பிரபல ஐடி நிறுவனமான விப்ரோ நேற்று 300 ஊழியர்களை ஒரே நாளில் பணி நீக்கம் செய்துள்ளது. இந்த 300 ஊழியர்களும் மூன்லைட்டிங்கில் ஈடுபடுபட்டதாலேயே வேலையில் இருந்து நீக்கப்பட்டதாக காரணம் கூறியிருக்கிறது விப்ரோ. இதைத்தொடர்ந்து மூன் லைட்டிங் என்றால் என்ன? வேலையை வீட்டு நீக்கும் அளவுக்கு அது மிகப்பெரிய தவறா என்ற கேள்வி எழுந்துள்ளது.
முதலில் மூன்லைட்டிங் – Moonlighting – என்றால் என்ன என்று தெரிந்துகொள்வோம்…
ஒரு ஊழியர் தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் தனது வேலை நேரம் முடிந்த பின் வேறு நிறுவனத்தில் முழு நேரமாகவோ பகுதி நேரமாகவோ வேலை பார்ப்பதை மூன் லைட்டிங் என்கிறார்கள். அதாவது தாங்கள் வேலை செய்யும் நிறுவனம் தவிர வேறு நிறுவனங்களிலும் அதே வேலையை செய்வது மூன்லைட்டிங் என அழைக்கப்படுகிறது.
கொரோனா காலத்தில்தான் இந்த கலாச்சாரம் அதிக அளவில் பிரபலமானது. இந்த காலகட்டத்தில் பல நிறுவனக்கள் தங்கள் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை பார்க்கும் முறையை அறிமுகப்படுத்தின. இந்த வொர்க் ஃபரம் ஹோம் காலகட்டத்தில் பலர் மற்றொரு வேலையையும் பார்க்க தொடங்கியுள்ளனர். இப்போது பொதுமுடக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு அலுவலகம் வந்து பணிபுரிய அழைக்கும்போது கூட 80% ஊழியர்கள் அலுவலகங்களுக்கு வர மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு இந்த மூன்லைட்டிங் முறையில் 2 நிறுவனங்களில் பலர் பணியாற்றி வருவது முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் இப்படி பணியாற்றுவதை ஏற்றுக்கொள்கின்றன. பல நிறுவனங்கள் இதை ஏற்றுக்கொள்வதில்லை. தொழிலாளர்களின் கவனம் சிதறும், நிறுவனத்தின் ரகசியங்கள் கசியும் என்று இதற்கு பல காரணங்களைக் கூறுகின்றன.
மூன்லைட்டிங் கலாச்சாரம் ஊழியர்களிடையே அதிகரித்து வருவதற்கு அடிப்படைக் காரணம் வேலையில் சேரும்போது ஏற்படும் குழப்பம்தான். சில நிறுவனங்கள் ஊழியரை தேர்ந்தெடுக்கும்போது மூன் லைட்டிங் கூடாது என்று நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் சொல்லி ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கி விடுகிறார்கள். ஆனால் சில நிறுவனங்கள் இதை பற்றி பெரிய அழுத்தம் தருவதில்லை. உதாரணமாக ஸ்விக்கி நிறுவனம் தங்களது ஊழியர்களை மற்ற நிறுவனங்களில் வேலை பார்க்க சில நிபந்தனைகளுடன் அனுமதிக்கிறது.
உடல் உழைப்பு தொழில் போல் இல்லாமால் மூளை உழைப்பை கேட்கும் ஐடி துறைக்கு இந்த மூன் லைட்டிங் இப்போது ஆபத்தாகவே பார்க்கப்படுகிறது. பல ஐடி நிறுவன தலைவர்கள் இப்போது மூன் லைட்டிங்கிற்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மூன் லைட்டிங்கால் ஊழியர்களுக்கு சில நன்மைகள் இருக்கின்றன. தங்கள் அறிவை வளர்க்கவும், கூடுதலாக சம்பாதிக்கவும் அவர்களுக்கு மூன்லைட்டிங் உதவுகிறது. அதே நேரத்தில் தங்களுக்கென்று அவர்கள் ஒதுக்கிக்கொள்ள நேரமில்லாமல் அதாவது வேலை – வாழ்க்கை சமனாக இல்லாமல் இருப்பது அவர்களது குடும்ப வாழ்க்கையை பாதிக்கிறது. வேலையையும், வாழ்க்கையையும் பாதிக்காத வகையில் ஊழியர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.