இங்கிலாந்துக்கு எதிராக இன்று தொடங்கிய டெஸ்ட் போட்டியில் அறிமுக வீர்ராக களம் இறங்கியிருக்கிறார் ஆகாஷ் தீப் சிங். ஆனால் அது செய்தியல்ல. அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே, அதுவும் முதல் பாதியிலேயே இங்கிலாந்தின் 3 டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கி இருக்கிறார் ஆகாஷ் தீப்.
பும்ரா இல்லாததால் சற்று நிம்மதியாக 4-வது டெஸ்ட்டை ஆடவந்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள், இப்போது ஆகாஷ் தீப்பின் பந்துவீச்சில் மிரண்டுபோய் நிற்கிறார்கள். கூடவே யார் இந்த ஆகாஷ் தீப் சிங் என்ற கேள்வி இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் எழுந்திருக்கிறது.
முகமது ஷமி, முகேஷ் குமார் ஆகியோரை இந்திய கிரிக்கெட்டுக்கு தந்த மேற்கு வங்கம்தான் ஆகாஷ் தீப்பையும் இந்திய கிரிக்கெட்டுக்கு தந்திருக்கிறது. ஆனால் ஆகாஷ் தீப் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் இல்லை. அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். அங்குள்ள சசராம் என்ற ஊரில் பிறந்தாவர். ஆகாஷ் தீப்பின் அப்பா ஒரு பள்ளி ஆசிரியர். தன் மகன் படித்து முடித்து பெரிய வேலைக்கு செல்லவேண்டும் என்று விரும்பியிருக்கிறார். ஆனால் ஆகாஷ் தீப் சிங்குக்கு படிப்பைவிட கிரிக்கெட்டில்தான் ஆர்வம் இருந்திருக்கிறது.
ஆகாஷ் தீப்பின் கிரிக்கெட் ஆசை அவரது அப்பாவுக்கு பிடிக்காமல் போக, ஆகாஷின் மாமா அவருக்கு கைகொடுத்திருக்கிறார். அவர்தான் கிரிக்கெட் பயிற்சி மையத்தில் சேர்ப்பதற்காக 14 வயதில் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள துர்காபூருக்கு ஆகாஷ் தீப்பை அழைத்து வந்திருக்கிறார். அங்கு மாமாவின் கண்காணிப்பில் வளர்ந்த ஆகாஷ் தீப் சிங், முறையான கிரிக்கெட் பயிற்சிகளை பெற்றுள்ளார்.
கிரிக்கெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வந்த காலத்தில் ஒரு நாள் ஆகாஷ் தீப்பின் அப்பாவுக்கு பக்கவாதம் வந்து சில நாட்களில் இறந்தார். அப்பா இறந்த சில நாட்களிலேயே அண்ணனும் இறக்க குடும்ப பொறுப்பு ஆகாஷ் தீப்பின் தலையில் விழுந்தது.
அம்மாவை பார்த்துக் கொள்வதற்காக அடுத்த 3 ஆண்டுகள் கிரிக்கெட்டை விட்டு வேலைக்கு போனார் ஆகாஷ் தீப் சிங். தன் அம்மாவுக்கு தேவையான விஷயங்களை ஓரளவுக்கு செய்து கொடுத்த பிறகுதான் அவர் மீண்டும் கிரிக்கெட் ஆட வந்திருக்கிறார். 2019-ம் ஆண்டில் 23 வயதுக்கு உட்பட்ட மேற்கு வங்க அணியில் இணைந்த ஆகாஷ் தீப் சிங், அதன்பிறகு ஐபிஎல்லில் தன் திறமையைக் காட்டி இன்று இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.
தன் மகன் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் ஆடுவதைப் பார்க்க, இன்று அவரது அம்மா லட்டுமா தேவியும் கிரிக்கெட் மைதானத்துக்கு வந்திருந்தார். இந்திய அணிக்கான அதிகாரபூர்வ தொப்பியை பயிற்சியாளர் ராகுல் திராவிட்டிடம் இருந்து வாங்கிய பிறகு, அதன் அம்மாவின் காலில் விழுந்து ஆகாஷ் தீப் வணங்கியபோது பலரது கண்களும் குளமானது.