No menu items!

8 மாதத்தில் 6 கேப்டன்கள் : குழப்பத்தில் இந்திய அணி

8 மாதத்தில் 6 கேப்டன்கள் : குழப்பத்தில் இந்திய அணி

அதிமுக மட்டுமல்ல, இந்திய கிரிக்கெட்டுக்கும் இப்போது ஒற்றைத் தலைமை அவசியமாகிறது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணியால் வெல்ல முடியாமல் போனது இதற்கான அவசியத்தை உணர்த்தியுள்ளது. அடுத்தடுத்து 12 டி20 போட்டிகளில் வென்றிருந்த இந்திய அணி, தென் ஆப்பிரிக்க தொடரின் முதல் டி20-யில் தோற்றதன் மூலம், தனது வெற்றிப் பயணத்தை முடித்ததற்கும் தலைமை மாற்றம் ஒரு முக்கிய காரணம்.

தோனியும், கோலியும் இந்திய கேப்டன் பதவியை தொடர்ந்து ஆக்கிரமித்த நிலையில், கேப்டன் பதவியில் இருந்து கோலி மாற்றப்பட்ட பிறகு இந்திய டி20 அணிக்கு ரோஹித் சர்மா, ஷிகர் தவன், கே.எல்.ராகுல், ரிஷப் பந்த் என 4 கேப்டன்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

இது போதாதென்று அயர்லாந்து அணிக்கு எதிரான தொடருக்கு 5-வது கேப்டனாக ஹர்த்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இப்படி கடந்த 8 மாதங்களில் மட்டும் இந்திய அணிக்கு 6 கேப்டன்கள் மாறியுள்ளனர்.

இந்த ஆண்டின் இறுதியில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இதற்காக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகின்றன. ஆனால் இந்தியா மட்டும் தொடர்ந்து ஸ்திரமில்லாமல் குழப்பத்துடன் இருக்கிறது.

உலகக் கோப்பையை பொறுத்தவரை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாதான் என்பதில் தேர்வுக் குழுவினர் உறுதியாக உள்ளனர். ஆனால் அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மாவுடன் களமிறங்கப் போவது கே.எல்.ராகுலா, விராட் கோலியா அல்லது இஷான் கிஷனா என்பது முடிவாகவில்லை.

மத்திய வரிசை ஆட்டக்காரர்களாக யாரை இறக்குவது, வேகப்பந்து வீச்சில் பும்ராவுக்கு துணையாக யாரையெல்லாம் பயன்படுத்துவது?. அஸ்வின், ஜடேஜா, சாஹல், அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோரில் அணியில் இடம்பிடிக்கப் போகும் 2 சுழற்பந்து வீச்சாளர்கள் யார் என்பது பற்றியெல்லாம் இன்னும் முடிவெடுக்காமல் உள்ளனர்.

அதேபோல் விக்கெட் கீப்பராக யாரை ஆடவைப்பது என்பதிலும் கேள்வி எழுந்துள்ளது இந்திய அணியின் முன்னணி விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த், கடந்த சில ஆட்டங்களாகவே பேட்டிங்கில் சொதப்பி வருகிறார். அதே நேரத்தில் மற்றொரு விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக், கடந்த சில ஆட்டங்களாகவே சிறந்த பினிஷராக ஜொலித்து வருகிறார். எனவே ரிஷப் பந்த்துக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை அணியில் சேர்க்கவேண்டும் என்ற குரலும் எழுந்து வருகிறது. இந்த விஷயத்திலும் தேர்வுக்குழு இன்னும் முடிவெடுக்காமல் உள்ளது.

உலகக் கோப்பைக்கு 6 மாதங்களுக்கு முன்பே அதற்கான அணியைத் தேர்ந்தெடுத்து போட்டிகளில் ஆடி வீரர்களிடையே ஒருமித்த மனப்பான்மையை ஏற்படுத்த வேண்டும். ஆனால் தொடருக்கு தொடர் கேப்டனையும், வீரர்களையும் மாற்றுவது அணிக்கு பலவீனத்தைத்தான் ஏற்படுத்தும் என்பது உண்மை.

இந்திய அணியின் கேப்டன் அடிக்கடி மாற்றப்படுவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ள பயிற்சியாளர் ராகுல் திராவிட், “8 மாதத்தில் 6 கேப்டன்களுடன் பணியாற்ற வேண்டியிருக்கும் என்று நான் நிச்சயமாக நினைக்கவில்லை. கரோனா வைரஸ், இந்திய அணி ஆடும் ஆட்டங்கள் அதிகரித்தது, வீரர்களுக்கு தேவையான ஓய்வை வழங்கும் பிசிசிஐயின் திட்டம் ஆகியவை இதற்கு காரணமாக இருந்தது. குறுகிய காலத்தில் பல கேப்டன்கள் மற்றும் வீரர்களை வைத்துக்கொண்டு ஆடுவது எனக்கு மிகவும் சவாலானதாக உள்ளது. இது எனக்கு சவாலானதாக இருந்தாலும் புதிய இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதாக உள்ளது” என்றார்.

வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதும் சோதனை முயற்சிகளில் இறங்குவது சரிதான். ஆனால் அந்த சோதனைகளை எல்லாம் டி20 உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு வைத்துக்கொள்ளலாமே என்பதுதான் சராசரி ரசிகனின் கேள்வி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...