடிவுகளில் கவனம் கொள்ள வேண்டியதாக பாமகவுக்கு இருக்கிறது.
பாஜகவை பொறுத்தவரை வெல்கிறோமோ இல்லையோ தமிழ்நாட்டில் இரண்டாம் இடத்தை பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்போட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தேர்தலில் அதிமுகவை முந்தினால் அதற்கு மிகப் பெரிய பலமாக அமையும் என்பதை புரிந்திருக்கிறது. அதனால் பாமகவையும் தேமுதிகவையும் தன் பக்கம் இழுக்க சகல சக்திகளையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.
அதிமுகவுக்கு குறிப்பாக எடப்பாடி பழனிசாமிக்கும் இக்கட்டான சூழல். பாஜகவைப் போலவே இரண்டாமிடத்திலாவது நின்று காட்ட வேண்டிய கட்டாயம். மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டால் அதிமுகவின் அரசியல் அஸ்தமிக்க தொடங்கிவிடும் என்பதை அதிமுக தலைவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.
தேர்தலில்தான் பலப்பரீட்சை நடக்கும் ஆனால் இந்த முறை கூட்டணி அமைப்பதிலேயே பலப்பரீட்சை தொடங்கிவிட்டது. பாமகவும் தேமுதிகவும் பாஜக கூட்டணிக்குச் சென்றால் அதிமுகவுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் சிக்கல்தான்.
இன்று மாலை நிலவரப்படி பிரேமலதா மறுத்தாலும் பாஜக பக்கம் தேமுதிக போய்விட்டதாகவே தெரிகிறது. பாமகவும் பாஜக பக்கம் சாய்ந்துக் கொண்டிருப்பதாகதான் தகவல்கள் வந்துக் கொண்டிருக்கிறது.