No menu items!

2024 Good News – உலகில் சிகரெட் பழக்கம் குறைகிறது

2024 Good News – உலகில் சிகரெட் பழக்கம் குறைகிறது

சர்வதேச அளவில் மக்களின் புகை பிடிக்கும் பழக்கத்தைப் பற்றிய அறிக்கை ஒன்றை சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. உலக அளவில் புகைப்பிடிக்கும் பழக்கம் வேகமாக குறைந்து வருவதாக இந்த அறிக்கை ஒரு குட் நியூஸை சொல்லியிருக்கிறது.

2000-ம் ஆண்டில் மூன்றில் ஒருவர் என்ற அளவில் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை இருந்தது. ஆனால் 2022-ம் ஆண்டில் அது ஐந்து பேருக்கு ஒருவர் என்ற அளவில் குறைந்திருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள மேலும் சில முக்கிய தகவல்கள்…

உலகளாவிய அளவில் 150 நாடுகள் தங்கள் குடிமக்களின் புகைபிடிக்கும் பழக்கத்தை குறைக்க கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளன. அப்படி நடவடிக்கை எடுத்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

இந்தியாவில் 13 முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறார்களிடையேயான புகை பிடிக்கும் பழக்கம் கடந்த 10 ஆண்டுகளில் 42 சதவீதம் குறைந்துள்ளது.

இந்தியாவில் 18 வயதைக் கடந்தவர்களில் 34.6 சதவீதம் பேர் முன்பு புகைபிடிப்பவர்களாக இருந்தனர். இப்போது அது 28.6 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்தியாவில் புகைப் பிடிப்பவர்களுக்கு எதிராக உள்ள சட்டங்கள் மற்றும் சிகரெட் பாக்கெட்களில் 85 சதவீதம் புற்றுநோய் தொடர்பான படங்களை வெளியிடுவது ஆகியவை இதற்கு முக்கிய காரணமாகும். சிகரெட் பழக்கம் குறைந்த அதே நேரத்தில் புகையிலை, குட்கா போன்ற பழக்கம் அதிகரித்து வருவது கவலை தரக்கூடியதாக உள்ளது.

புகைபிடிக்கும் பழக்கத்தை விட்டவர்கள் பட்டியலில் பிரேசில் முதல் இடத்தில் இருக்கிறது. கடந்த 2010-ம் ஆண்டோடு ஒப்பிடும்போது அந்நாட்டில் புகைப் பிடிப்பவர்களின் எண்ணிக்கை 35 சதவீதம் குறைந்துள்ளது. அடுத்ததாக நெதர்லாந்து நாட்டில் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை 30 சதவீதம் குறைந்துள்ளது.

மக்களிடையே புகைபிடிக்கும் பழக்கம் குறைந்து வந்தாலும், புகையிலையால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இப்போதைய நிலவரப்படி உலகில் ஆண்டுதோறும் 80 லட்சம் பேர் புகையிலை பழக்கத்தால் உயிரிழக்கிறார்கள்.

இப்போதைய சூழலில் தென்கிழக்கு ஆசியாவில்தான் புகைபிடிக்கும் பழக்கம் அதிகமாக உள்ளது. இப்பகுதியில் 26.5 சதவீதம் பேர் புகையிலைப் பொருட்களை பயன்படுத்துகிறார்கள். அடுத்ததாக ஐரோப்பாவில் 25.3 சதவீதம் பேர் புகையிலைப் பொருட்களை பயன்படுத்துகிறார்கள்.

2020-ம் ஆண்டின் இறுதியில் எடுக்கப்பட்ட கணக்கின்படி உலக அளவில் 22.3 சதவீதம் பேர் புகைபிடிப்பவர்களாக உள்ளனர். இதில் ஆண்கள் 36.7 சதவீதம். பெண்கள் 7.8 சதவீதம் பேர்.

உலகிலேயே புகையிலைப் பொருட்கள் அதிகம் பயன்படுத்தப்படும் நாடுகளின் பட்டியலில் சீனா முதல் இடத்தில் இருக்கிறது. அந்நாட்டு மக்கள் ஆண்டொன்றுக்கு 20,54,035 டன் புகையிலையை பயன்படுத்துகிறார்கள். இந்த பட்டியலில் இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது. இந்தியர்கள் ஆண்டொன்றுக்கு 5,66,948 டன் புகையிலையை பயன்படுத்துகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...