கோடை காலம் மெல்ல மெல்ல அதன் வேலையை காட்டத் தொடங்கிவிட்டது. தமிழகத்தில் பல இடங்களில் வெயிலின் அளவு 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்துவிட்டது. இந்த முறை வெயிலால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது அரசியல்வாதிகள்தான்.
100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான வெயிலில், அனல் பரக்க பேசி பிரச்சாரம் செய்யவேண்டிய நிலையில் அவர்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் புதுச்சேரியில் பிரச்சாரம் செய்துகொண்டிருந்த காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம், வெயிலின் கடுமை தாங்காமல் மயங்கி விழுந்தார்.
இந்த கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்ப தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்:
கோடை வெயில் சுட்டெரிப்பதால் பெரும்பாலும் மதிய நேரங்களில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரங்களை மேற்கொள்வதில்லை. அதற்கு பதில் காலையில் வாக்கிங் நேரத்தை அதிகரித்து, அந்த நேரத்தில் மக்களை சந்திக்கிறார். மாலையில் நடக்கும் பிரச்சார பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். இடைப்பட்ட நேரங்களில் தொகுதி சார்ந்த முக்கிய கட்சி நிர்வாகிகளை சந்தித்து அந்தந்த தொகுதி பிரச்சாரத்துக்கான வியூகங்களை வகுக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி:
கோடை வெயிலின் பாதிப்பில் இருந்து தப்ப அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடிக்கடி மோர் குடிக்கிறார். இவரும் மதிய நேரங்களில் அதிகம் பிரச்சாரம் செய்வதில்லை.
அண்ணாமலை:
வெயிலின் கொடுமையை தணிக்க, பிரச்சாரத்தின்போது ஒவ்வொரு மணிநேரத்துக்கும் ஒருமுறை இளநீர் குடிப்பதை அண்ணாமலை வழக்கமாக கொண்டுள்ளார். அண்ணாமலையின் அதே ஸ்டைலைத்தான் புதுச்சேரி பாஜக வேட்பாளரான நமச்சிவாயமும் கடைபிடிக்கிறார்.
அன்புமணி ராமதாஸ்:
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைப் போலவே அன்புமணி ராமதாஸும் இளநீரைவிட மோரைத்தான் அதிகம் நம்புகிறார். அதிலும் வெறும் மோரைக் குடிக்காமல், அதில் கொஞ்சம் புதினா இலைகளைப் போட்டு குடிக்கிறார்.
கனிமொழி:
கோடைக்காலம் என்பதால் கனிமொழியின் உடைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பளிச் நிற ஆடைகளைத் தவிர்த்து, வெளிர் நிற ஆடைகளையே இவர் இப்போது அதிகம் அணிகிறார். சமீபத்தில் விருதுநகர், மதுரை, தேனி தொகுதிகளில் கனிமொழி பிரச்சாரம் செய்தபோது அவர் வெள்ளை நிற சேலை அணிந்திருந்த்தை பார்க்க முடிந்தது.