No menu items!

உடல் பருமன் – தமிழ் நாடு இரண்டாமிடம்

உடல் பருமன் – தமிழ் நாடு இரண்டாமிடம்

நேஷனல் ஃபேமிலி ஹெல்த் சர்வே (National Family Health Survey (NFHS-5) இப்படியொரு குண்டை போட்டிருக்கிறது. இந்தியாவில் உடல் எடை கூடுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்கிறது இந்த ஆய்வு முடிவு.

உடல் எடை கூடுவதால் புற்றுநோய், நீரிழிவு நோய், இதய நோய், நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட 13 வகையான நோய்கள் வர வாய்ப்புள்ளது. ஒபிசிட்டி (உடல் எடை கூடுதல்) பிரச்சினையால் உலக அளவில் கடந்த ஆண்டில் மட்டும் 28 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என்கிறது உலக சுகாதார அமைப்பு. உயரத்துக்கு தகுந்த எடையைவிட ஒருவரின் எடை 10 கிலோ கூடுதலாக இருந்தால், அவரது ஆயுள் 3 ஆண்டு குறைகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

இப்படி உடல் பருமன் குறித்த செய்திகள் எதிர்மறையாக இருக்கையில் இந்தியாவில் உடல் பருமன் அதிகரிக்கிறது என்ற ஆய்வு நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதை உணர்த்துகிறது.

ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு விதமான உணவுப் பழக்கம் இருக்கும். அந்த உணவுப் பழக்கம் அந்தந்த நாடுகளின் சீதோஷண நிலைக்கு ஏற்றதாக இருக்கும். அந்த உணவுப் பழக்கம் ஏதாவது ஒரு வகையில் மாறினால் மோசமான விளைவுகள் ஏற்படும். அந்த விளைவுகளில் ஒன்று எடை கூடுவது (ஒபிசிட்டி). இன்றைய தினம் இப்பிரச்சினையால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

நேஷனல் பேமிலி ஹெல்த் சர்வே (National Family Health Survey (NFHS-5) நடத்தியுள்ள இந்த ஆய்வில், இந்தியாவில் 135 மில்லியன் பேர் ஒபிசிட்டி என்ற உடல் பருமன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்படி பார்த்தால் சராசரியாக 4 இந்தியர்களில் ஒருவர் உடல் பருமன் சிக்கலில் இருக்கிறார்.

பீட்சா, பர்கர், ஷவர்மா, பாக்கெட்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள சிப்ஸ் வகைகள் போன்ற உணவு வகைகள், இந்தியர்களின் எடை கூடுவதற்கு முக்கிய காரணமாக இருப்பதாக இந்த ஆய்வில் கூறப்படுகிறது.

இந்த ஆய்வின்படி ஆண்களில் சுமார் 23 சதவீதம் பேரும், பெண்களில் சுமார் 24 சதவீதம் பேரும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 4 சதவீதம் பேரும் இந்த பருமன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேஷனல் ஃபேமிலி ஹெல்த் சர்வேயின் ஆய்வின்படி இந்தியாவில் கிராமப்பகுதிகளில் 18 சதவீதம் பேர் ஒல்லியாக இருக்கிறார்கள். இதுவே நகரப் பகுதிகளில் ஒல்லியாக இருப்பவர்களின் எண்ணிக்கை 13 சதவீதமாக உள்ளது.

நகரப் பகுதிகளில் 30 சதவீதம் பேர் ஒபிசிட்டியால் பாதிக்கப்பட்டிருக்க, கிராமப்பகுதிகளில் 19 சதவீதம் பேர் மட்டுமே ஒபிசிட்டியால் பாதிக்கப்படிருக்கிறார்கள். நகரப்பகுதிகளில் வாழும் மக்களிடையே வேகமாக மாறிவரும் உணவுப் பழக்கமே இதற்கு காரணம் என்பது இதன்மூலம் தெளிவாக தெரிகிறது.

ஏழைக்களைவிட பணக்காரர்கள் ஒபிசிட்டி பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பது இந்த ஆய்வின் மூலம் தெளிவாகி இருக்கிறது.

இந்தியாவில் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த 28 சதவீதம் பெண்கள் ஒல்லியாக இருக்க, பணக்கார குடும்பங்களைச் சேர்ந்த 10 சதவீதம் பேர் மட்டுமே ஒல்லியாக இருக்கிறார்கள்.

ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த 10 சதவீதம் பெண்கள் ஒபிசிட்டியால் பாதிக்கப்பட்டிருக்க, பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த 39 சதவீதம் பெண்கள் ஒபிசிட்டியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆண்களைப் பொறுத்தவரை மாநில அளவில் டெல்லியில் மிக அதிகமாக 38 சதவீதம் பேர் உடல் பருமன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 37 சதவீதம் ஆண்கள் ஒபிசிட்டியால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றாவதாக கேரளாவில் 36 சதவீதம் பேர் ஒபிசிட்டியால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களைப் பொறுத்தவரை புதுச்சேரியைச் சேர்ந்த பெண்கள்தான் ஒபிசிட்டியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 46 சதவீதம் பெண்கள் ஒபிசிட்டியால் பாதிக்கப்பட்டுள்ளனர். சண்டிகர் (44 சதவீதம்), டெல்லி, பஞ்சாப், தமிழ்நாடு (41 சதவீதம்), கேரளா, அந்தமான் (38 சதவீதம்) ஆகியவை இதற்கு அடுத்த இடத்தில் உள்ளன.

அதிகரித்து வரும் உடல் பருமன் பிரச்சினை குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும் என்பது இந்த ஆய்வின் மூலம் தெளிவாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...