நடிகர் பரத் கல்யாண் மனைவி திடீர் மரணம் திரையுலகினருக்கு மட்டுமல்லாமல் பேலியோ உணவு முறையை பின்பற்றி வருபவர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது, பேலியோ உணவு முறை சரியா தவறா என்ற விவாதத்தை சமூக வலைதளங்களில் உருவாக்கியுள்ளது.
பழம்பெரும் நடிகர் கல்யாண் குமாரின் மகன், பரத் கல்யாண். கன்னட திரையுலகில் நடிகராக அறிமுகமான பரத் தமிழில் ‘ஜெண்டில்மேன்’, ‘ஆதிலட்சுமி புராணம்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தபோது சின்னத்திரை பக்கம் நகர்ந்த பரத், ’ஆபூர்வ ராகங்கள்’, ‘வம்சம்’, தற்போது வெளிவரும் ‘பாரதி கண்ணம்மா’, ‘ஜமிலா’ உட்பட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னட சின்னத்திரை உலகிலும் பிரபலமாக இருக்கிறார்.
பரத் கல்யாண் மனைவி பிரியதர்ஷினி (வயது 43). ப்ரியா, பேலியோ உணவு முறையை பின்பற்றி வந்துள்ளார். இந்நிலையில், திடீரென சர்க்கரை அளவு அதிகமாகி உடல் நலம் பாதிக்கப்பட்டார். இதற்காக கடந்த மூன்று மாதங்களாக சிகிச்சை எடுத்துவந்த பிரியா திடீரென கோமா நிலைக்கு சென்று, அதிலிருந்து மீளாத நிலையிலேயே நேற்று அதிகாலை 5 மணிக்கு காலமானார்.
பேலியோ உணவு முறை காரணமாகவே பிரியாவின் சர்க்கரை அளவு திடீரென அதிகரித்து, அவரது மரணத்துக்கு காரணமாகியுள்ளது என ஒரு தரப்பினர் தெரிவித்துள்ளார்கள். ஆனால், மற்றொரு தரப்பினரோ பேலியோ உணவு முறையால் சர்க்கரை அளவு அதிகரிக்காது என இதனை மறுத்துள்ளனர்.
உண்மை என்ன?
மூத்த டயட்டீசியன் டாக்டர் தரணி கிருஷ்ணனுடன் பேசினோம்.
“பேலியோ உணவு முறை என்பது கற்கால உணவுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதில் காய்கறிகள், உலர் பழங்கள், வேர்கள், இறைச்சி ஆகியவை அடங்கும். பால் சார்ந்த உணவுகள், தானியங்கள், பருப்பு வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை, உப்பு, காபி ஆகியவை இடம்பெறாது; ஏனெனில் இவை எதுவும் அந்த காலத்தில் இல்லை. இந்த உணவு முறையை இப்போது நிறைய பேர் பின்பற்றுகிறார்கள். இதனால் சர்க்கரை அளவு அதிகரிக்காது, குறையத்தான் வாய்ப்புள்ளது” என்கிறார்.
பிரியதர்ஷினி மரணம் தொடர்பாக ஃபேஸ்புக்கில் எழுதியுள்ள பதிவில் டாக்டர். அ.ப. ஃபரூக் அப்துல்லாவும் இதனையே சொல்கிறார். “உண்மையில் பேலியோ உணவு முறை நீரிழிவை கட்டுப்படுத்த மிகச்சிறந்த கருவியாகும். இதை சரியாக உபயோகப்படுத்தினால் ஒருவர் நீரிழிவு வராமலும், நீரிழிவு வந்தவர் அதை கட்டுப்படுத்தவும் முடியும். பேலியோவால் டயாபடிஸ் கட்டுப்படுமே அன்றி, டயாபடிஸ் ஏற்படாது” என்கிறார் ஃபரூக் அப்துல்லா.
ஆனால், “பேலியோ உணவு முறைக்கு மாறுபவர்கள் முதலில் ஒரு மருத்துவர் ஆலோசனையை கேட்டு, அவர் சொல்கிறபடி எடுத்துக்கொள்வது நல்லது. ஃபேஸ்புக், யூ ட்யூப் என இணையத்தில் பேலியோ போன்றே உடல் எடைக் குறைப்பிற்கென்று ஏராளமான உணவு வழிகாட்டுதல்கள் கொட்டிக் கிடக்கின்றன. பத்திரிகைகளிலும் இது தொடர்பாக அடிக்க வெளிவருகிறது. இணையத்தையும் பத்திரிகையையும் பார்த்து இதனை பின்பற்ற தொடங்கிவிடுகிறார்கள். அப்படி மருத்துவர் ஆலோசனை பெறாமல், நமது உடலுக்கு ஏற்றதா என ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளாமல் எடுத்துக்கொள்ளும் போதுதான் இதுபோன்ற சிக்கல்கல் உருவாகிறது” என்கிறார், டாக்டர் தரணி கிருஷ்ணன்.
“பேலியோ என்பது குறை மாவு உணவு முறையின் பெயராகும். நாம் சாதாரணமாக அன்றாட உணவில் மாவுச்சத்து எனும் கார்போ ஹைட்ரேட்டை மிக அதிகமாக உட்கொண்டு வருகிறோம். சராசரியாக காலை முதல் இரவு வரை 300 முதல் 400 கிராம் மாவுச்சத்து சராசரி தமிழரால் உட்கொள்ளப்படுகிறது. இதனுடன், உடல் உழைப்பின்மை, அதீத மன அழுத்தம், உறக்கமின்மை போன்றபையும் சேர்ந்துகொள்ள டைப் டூ டயாபடிஸ், உடல் பருமன், பிசிஓடி, ஃபேட்டி லிவர் போன்ற பிரச்சனைகள் தோன்றுகின்றன.
இந்த வியாதிகளில் முக்கியமாக இருக்கும் டயாபடிஸுக்கு சிகிச்சையுடன் மாவுச்சத்தை குறைக்க வேண்டும் என்பதே உணவு முறை சார்ந்த முதல் மாற்றம். பேலியோ உணவு முறையிலும் மாவுச்சத்தை குறைத்து உண்பதே அடிப்படை. 300 கிராம் மாவுச்சத்து எனும் ஆபத்தான அளவுகளில் சாப்பிட்டவர்களை 50 கிராம் என்ற அளவில் – காய்கறிகள், கடலை மற்றும் நட்ஸ், பால், முட்டை, மாமிசம் போன்றவற்றை வைத்து – உருவாக்கும் உணவு அட்டவணையில் நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவுகள் நன்றாக கட்டுக்குள் வரும்” என்கிறார் டாக்டர் பரூக் அப்துல்லா.
மேலும், “இந்த உணவு முறையோடு சேர்த்து தினமும் உடற்பயிற்சி, கூடவே முறையான தூக்கம், உட்கொள்ளப்பட வேண்டிய நீரின் அளவு எல்லாம் சரியாக கடைபிடிக்கபட வேண்டும். ஏற்கனவே இருக்கும் பிரச்சனைகளுக்கான மாத்திரைகளையும் நிறுத்தாமல் உட்கொள்ள வேண்டும். மருத்துவம் சார்ந்த பிரச்சனைகள் இருப்பின் மருத்துவரிடம் பரிந்துரை பெற்று அதற்குத் தேவையான சிகிச்சை மற்றும் உணவு முறை மாற்றத்தை செய்வதுதான் முறை.
ஆனால், இன்று பலரும் இதை செய்வதில்லை. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்த பரிசோதனைகளை மறு ஆய்வு செய்து வர வேண்டும் என்பதையும் கடைபிடிப்பதில்லை. பேலியோ உணவு முறைக்கு மாறியதும் தங்களுக்கு பல வருடங்களாக இருந்து வரும் பிரச்சனைகள் உடனே மறைந்துவிடும் என்று எண்ணி மாத்திரைகளை தன்னிச்சையாக நிறுத்துகின்றனர்.