No menu items!

ப்ரின்ஸ் – சினிமா விமர்சனம்

ப்ரின்ஸ் – சினிமா விமர்சனம்

‘இந்தியர் யாவரும் என் உடன்பிறந்த சகோதர சகோதரிகள்’

இப்படி பள்ளிக்கூடங்களில் நாம் எடுத்து கொண்டிருக்கும் உறுதிமொழியின்படி பார்த்தால், இங்கு நாம் யாரும் பெண் எடுக்கவும் முடியாது. கொடுக்கவும் முடியாது. மாப்பிள்ளை பார்க்கவும் முடியாது.

தேசப்பக்திக்காக, தேச ஒற்றுமைக்காக ஒட்டுமொத்த இந்தியாவும் எடுத்துகொண்ட உறுதிமொழியில் இருக்கும் ஜெயண்ட் வீல் சைஸிலான லாஜிக் ஓட்டையை வைத்து, டிவியில் பிரபலமான ’அது இது எது’-வை கொஞ்சம் காஸ்ட்லி பட்ஜெட்டில் எடுத்து வைத்திருக்கிறார்கள்.

சோஷியல் சையின்ஸ் டீச்சர் சிவகார்த்திகேயன். தமிழ் ஆசிரியை மரியா. அழகில் மெல்லினமாகவும், பேச்சில் மெல்லினமாகவும் இருக்கும் மரியாவைப் பார்க்கிறார். அந்த மைக்ரோ செகண்ட்டிலேயே காதல் சிவகார்த்திகேயன் இதயத்திற்குள் வைரஸைப் போல தீவிரமாக தாக்கிவிடுகிறது;.

அதே காதல் வைரஸ் கொஞ்ச நாட்களில் மரியாவையும் தாக்கிவிடுகிறது. ஓகே ரூட் க்ளியர் என்று சிவகார்த்திகேயனும், மரியாவும் டூயட் பாடுகிறார்கள். என்னடா கதையும் இல்லை, புரட்டிப் போடுகிற திரைக்கதையும் இல்லை. சொல்லிக்கொள்கிற மாதிரி வில்லனும் இல்லை. அப்புறம் என்னதான் பண்ண போகிறார்கள் என்று நினைக்கும் போது, ‘லகான்’, ’டங்கல்’ வகையறாப் படங்களில் வரும் தேசப்பக்தியை எல்லாம் ஓவர் டேக் செய்திருக்கும் ‘க்ரிஞ்ச்’ வகையறா தேசப்பற்றை தூக்கி ட்ராக்கில் வைத்திருக்கிறார் இயக்குநர் அனுதீப்.

அப்புறம் என்ன ஒரு சின்ன கலாட்டா. ப்ரிட்டிஷ் பெண் இந்தியாவின் மருமகளாகிறார். நம்மூர் மாப்பிள்ளை ப்ரின்ஸ் ஆகிறார். அவ்வளவுதான்.

சிவகார்த்திகேயனுக்கு ட்ரேட்மார்க் காமெடி கேரக்டர். அதனால் எதுவும் மிஸ்ஸாகவில்லை. பாடல்களில் சிவகார்த்திகேயன் லேட்டஸ்ட் விஜயைப் போலவே ஆட்டம் போட்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவுக்கு வோட்கா தேசத்திலிருந்து இறக்குமதியாகி இருக்கும் மரியா இன்னும் கொஞ்சம் ஃப்ரீயாக நடித்திருக்கலாம். இன்னும் இரண்டு மூன்று படங்கள் நடித்து ரிலாக்ஸானால், பான் – இந்தியா படங்களில் ஒரு ரவுண்ட் அடிக்கலாம்.

சத்யராஜ் கொடுக்கும் பில்டப்பும், பின்பு மூக்குடைப்படுவதும் காட்சிகளை சுவாரஸ்யமாக்குகிறது

கதையைப் பற்றி யோசிக்காத டைரக்டர் அனுதீப் அண்ட் கோ வசனங்களில் அராஜகம் செய்திருக்கிறார்கள்..

’இவர்தான் என் அப்பா. என்னைவிட வயசுலக் மூத்தவர்’ என்று சத்யராஜூக்கு சிவகார்த்திகேயன் கொடுக்கும் அறிமுகம்.

‘உங்கப்பா உலகநாதனோட பேரு என்னன்னு கேட்டேன். உலகநாதன்னு டக்குன்னு சொல்லிட்டான்’ என கூட்டத்தில் ஒருத்தர் கமெண்ட் அடிப்பது.

காய்கறி கடையில் மூன்று நிமிடம் ஓடும் ‘பாட்டில் கார்ட்’ காமெடி என எல்லாமும் இன்ஸ்டண்ட் காமெடியாக ரசிக்க வைக்கிறது.

தமிழ் கற்றுக்கொடுக்கிறேன் என்று சொல்லும் சத்யராஜிடம், சிவகார்த்திகேயனின் ரிங்டோனாக அடிக்கும் ‘கும்முறுடுப்புறு’வுக்கு என்ன அர்த்தம் என்று மரியா கேட்கும் காட்சி செம ரகளை.

’நீ பிறந்ததும் உன்னை உங்கம்மாவுக்குப் பக்கத்துல போடாம வேறு தொட்டிலுல நர்ஸ் போட்டிருந்தா உன்னோட ஜாதி வேற’ என்று சத்யராஜ் சிரீயஸாக பேசிக்கொண்டிருக்கும் போது கூட்டத்தில் ஒருவர் ‘நான் ஹோம் டெலிவரி’ என்று கமெண்ட் அடிப்பது. என தியேட்டரை குலுங்க வைத்திருக்கிறார்கள்.

‘பிம்பிலிக்கி பிலாப்பி’, ‘ஜெஸிகா’ பாடல்களில் தமன் கையிலிருக்கும் எல்லா இசைக்கருவிகளையும் ஹை டெம்போவில் இறக்கி விட்டிருக்கிறார்.

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு பாடல்களில் மட்டும் அமர்க்களம்.
ஒரு கமர்ஷியல் ஹீரோ. அழகான ஹீரோயின். காமெடி ப்ளஸ் பாட்டு. இந்த மூன்று சமாச்சாரங்கள் இருந்தால் போதும். வேறு எதை பற்றியும் யோசிக்கவே மாட்டேன் என்று இயக்குநர் உறுதிமொழி எடுத்திருப்பார் போல. ஒரு எக்ஸ்ட்ரா பாப் கார்ன் பக்கெட்டை வாங்கிவிட்டு, அதிலிருந்து ஒவ்வொன்றாக உள்ளே தள்ளிவிட்டு ஒன்னரை மணி நேரம் யோசித்தாலும் கூட சிவகார்த்திகேயன் எதை கேட்டு இம்ப்ரஸ் ஆகியிருப்பார் என்று யூகிக்க முடியவில்லை.

சின்னதிரைக்குப் போட்டியாக வெள்ளிதிரையில் இந்த ப்ரின்ஸ் – காமெடி வித் கோமாளி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...