ஆலியா பட். இந்திய சினிமா ரசிகர்களின் இன்றைய கனவு நட்சத்திரம். நடிகைகளில் நம்பர் ஒன். அவரது மார்கெட் மதிப்பு 513 கோடி ரூபாய் என்கிறது ஒரு ஆய்வு. அவரது கண்ணசைவுக்காக காத்திருக்கிறது பாலிவுட்.
இத்தனை பெருமைகளை கொண்ட ஆலியா பட்டிற்கு திருமணம். காதலர் ரன்பீர் கபூரை ஏப்ரல் இரண்டாவது வாரம் திருமணம் செய்துக் கொள்ள இருக்கிறார்.
ஆண்களின் இதயத் துடிப்பான ஆலியா பட்டை போல பெண்களின் இதய துடிப்பு ரன்பீர் கபூர். ஏற்கனவே தீபிகா படுகோன், காத்ரினா கைஃப் போன்ற சூப்பர் நட்சத்திரங்களுடன் கிசுகிசுக்கப்பட்டவர்.
ராஜ்கபூர் குடும்பத்தின் வாரிசு. ரிஷிகபூர்-நீட்டு சிங்கின் மகன். பேச்சிலர் என்ற பிம்பத்துடனே சுற்றிக் கொண்டிருந்தவர் இப்போது ஆலியா பட்டிடம் சுருண்டுவிட்டார்.
சிறு வயதில் இருந்தே ரன்பீர் கபூரின் ரசிகையாக இருந்துள்ளார் ஆலியா பட். இந்நிலையில் ‘பிரம்மாஸ்திரா’ படத்தில் ரன்பீர் கபூருடன் சேர்ந்து நடித்தார். இந்த படப்பிடிப்பு தளத்திலேயே அவர்களுக்குள் காதல் கெமிஸ்ட்ரி ஒர்கவுட் ஆகிவிட்டது. ஆரம்பத்தில் வழக்கம்போல் கிசுகிசுக்களை மறுத்த ரன்பீர் கபூரும், ஆலியா பட்டும் கிசுகிசுக்கள் உண்மைதான் ஒன்றாக சுற்றி நிரூபித்தார்கள்.
நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஸ்டைலில், ‘இப்போதைக்கு காதல் மட்டும்தான். கல்யாணமெல்லாம் இல்லை’ என்று சொல்லிக்கொண்டிருந்த இந்த ஜோடி, இப்போது திடுதிப்பென்று ஏப்ரல் 2-வது வாரத்தில் திருமணம் செய்துகொள்ளப் போவதாக அறிவித்துள்ளது.
“ஆலியா பட்டின் தாத்தாவான ரஸ்தான் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். தான் வாழும் காலத்திலேயே பேத்தி ஆலியா பட்டுக்கு திருமணம் செய்துபார்க்க அவர் விரும்புகிறார். அதனால்தான் திருமணத்துக்கு அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று இருவரின் குடும்ப உறுப்பினர்களும் தெரிவித்து வருகின்றனர்.
பெரும்பாலும் ஏப்ரல் 17-ம் தேதி இவர்களின் திருமணம் நடக்கலாம் என்று கூறப்படுகிறது. செம்பூரில் உள்ள ரன்பீர் கபூரின் பரம்பரை இல்லத்தில் இந்த திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஒரு பெரிய திருமணத்தை வரவேற்க தயாராகி வருகிறது பாலிவுட்.