45 நாட்களில் இங்கிலாந்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் லிஸ் ட்ரஸ். இங்கிலாந்து வரலாற்றில் இத்தனை குறைவான காலம் பிரதமராக இருந்தது லிஸ்தான். இதன் மூலம் இங்கிலாந்து வரலாற்றில் இடம் பிடித்துவிட்டார்.
நம்ம வம்சாவளி ரிஷி சுனாக்கை தோற்கடித்து பிரதமர் ரேசில் வென்றவர் லிஸ். இத்தனை சீக்கிரம் அவர் ராஜினாமா செய்ய வேண்டியதற்கான முக்கியமான காரணம் அவர் ஆட்சியிலிருந்த 45 நாட்களில் நடந்த பொருளாதார குளறுபடிகள்.
45 நாட்களில் நாட்டில் பொருளாதாரத்தில் குளறுபடி செய்ய முடியுமா என்றால் முடியும் என்று நிருபித்து தான் சார்ந்த கன்சர்வேடிவ் கட்சியை குழப்பத்தில் நிறுத்திர்யிருக்கிறார்.
“கொடுத்த வாக்குறுதிகளை என்னால் நிறைவேற்ற இயலவில்லை, அதனால் ராஜினாமா செய்கிறேன்’ என்று தனது ராஜினாமா குறித்து தெரிவித்திருக்கிறார் லிஸ்.
பதவி ஏற்கும்போது இங்கிலாந்தின் பொருளாதார சிக்கல்களை தீர்ப்பேன், வரிகளை குறைப்பேன் என்று தெரிவித்திருந்தார் லிஸ். பதவியேற்ற சில வாரங்களில் இடைக்கால பட்ஜெட் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. அந்த பட்ஜெட்டில் பல வரி சலுகைகள் வழங்கப்பட்டன. சுமார் 50 பில்லியன் டாலர் அளவுக்கு வரிகள் குறைக்கப்பட்டன. நமது ரூபாய் மதிப்பில் பார்த்தால் சுமார் 4 லட்சம் கோடி. இந்த வரிகளுக்கான தொகையை அரசு எப்படி ஈடு செய்யப் போகிறது என்பதற்கான எந்தக் குறிப்பும் பட்ஜெட்டில் இல்லை. இத்தனைப் பெரிய தொகைக்கு வரிகளை குறைத்தது இங்கிலாந்து நாட்டின் பங்கு சந்தையில் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பங்குகள் வீழ்ச்சியடைந்தன. இங்கிலாந்து பவுண்டின் மதிப்பு குறைந்தது. எதிர்க் கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன. சொந்தக் கட்சியான கன்சர்வேடிவ் கட்சியிலேயே கடுமையான எதிர்ப்புகள் வந்தன. வேறு வழியில்லாமல் ட்ரஸ்ஸின் நிதியமைச்சர் க்வாசி க்வார்டங் ராஜினாமா செய்தார். வரிகளை மீண்டும் 25 சதவீதம் அளவுக்கு உயர்த்தினார் ட்ரஸ். இந்த நடவடிக்கைகளெல்லாம் அவருக்கு பின்னடைவைத் தந்தன.
புதிய நிதியமைச்சராக ஜெர்மி ஹண்ட் நியமிக்கப்பட்டார். அவர் ட்ரஸ் நிர்வாகம் எடுத்திருந்த அனைத்துப் பொருளாதார முடிவுகளையும் மாற்றினார். இது மேலும் இங்கிலாந்து பொருளாதாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்தக் குழப்பங்களைக் காரணம் காட்டி அமைச்சரவையிலிருந்து இந்திய வம்சாவளியைச் சார்ந்த சுயல்லா பிரேவர்மென் ராஜினாமா செய்தார். அமைச்சரவை பொறுப்பேற்று சில வாரங்களிலேயே இரண்டு அமைச்சர்கள் ராஜினாமா செய்தது ட்ரஸ்க்கு மேலும் அழுத்தத்தை தந்தது. கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்புகள் கிளம்ப, பிரதமர் பதவியையும் கன்சர்வேடிவ் கட்சி தலைவர் பதவியையும் ராஜினாமா செய்தார் ட்ரஸ்.
இப்போது அடுத்தப் பிரதமர் யார் என்ற ரேஸ் மீண்டும் இங்கிலாந்தில் துவங்கியிருக்கிறது.
இந்திய வம்சாவளி ரிஷி சுனக் மீண்டும் ரேஸில் இருக்கிறார் என்கிறார்கள். இரண்டு மாதங்களுக்கு முன் ராஜினாமா செய்த போரிஸ் ஜான்சனும் ரேசில் இருக்கிறார் என்று கூறி அதிர்ச்சி தருகிறார்கள். இந்த ரேஸ் இன்னும் ஒரு வாரம் இருக்கும். அடுத்த வெள்ளிக்குள் அடுத்தப் பிரதமரை கன்சர்வேடிவ் கட்சி தேர்வு செய்துவிடும்.
45 நாட்கள் பதவியிலிருந்த லிஸ் ட்ரஸை பதவியில் நியமித்தவர் ராணி எலிசபெத். தனது பதவி விலகல் கடிதத்தை கொடுத்தது புதிய மன்னர் சார்லஸிடம். இதிலும் ட்ரஸ் சாதனைதான்.