எங்கே புடின்? அவருக்கு என்னாச்சு? என்ற கேள்விகள் இப்போது சர்வதேச அளவில் எழத் தொடங்கியிருக்கின்றன. ஒரு மாதத்திற்கு முன் உக்ரைன் மீது போர் தொடுத்து உலகத்தை கவலைக்குள்ளாக்கினார் ரஷ்ய அதிபர் புடின். இன்று அவரது அவரது உடல்நிலையே கவலைக்கிடமாக உள்ளது என்று அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
“ரஷ்ய அதிபர் புடினின் உடல்நிலை மோசமாக உள்ளது” என்று இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னாள் உளவாளியான கிறிஸ்டபர் ஸ்டீல் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் முக்கிய உளவாளிகளில் ஒருவரான கிறிஸ்டபர், சர்வதேச அளவில் பல விஷயங்களை முன்கூட்டியே கணிப்பதில் கெட்டிக்காரர் என்று பெயர்பெற்றவர். 2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு உள்ளது என்று அப்போதே சரியாகக் கணித்தவர் இவர்.
இங்கிலாந்து உளவாளி கூறியது மட்டுமல்ல, மற்றொரு தகவலும் புடினுக்கு உடல்நிலை பாதிப்பு என்பதை காட்டுகிறது. ரஷ்ய அரசியல் பிரமுகர் ஒருவரின் உரையாடல் பதிவு ‘நியூ லைன்ஸ்’ என்ற அமெரிக்க பத்திரிகையில் வெளியாகி உள்ளது.
புடினுக்கு நெருக்கமான அரசியல் புள்ளியுடன் அந்த பிரமுகர் பேசும் ஆடியோவில், “விளாடிமிர் புடின் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
உக்ரைன் போருக்கு முன்னதாகவே அவரது முதுகில் இதற்காக ஒரு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அந்த அறுவைச் சிகிச்சைக்கு பிறகு புடின் கடுமையான வலியால் அவதிப்பட்டு வருகிறார். புடினின் தற்போதைய சில தவறான முடிவுகளுக்கு இந்த வலியும் ஒரு காரணம்” என்று கூறப்பட்டிருக்கிறது.
மேலும் சமீபத்தில் ரஷ்யாவில் உள்ள செஞ்சதுக்கத்தில் நடந்த இரண்டாம் உலகப் போர் வெற்றி விழா கொண்டாட்டங்களில்கூட உடல் நலிவுற்ற நிலையில்தான் புடின் பங்கேற்றார். வழக்கமாக சுறுசுறுப்பாக நடக்கும் புடின், அன்றைய தினம் மிகவும் மெதுவாக நடந்துசென்றார். புடின் அமரும்போது ஒரு பச்சை நிறத் துணியால் அவரது கால்கள் மறைக்கப்பட்டு இருந்தன. விரைவில் தற்காலிகமாகவேனும் அவர் அதிபர் பதவியை தனது சகாவான கமாண்டர் நிகோலய் பாட்ருஷேவுக்கு வழங்குவார் என்றும் அப்பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
இன்று சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள விளாடிமிர் புடினின் பின்னணி என்ன?
போரால் பாதித்த குடும்பம்:
உக்ரைன் போரின் நாயகனாக இருக்கும் புடினின் குடும்பம், இரண்டாம் உலகப் போரில் கடுமையாக பாதிக்கப்பட்டது. லெனின்கிராட் முற்றுகையில் புடினின் மூத்த சகோதரர்கள் இருவர் உயிரிழந்தனர். இப் போரின்போது நடந்த குண்டுவீச்சில் புடினின் அப்பா பலத்த காயமடைந்தார். இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவரால் பின்னாளில் நல்ல வேலைக்குச் செல்ல முடியவில்லை. சாதாரண தொழிற்சாலையில் அவர் வேலைக்குச் செல்ல, தாய் தெருவைக் கூட்டும் வேலையை பார்த்துள்ளார். இதனால் வறுமையான சூழலில் புடின் வளர்ந்தார்.
மோசமான மாணவர்:
பள்ளிக்காலத்திலேயே ஆசிரியர்களுக்குகூட கட்டுப்படாத மோசமான மாணவராக விளாடிமிர் புடின் இருந்துள்ளார். சக மாணவர்கள் மீது சாக்பீஸ், ரப்பர் துண்டுகள் போன்றவற்றை எறிவது, வகுப்பு நடத்தும்போது சத்தமாக பாட்டுப் பாடுவது, வீட்டுப் பாடங்களை செய்யாமல் இருப்பது என்று ஒரு ஒழுங்கீனமான மாணவனின் மொத்த உருவமாக விளாடிமிர் புடின் இருந்திருக்கிறார். சக மாணவர்களுடன் அடிக்கடி இவர் சண்டையிலும் ஈடுபட்டதாக பள்ளியின் ரெக்கார்டுகள் தெரிவிக்கின்றன.
உளவாளி வாழ்க்கை:
ரஷ்ய உளவு அமைப்பான கேஜிபியில் 15 ஆண்டுகாலம் பணியாற்றியுள்ளார் விளாடிமிர் புடின். இந்த அமைப்பில் லெப்டினண்ட் கர்னல் பதவி வரை முன்னேறியுள்ளார். கேஜிபியில் பணியாற்றிய காலகட்டத்தில் ரஷ்யாவில் மட்டுமின்றி ஜெர்மனிக்கும் சென்று உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். சோவியத் யூனியன் சிதறிப்போய் ரஷ்யா தனி நாடாக உருவானதும் உளவுப் படையில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட்டுள்ளார்.
அரசியல் வழிகாட்டி:
புடினின் அரசியல் வழிகாட்டியாக இருந்தவர் அனடோலி சோப்சக். பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் அவருடன் நெருங்கிப் பழகியுள்ளார் புடின். லெனின்கிராடின் (இப்போது இந்நகரம் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் என்று அழைக்கப்படுகிறது) முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயராக அனடோலி சாப்சக் பதவியேற்ற பிறகு, அவரது ஆலோசகராகவும் புடின் பணியாற்றினார்.
முதல் பதவி:
1994-ல் அனடோலி சாப்சக்கின்கீழ் லெனின்கிராடின் துணை மேயராக புடின் பொறுப்பேற்றார். அரசியலில் இதுதான் அவர் வகித்த முதல் பதவி. இதன்பிறகு மாஸ்கோ சென்ற புடின், அதிபர் அலுவலக ஊழியர்களில் ஒருவராக பொறுப்பேற்றார். அங்கிருந்து படிப்படியாக முன்னேறி ரஷ்யாவின் அதிபர் பொறுப்புக்கு முன்னேறினார்.
அமைதிப் புறா
உலக அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக இப்போது புடின் மீது அனைவரும் பழி சுமத்துகின்றனர். ஆனால் இதே புடின் 2014-ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்திடம் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி அந்நாட்டிடம் இருந்த ரசாயன ஆயுதங்களை ஒப்படைக்க வைத்ததற்காக அப்போது நோபல் பரிசுக்கு புடின் பரிந்துரைக்கப்பட்டார். பின்னர் 2021-ம் ஆண்டிலும் அமைதிக்கான நோபல் பரிசின் பரிந்துரைப் பட்டியலில் அவரது பெயர் இருந்தது.
விலங்குகளின் காவலர்:
மிருகங்கள் மீது புடினுக்கு அலாதி பிரியம் உள்ளது. தன் வீட்டில் ஏராளமான நாய்களை அவர் வளர்த்து வருகிறார். புலி, கரடி, டால்பின், கொக்கு போன்ற ஏராளமான உயிரினங்கள் பற்றி ஆய்வு நடத்த நிறைய பணத்தை இவரது அரசு ஒதுக்கியுள்ளது. தெருவில் சுற்றித்திரியும் விலங்குகளைக் கொல்லவும் இவரது அரசு தடை விதித்துள்ளது.
பணிச்சுமையால் விவாகரத்து:
ரஷ்ய அரசியலில் வெற்றிகரமான தலைவராக விளங்கும் புடின், திருமண வாழ்க்கையில் வெற்றி பெறவில்லை. கடந்த 2013-ம் ஆண்டில் புடினிடம் இருந்து அவரது மனைவி லுட்மிலா விவாகரத்து பெற்றார். “புடின் வீட்டைவிட அவரது பணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். அதனால் நாங்கள் நேருக்கு நேர் பார்ப்பதே குறைந்துவிட்டது. இந்தச் சூழலில் அவருடன் இனியும் வாழ முடியாது” என்று இதற்கு காரணம் கூறியுள்ளார் அவரது மனைவி.
ஜூடோ மாஸ்டர்:
தற்காப்புக் கலையான ஜூடோவில் வல்லவரான புடின், 11 வயது முதல் இக்கலையில் பயிற்சி பெற்றுள்ளார். ஜூடோ போட்டிகளில் பல்வேறு பரிசுகளை வென்றுள்ளார். அக்கலையைப் பற்றி புத்தகமும் எழுதியுள்ளார்.
பிரம்மாண்ட மாளிகை:
ரஷ்யாவில் உள்ள கிரஸ்னடார் கிராய் நகரில் காட்டுக்கு நடுவே அமைந்துள்ள பிரம்மாண்டமான மாளிகையில் புடின் வசிக்கிறார். 18 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த மாளிகையில் ஐஸ் அரண்மனை, நீச்சல் குளம், தியேட்டர், ஹெலிபாட், தேவாலயம், சுரங்கப்பாதை உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இது கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.