No menu items!

என்ன செய்ய போகிறார் ரணில்?

என்ன செய்ய போகிறார் ரணில்?

ஐந்தாவது முறையாக இலங்கை பிரதமராக பொறுப்பேற்றிருக்கிறார் ரணில் விக்கிரமசிங்கே.

கடந்த நான்கு முறை பதவி ஏற்ற போது இருந்த சவால்களைவிட இப்போது அவர் முன் உள்ள சவால்கள் மிக அதிகம். ஆனால், மலைத்துப் போகாமால் பதவியை ஏற்றிருக்கிறார்.

ரணிலுக்கு இப்போது 73 வயதாகிறது. கல்லூரி படிக்கும் காலத்தில் அவருடைய வகுப்பு தோழர் அப்போதைய பிரதமராக இருந்த பண்டாரநாயகேயின் மகன் அனுரா பண்டாரநாயகே. அங்கிருந்து அவரது அரசியல் ஆசை தொடங்குகிறது.

70களில் அரசியலில் நுழைகிறார். ஜெயவர்த்தனேயின் யுஎன்பி கட்சியில் இணைகிறார். தேர்தலில் வெல்கிறார். அமைச்சராகிறார். முதல் முறையாக அவர் அமைச்சராகும்போது அவருக்கு வயது 28.

1993-ல் இலங்கை ஜனாதிபதியாக இருந்த பிரேமதாசா கொல்லப்பட்டபோது பிரதமர் பதவியை முதல்முறையாக ஏற்கிறார் ரணில் விக்கிரமசிங்கே. அப்போது ஒரு வருடம் பிரதமராக நீடித்தார். அப்போதும் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ந்து கிடந்தது. ரணில் பிரதமராக இருந்த ஒரு வருடத்தில் இலங்கை பொருளாதாரத்தை மேம்படுத்தினார்.

மீண்டும் 2001 – 2004ல் இரண்டாவது முறையாக பிரதமரானார் ரணில். இந்த முறை அவரது வெளியுறவுக் கொள்கையும் புலிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தி ஈழப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண எடுத்த முயற்சிகளும் பாராட்டப்பட்டன.

மூன்றாம் முறையாக 2015-2018 வரை இலங்கை பிரதமராக பதவி வகித்தார். 2018 அக்டோபரில் இலங்கையில் அரசியல் குழப்பம் ஏற்பட்டபோது பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

டிசம்பர் 2018-ல் மீண்டும் ஐந்தாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். 2019 நவம்பர் வரை பிரதமர் பதவியில் நீடித்தார்.

இப்போது மீண்டும் பிரதமர் பதவி.

ஆனால், இந்த முறை மிகக் கடுமையான சவால்கள். பொருளாதாரம் கடும் வீழ்ச்சி, மக்கள் போராட்டம், கலவரங்கள், விலை உயர்வு என பல முனைகளிலிருந்தும் அழுத்தங்கள் இருக்கின்றன. அத்தனையையும் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பது கேள்விதான்.

ரணில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முக்கியமான காரணம் அவர் ராஜபக்சேக்களுக்கு நெருக்கமானவராக இருப்பது. அவர் பிரதமரானால் ராஜபக்சே சகோதரர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

ரணில் விக்ரமிசிங்கே பிரதமராக இருக்கும்போதுதான் 2019-ல் கொழும்புவில் ஈஸ்டர் தினத்தில் குண்டு வெடிப்புகள் நடந்து 250 பேர் கொல்லப்பட்டனர். ‘உளவுத் துறை எச்சரிக்கைகள் எனக்கு வரவில்லை’ என்று அப்போது அவர் குறிப்பிட்டிருந்தார்.

உளவுத் துறை எச்சரிக்கைகளையே பெற முடியாதவரால் எப்படி இலங்கையின் தற்போதைய சூழலை மாற்ற இயலும் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

ரணில் பிரதமரானாலும் ஆட்சி செய்யப் போவது ராஜபக்சே சகோதரர்கள்தாம், மாற்றத்தை தருவதாக காட்டி ஏமாற்றத்தை முன்னிறுத்தியிருக்கிறார் இலங்கை அதிபர் கோத்தபய என்ற கருத்து இலங்கை மக்களிடம் இருக்கிறது.

ராஜபக்சேக்களின் கட்சிக்கு எதிர்க் கட்சியாக ரணிலின் கட்சி இருந்தாலும் ராஜபக்சே சகோதரர்களுக்கும் ரணிலுக்கும் உள்ள நட்பை இலங்கை மக்கள் அறிந்திருக்கிறார்கள். அதனால் ஆட்சி மாறினாலும் காட்சி மாறாது என்ற எண்ணம்தான் இலங்கை மக்களிடம் இருக்கிறது.

கடந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ரணிலின் யுஎன்பி கட்சி ஒரே ஒரு இடத்தில்தான் வென்றது.

கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்கேதான். நாடாளுமன்றத்தின் ஒரே உறுப்பினராக இருந்துக் கொண்டு பிரதமரானது உலக அதிசயம்தான்.

ரணில் பிரதமரானதால் என்ன மாற்றங்கள் இலங்கையில் நடக்கும்?

ரணிலினால் மற்ற நாடுகளின் உதவியை இலங்கைக்கு பெற்றுத் தர முடியும். அவர் முன்பு பிரதமராக இருந்த காலக் கட்டங்களில் பல நாடுகளுடன் நல்ல நட்புறவில் இருந்தது இப்போது உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜபக்சே சகோதரர்களைப் போல் ரணில் அதிரடியான முடிவுகளை எடுக்க மாட்டார். அதனால் அரசு நிர்வாகம் சீரடையும். பொருளாதாரம் மீளும் என்ற நம்பிக்கை வந்துள்ளது.

‘இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் சவால் எனக்கிருக்கிறது. நிச்சயம் அந்த சவாலை நான் நிறைவேற்ற வேண்டும்’ என்று பிரதமரான பிறகு அளித்த பேட்டியில் ரணில் குறிப்பிட்டிருக்கிறார்.

’இந்தியாவுடன் நட்புறவு மேலும் பலப்படும்’ என்றும் தெரிவித்திருக்கிறார். இலங்கை போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...