பொருளாதார மந்தநிலை காரணமாக அமெரிக்காவில் தொடங்கிய பெரிய நிறுவனங்களின் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் வேகமெடுத்திருக்கின்றன. கடந்த ஒரு வாரத்தை ‘லே ஆஃப் வாரம்’ என்றே அழைக்கலாம். அந்தளவு ஆட்குறைப்புகள். இதன் பாதிப்புகள் எப்படி இருக்கும்? அதை எதிர்கொள்ள தயாராவது எப்படி?
ஃபேஸ்புக் மெட்டா, டுவிட்டர், அமேசான் போன்ற முன்னணி நிறுவனங்கள் 2002 நவம்பரில் தொடங்கி வைத்த ஆட்குறைப்பு நடவடிக்கை சிறு சிறு நிறுவனங்கள் வரை தொடர்ந்து, கடந்த மூன்று மாதங்களில் லட்சக்கணக்கானவர்கள் வேலையிழந்துள்ளார்கள். இதுவரை, 3 லட்சத்து 12 ஆயிரம் ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர் என்று Layoffs.fyi இணையதளம் கூறுகிறது. இதில் மைக்ரோசாப்ட், மெட்டா, அமேசான், ஆல்பாபெட் ஆகிய மூன்று முன்னணி நிறுவனங்கள் மட்டும் 51,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன. 2023 ஜனவரி 1 தொடங்கி 23ஆம் தேதிக்குள் மட்டும் 174 நிறுவனங்களில் இருந்து 56,570 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.
இப்போதும் தொடர்கிறது. மியூசிக் தளமான ஸ்பாடிபை தனது ஊழியர்களில் 6 சதவிகிதம் பேரை நீக்க திட்டமிட்டுள்ளதாக சென்ற வாரம் அறிவித்தது. அதற்கு முன்னதாக, உலகம் முழுவதும் உள்ள தங்கள் ஊழியர்களில் 10 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்தது. அமெரிக்காவின் பிரபல முதலீட்டு வங்கி, நிதி சேவை நிறுவனமான கோல்ட்மென் சச்ஸ் சுமார் 3 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. அமேசான் நிறுவனத்தில் 2002 நவம்பரில் தொடங்கிய ஆட்குறைப்பு நடவடிக்கை இன்னும் தொடர்கிறது. எல்லாவற்றுக்கும் உச்சமாக, கூகுள் தாய் நிறுவனமான ஆல்பாபெட் 12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக கடந்த 19ஆம் தேதி கூகிள் சுந்தர் பிச்சை அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“இதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். பணியாளர்களின் வாழ்க்கையில் இது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது என்னைப் பெரிதும் பாதிக்கிறது. இதற்கான, முழுப் பொறுப்பையும் நானே ஏற்கிறேன்” என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகளவில் அனைத்து முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தொடர்ச்சியான இந்த பணிநீக்க அறிவிப்புகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது இந்தியர்கள்தான். அமெரிக்காவில் மட்டும் 80 ஆயிரம் வரை இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் வேலை இழந்துள்ளனர் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அவர்களில் பெரும்பாலோர் H-1B, L1, L-1B விசாவில் இருப்பவர்கள்.
அமெரிக்காவில் H-1B, L1, L-1B விசாவில் இருப்பவர்கள் வேலை இழந்தால் பதில் வேலை தேடுவதற்கு 60 நாள் அவகாசம் தரப்படும். அந்த 60 நாட்களுக்குள் புதிய வேலையைக் கண்டுபிடிக்கத் தவறினால் அவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும். பின்னர் வெளிநாட்டில் இருந்துதான் அமெரிக்காவில் புதிய வேலைவாய்ப்பைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பது சட்டம்.
இதனால், அமெரிக்காவில் வேலையிழந்த H-1B, L1, L-1B விசா இந்தியர்கள் அடுத்த 60 நாட்களுக்குள் வேறு புதிய வேலையைத் தேடி அமர வேண்டும் அல்லது பெட்டியை கட்டிக்கொண்டு இந்தியா திரும்ப வேண்டி இருக்கும் என்னும் நிலை. அமெரிக்காவில் வேலை இழந்தவர்களுக்கு இந்தியாவில் வேலை கிடைப்பது கடினம் இல்லைதான்; ஆனால், சொந்தமாக வீடு வாங்கியவர்கள், குழந்தைகளை பள்ளிக்கூடங்களில் சேர்த்துள்ளவர்கள் அப்படி துண்டை உதறிவிட்டு எழுந்து வந்துவிட முடியாது. குழந்தைகள் கல்வி பாதிக்கப்படும்.
எனவே, வேலை இழந்துள்ள அமெரிக்க வாழ் இந்தியா்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்வது சிரமமாகியுள்ளதாக தெரிவித்துள்ளனா். இதைக் கருத்தில்கொண்டு, ஹெச்1பி விசா வைத்துள்ளவா்களைப் பணி நீக்கம் செய்யும் கால அவகாசத்தைத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நீட்டிக்க வேண்டுமெனவும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதற்கு மாற்று வழி இல்லையா?
‘இருக்கிறது’ என்கிறார் ஆண்டி ஜே. செமோடியுக். யு.எஸ். மற்றும் கனேடிய குடிவரவு வழக்கறிஞரான ஆண்டி ஜே. செமோடியுக் முன்னாள் ஐநா நிருபர்; தற்போது, கனடாவில் டொராண்டோவில் உள்ள பேஸ் சட்ட நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
“வேலை இழந்தவர்கள் 60 நாட்கள் கடந்தும் அமெரிக்காவில் தங்கி வேலை தேட விரும்பினால் H-1B, L1, L-1B விசா நிலையில் இருந்து B-1, B-2 நிலைக்கு மாற விண்ணப்பிக்க வேண்டும். அதை குறிப்பிட்ட 60 நாள்கள் முடிவதற்குள் செய்ய வேண்டும். அந்த விண்ணப்பத்தில், ஏன் அதிக நேரம் தேவைப்படுகிறது என்பதற்கான உண்மையான காரணத்தை குறிப்பிட வேண்டும். அல்லது அமெரிக்கா அருகிலேயே இருக்கும் கனடாவுக்கு சென்று அங்கிருந்து அமெரிக்க வேலை வாய்ப்பை முயற்சிக்கலாம்” என்கிறார் செமோடியுக்.
இன்னொரு வழி, ‘ஏற்கெனவே இருந்த வேலைக்கு நிகரான ஒரு வேலையை மட்டும் தேடுவதை விட்டுவிட்டு, விசாவை தக்கவைத்துக்கொள்ள சம்பளம் குறைந்தாலும் பரவாயில்லை என அமெரிக்காவிலேயே சாத்தியமான ஒரு வேலைக்கு மாறலாம்’ என்கிறார்கள், இதுபோன்ற நிலையை ஏற்கெனவே கடந்துவந்தவர்கள்.
இதனிடையே, பணி நீக்கம் செய்யப்பட்ட இந்தியர்கள் பலரும் இணைந்து ஒரு வாட்ஸ் அப் குரூப்பினை உருவாக்கியுள்ளனர். அதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகளை தேட ஒருவருக்கொருவர் உதவி வருகின்றனர்.
பொருளாதார மந்தநிலை என்பது நிரந்தரமானது இல்லை. பத்தாண்டுகளுக்கு ஒருமுறை வந்துசெல்வதுதான். எனவே, நிலமை சீராகும்வரை அமெரிக்காவில் அவர்கள் தாக்குபிடித்துவிட்டால், அவர்கள் கனவு காணும் அமெரிக்க வாழ்க்கை சாத்தியம்தான்.
கொசுறு தகவல்: இந்த பொருளாதார மந்தநிலையும் ஆட்குறைப்பு நடவடிக்கையும் இந்தியாவை பாதிக்காது என்று சொல்லப்பட்டு வந்தநிலையில், இந்தியாவின் பிரபல ஐ.டி. நிறுவனமான விப்ரோ 452 பேரை பணி நீக்கம் செய்து, இந்தியாவுக்குள்ளும் ஆட்குறைப்பை அழைத்து வந்துள்ளது. ஜூனில் இருந்து பொருளாதார மந்தநிலையின் பாதிப்புகள் இந்தியாவிலும் தெரிய ஆரம்பிக்கும் என்று மத்திய அரசும் ஒப்புக்கொண்டுள்ளது. எனவே, அமெரிக்கா வாழ் இந்தியர்கள் மட்டுமல்ல இந்தியா வாழ் இந்தியர்களும் வரும் நெருக்கடிக்கு தயாராக வேண்டும்.