ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முதன்முறையாக இந்தியா 100க்கு மேல் பதக்கங்களை வென்றுள்ளதை மத்தியில் ஆளும் மோடியின் வெற்றியாக பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். அதே நேரம், விளையாட்டுக்கான மத்திய அரசின் ஊக்கத்தொகையை அதிகம் பெற்ற குஜராத் மாநிலத்தில் இருந்து ஒரு வீரர்கூட பதக்கம் வெல்லாததையும், மத்திய அரசின் தொகையை மிகக் குறைவாக பெற்ற தமிழ்நாடு 17 பதக்கங்கள் வென்றுள்ளதையும் சுட்டிக்காட்டி குஜராத் மாடல் Vs திராவிட மாடல் மோதல் சமூக வலைதளங்களில் சூடுபிடித்துள்ளது.
107 பதக்கங்கள் வென்ற இந்தியா
சீனாவில் கடந்த செப். 23ஆம் தேதி தொடங்கிய 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் அக்டோபர் 8ஆம் தேதி முடிவுற்றது. 61 பிரிவுகளில் 40 விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. 45 நாடுகளைச் சேர்ந்த 12,000 வீரர்கள் பங்கேற்றனர். இதில், இந்தியாவில் இருந்து 38 விளையாட்டுகளில் 634 வீரர்கள் பங்கேற்றனர்.
இந்த 634 வீரர்களும் ஆசிய விளையாட்டு போட்டிகள் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை தங்களது அபார திறமைகளை வெளிப்படுத்தி சாதனை படைத்துள்ளனர். 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்ளை இந்தியா வேட்டையாடி வந்தது. இதற்கு முன்னர் வரை, கடந்த 2018ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில் இந்தியா 70 பதக்கங்களை வென்றிருந்ததே அதிகபட்சமாக இருந்து வந்தது. இந்நிலையில், இவ்வருடம் இந்திய வீரர்கள் 107 பதக்கங்களை வென்றதால் பலரும் பாராட்டு தெரிவித்தனர். இந்திய பிரதமர் மோடிகூட, ‘நமது வியக்கத்தக்க விளையாட்டு வீரர்கள் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 107 பதக்கங்களை வென்றதில் ஒட்டுமொத்த நாடும் மகிழ்ச்சியில் திளைக்கிறது’ எனத் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து இதை மத்திய அரசின் வெற்றியாக கொண்டாடி வந்தனர் பாஜகவினர். இந்நிலையில்தான், எதிர்பாராத திருப்பமாக, மத்திய அரசின் ஊக்கத்தொகையை மிக அதிகமாக பெற்ற குஜராத் மாநில விளையாட்டுத் துறை ஒரு பதக்கம்கூட வெல்லாததை திமுகவினர் பேசுபொருளாக்கியுள்ளனர்.
குஜராத் மாடல் Vs திராவிட மாடல் மோதல்
ஆசிய விளையாட்டில் மாநிலம் வாரியாக வென்ற வீரர், வீராங்கனைகளின் பதக்கப் பட்டியலையும், அம்மாநில விளையாட்டுத் துறைகளுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதிப் பட்டியலையும் வெளியிட்டு இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர் திமுகவினர்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா பெற்ற 107 பதக்கங்களில் ஹரியானா (44), பஞ்சாப் (32), மகாராஷ்டிரா (31), உத்தரப்பிரதேசம் (21), தமிழ்நாடு (17), மேற்கு வங்கம் (13), ராஜஸ்தான் (13), கேரளா (11), மத்தியப் பிரதேசம் (10), மணிப்பூர் (9), ஆந்திரப் பிரதேசம் (9), இமாச்சல் பிரதேசம் (7), தெலங்கானா (7), டெல்லி (7), கர்நாடகா (6), ஜார்க்கண்ட் (4), ஒடிசா (3), அசாம் (2), உத்தரகாண்ட் (2), மிசோரம் (1) ஆகிய மாநிலங்கள் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளன.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் எந்தவொரு பதக்கத்தையும் ஆசிய விளையாட்டில் நாட்டுக்கு பெற்றுத் தரவில்லை. ஆனால், ஒரு பதக்கம்கூட வெல்லாத குஜராத் மாநில விளையாட்டுத் துறைக்கு மத்திய அரசு மற்ற மாநிலங்களைவிட மிக அதிகமாக ரூ. 608.37 கோடி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு விளையாட்டுத் துறைக்கு 33 கோடி ரூபாய் மட்டும்தான் வழங்கப்பட்டுள்ளது என்பதுடன் ஒப்பிட்டு, குஜராத் மாநிலம் எவ்வளவு அதிகமாக பெற்றுள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம்.
மத்திய அரசின் விளையாட்டுக்கான ஊக்கத்தொகை பட்டியலில் குஜராத் மாநிலம்தான் முதலிடத்தில் உள்ளது. இந்தியா முழுமைக்கும் ஒதுக்கப்பட்ட தொகை 2754 கோடி ரூபாய். இதில் கிட்டத்தட்ட கால் பங்கு குஜராத்துக்கு மட்டுமே வாரி வழங்கப்பட்டுள்ளது. ஹரியணா, பஞ்சாப், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், கர்நாடகா ஆகிய ஆறு மாநிலங்களுக்கும் கொடுக்கப்பட்ட மொத்தத் தொகை குஜராத் என்ற ஒரு மாநிலத்துக்கு மட்டுமே தரப்பட்டுள்ளது.
குஜராத்தைத் தொடர்ந்து பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம் ரூ. 503.02 கோடி தொகையுடன் 2வது இடத்தில் உள்ளது. உத்தரப் பிரதேசமாவது 21 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது.
‘பதக்கப் பட்டியலில் உ.பி.க்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாடு 17 பதக்கங்களைப் பெற்றுள்ளது. ஆம், ஆசிய விளையாட்டுப் போட்டியில் அதிக பதக்கங்களைப் பெற்ற மாநிலங்களில் தமிழ்நாடு 5வது இடம் பிடித்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறைக்காக மத்திய அரசு வழங்கிய தொகை ரூ. 33 கோடிதான். குஜராத்துடன் ஒப்பிட ரூ. 575 கோடி குறைவு; உபியுடன் ஒப்பிட ரூ. 470 கோடி குறைவு. இந்தளவு குறைவான தொகையை வைத்துக்கொண்டே, தமிழ்நாடு இந்த அளவுக்கு விளையாட்டுத் துறையில் சிறப்பாக முன்னேறியிருப்பதை சுட்டிக்காட்டி பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த ரூ.33 கோடி நிதி உதவியை வைத்துக்கொண்டுதான், தமிழ்நாடு செஸ் ஒலிம்பியாட் போட்டியை உலகம் புகழும் வகையில் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது’ என்கின்றனர் திமுகவினர்.
இன்னொரு பக்கம் விளையாட்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு பாரபட்சம் காட்டியிருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துவருகிறது. ‘மத்திய அரசு அதிகளவில் கொட்டிக் கொடுத்த மாநிலங்கள் எல்லாம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கங்களை அள்ளி வந்திருக்கின்றனவா?’ என இணையவாசிகளும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
‘ரு. 33 கோடி பெற்ற தமிழ்நாடு வென்ற பதக்கங்கள் 17; ரு. 608 கோடி பெற்ற குஜராத் வென்ற பதக்கங்கள் 0; இந்தியாவுக்கு தேவை குஜராத் மாடலா? திராவிட மாடலா?’ என்றும்,
‘குஜராத்தில் 34,699 அரசுப் பள்ளிகள் உண்டு. அதில் 5501 பள்ளிகளில் விளையாட்டு வசதியே கிடையாது. 8000 தனியார் பள்ளிகள் உண்டு. அதில் 5500 பள்ளிகளில் விளையாட்டு மைதானமே கிடையாது. சுமார் 25 ஆண்டுகளாக குஜராத்தில் பாஜகதான் ஆட்சி செய்து வருகிறது. அதில் சுமார் 14 ஆண்டுகள் மோடி ஆட்சி என்பது உபரித் தகவல்’ என்றும்,
இந்த விவாதத்தை திமுக ஆதரவாளர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
விளையாட்டுப் போட்டிகளை வைத்து ஒரு அரசியல் விளையாட்டு.