No menu items!

மிஸ் ரகசியா – அமித் ஷாவைப் புறக்கணித்த அதிமுக!

மிஸ் ரகசியா – அமித் ஷாவைப் புறக்கணித்த அதிமுக!

எப்போதும் உற்சாகமாக அலுவலகத்துக்குள் நுழையும் ரகசியா, இன்று சோர்வாக இருந்தார்.

“என்ன ஆச்சு வெயில் ஒத்துக்கலையா?” என்றோம்.

“வெயிலைக்கூட சமளிச்சுக்கலாம் போல இருக்கு. ஆனா இந்த மின்வெட்டைத்தான் சமாளிக்க முடியலை. ராத்திரியில அப்பப்ப கரண்ட் கட் ஆகிறதால நிம்மதியான தூக்கம் இல்லை” என்று புலம்பினார் ரகசியா.

“உனக்கு மட்டுமல்ல. நாட்டுல பலருக்கு இப்ப இந்த பிரச்சினை இருக்குது. நிலக்கரிக்கு உள்ள தட்டுப்பாட்டால 12 மாநிலங்களில் அதிக அளவில் மின்வெட்டு இருக்கிறதா சொல்றாங்க. இதில் ஜார்கண்ட் மாநிலத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதைப் பற்றி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மஹேந்திரசிங் தோனியின் மனைவி சாக்‌ஷிகூட கேள்வி எழுப்பியிருக்கிறார்”.

“என்ன சொல்றார்?”

“வரி கட்டும் குடிமகளாக இந்தக் கேள்வியை கேட்கிறேன், ஏன் ஜார்கண்டில் மின் தட்டுப்பாடு பல ஆண்டுகளாக இருக்கிறது? மக்கள் நாங்கள் எங்கள் பணியை சரியா செய்யறோம்னு சொல்லியிருக்கிறார். தைரியம்தான்.”

“தமிழ்நாட்டுல நிலைமை சரியாகிடுச்சுனு அமைச்சர் சொல்லியிருக்காரே?”

“ஆமாம்… ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நாடு முழுவதும் இருக்கிற நிலக்கரி தட்டுப்பாட்டைப் பற்றி யாரும் பேசறதில்லை. திமுக ஆட்சி வந்ததும் மீண்டும் பவர் கட் வந்துடுச்சுன்னுதான் பேசுறாங்க. சமூக வலைதளங்களில்கூட அரசையும், முதல்வரையும் கிண்டலடித்து பதிவுகளையும், மீம்ஸ்களையும் போடுறாங்க. இது ஆளும் தரப்பை சோகத்தில் ஆழ்த்தியிருக்கு. குறிப்பா முதல்வர் மிகவும் அப்செட்டில் இருக்கிறார். இந்த பிரச்சினைக்கு எளிதில் தீர்வு காணணும், தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரத்தை வாங்கணும்னு மின் துறை அமைச்சருக்கு அவர் உத்தரவிட்டிருக்கிறாராம்”

“அரசியல் நிலவரம் எல்லாம் எப்படி இருக்கு?”

“அடுத்த ஆளுநர் பதவி யாருக்கு கிடைக்கும்கிறதைப் பத்தித்தான் மாநில பாஜக தலைவர்கள் மத்தியில ஒரே பேச்சா இருக்கு. எச்.ராஜாவுக்கு கேரள மாநிலத்திலோ இல்ல வேறு ஏதாவது மாநிலத்திலோ ஆளுநர் பதவி வழங்கப்படலாம்னு சொல்றாங்க. அதுக்காக ராஜாவும் தீவிர முயற்சிகள்ல ஈடுபட்டு இருக்காராம். அதேநேரத்துல பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் ஏதாவது ஒரு மாநிலத்துல ஆளுநர் பதவி கொடுக்கறதைப் பத்தியும் மேலிடம் யோசிச்சுட்டு இருக்கறதா சொல்றாங்க”

“ஏற்கெனவே தமிழிசை சவுந்தரராஜன், இல.கணேசன்னு தமிழகத்தைச் சேர்ந்த 2 பேருக்கு ஏற்கெனவே ஆளுநர் பதவி வழங்கப்பட்டு இருக்கு. இந்த நேரத்துல மூணாவதா ஒரு தமிழருக்கு ஆளுநர் பதவியா?”

“இந்த கேள்வியை பாஜகவிலேயே சிலர் கேட்டுட்டு இருக்காங்க. இதுல பலரும் எச்.ராஜாவோட எதிர்ப்பாளர்கள்ன்றது முக்கியமான விஷயம். ராஜாவுக்கு ஆளுநர் பதவி கொடுக்கறதை அவங்க விரும்பல. அவரைவிட தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வி.பி.துரைசாமிக்கு ஆளுநர் பதவி கொடுத்தா அந்த சமூகத்தைச் சேர்ந்தவங்களோட ஆதரவைப் பெறலாமென்னு சொல்றாங்க.”
“நல்ல கேள்விதான். ஆனா அவர் திமுகவுலருந்து வந்தவராச்சே?”

“ஆமா. ஆளுநர் பதவிக்காக சிலர் லாபி பண்ணிட்டு இருக்கும்போது, இப்ப புதுச்சேரி மற்றும் தெலங்கானாவுல ஆளுநரா இருக்கிற தமிழிசை சவுந்தரராஜன், தனக்கு அந்த பதவி வேண்டாம்னு நினைக்கறாராம். பிரதமர், அமித் ஷான்னு பலர்கிட்ட இதை அவர் தெரிவிச்சிருக்கார். ஆளுநரா இருக்கிறதைவிட தமிழக அரசியல்ல மீண்டும் தீவிரமா ஈடுபடணுங்கிறதுதான் தமிழிசையோட விருப்பமாம்.”

“நீ ஆளுநர், ஆளுநர்னு பேசும்போதுதான் ஞாபகத்துக்கு வருது. தமிழக ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையிலான மோதல் எப்படி போகுது?”

“பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கும் தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றும் அதே நாளில் துணை வேந்தர்களை வச்சு ஆளுநர் கூட்டம் நடத்திட்டு இருந்தார். ஆளுநர் – முதல்வர் மோதலை இது இன்னும் அதிகரிச்சு இருக்கு. அதேநேரத்துல ஆளுநர் இந்த அளவுக்கு மோதல் போக்கை கடைபிடிக்கறது பாஜக தலைவர்களுக்கே பிடிக்கலியாம். இது தமிழக அரசுக்கு அனுதாபத்தை தேடித் தரும்னு அவங்க அதிருப்தியா இருக்காங்களாம்”

மேலிடத்துல சொல்லாம ஆளுநர் இப்படி நடந்துப்பாரா?”

”நல்ல கேள்வி. பாஜக தலைவர்கள்னு நான் சொல்றது உள்ளூர் தலைவர்களை. அது மட்டுமில்லாம அரசியல் ஃபோகஸ் ஆளுநர் பக்கம் திரும்புது. தன் பக்கம் ஃபோகஸ் இருக்கணும்னு அண்ணாமலை நினைக்கிறார்னு சொல்றாங்க. இது ஒரு பக்கம் இருக்க, மாநிலங்களுக்கு ஆளுநர் பதவியே தேவையில்லைனு ஒரு கோரிக்கையை வலியுறுத்த எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் தயாராகி வர்றாங்களாம்.”

“சபாஷ்… சரியான போட்டி”

“சட்டசபை கூட்டத் தொடர் பற்றி ஏதும் சொல்லலியே?”

“வழக்கமா தங்கமணி, விஜயபாஸ்கர் போன்ற முன்னாள் அமைச்சர்கள் சட்டசபையில காரசாரமா பேசுவாங்க. ஆனா இந்த கூட்டத்தொடர்ல அவங்க அமைதியா இருக்காங்க. நாம ஏதாவது பேசி லஞ்ச ஒழிப்புத்துறை மூலமா ஏதாவது வில்லங்கம் நடந்துடக் கூடாதேன்னு அவங்க பயப்படுறதுதான் இதுக்கு காரணம்னு சொல்றாங்க. இதுனால கட்சிக்காரங்க மத்தியில அவங்களுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டிருக்கு. ஆட்சி இருக்கும்போது அனுபவிச்சு, இப்ப எதிர்க்கட்சியா இருக்கும்போது அமைதியா இருக்கிறது நியாயமான்னு பேசிக்கிறாங்க”

“ராஜ்யசபா நியமன எம்பியாக சுப்பிரமணிய சுவாமி முயற்சி செய்யறதா கேள்விப்பட்டேனே”

“இதை பாஜக தலைவர்களே விரும்பலையாம். ஏற்கெனவே கட்சியில இருந்துட்டு, தலைவர்களை விமர்சிச்சு பேசறாரு. இந்த நேரத்துல அவரை எம்பியா வேற ஆக்கணுமான்னு அவங்க கேட்கறாங்களாம். அதே நேரத்துல குஷ்பு எம்பி ஆகிற வாய்ப்பு அதிகமா இருக்கிறதா சொல்லப்படுது”

“இளையராஜா விஷயம் ஓரளவு அமுங்கிடுச்சு போலயே?”

“ஆமாம். இளையராஜாவைப் பற்றி விமர்சிக்கிறதா நினைச்சு ஜாதியைப் பத்தி இளங்கோவன் பேச, இப்ப இளங்கோவனைப் பற்றிய விமர்சனங்கள் அதிகமாயிடுச்சு. அதே நேரத்துல தான் சிக்கல்ல இருந்தபோது 90-கள்ல தன்னோட இருந்த மணிரத்னம், ரஜினி, கமல் மாதிரியான ஆட்கள் தனக்கு ஆதரவா வாய் திறக்கலைங்கிறதுல இளையராஜாவுக்கு ரொம்பவே வருத்தமாம்.”

”வருத்தம் இருக்கலாம். ஆனால் அவங்களுக்கு தங்களோட பிரச்சினை இருக்கே. இளையாராஜாவா ஆதரிச்சா பாஜகவை ஆதரிச்சா மாதிரி ஆகிடும். இங்க திராவிட கட்சிகளின் எதிர்ப்பை சந்திக்கிற மாதிரி ஆகிடும்ல. அதனால எல்லோரும் அடக்கி வாசிக்கிறாங்க”

“மத்திய உள்துறை அமைச்சர் புதுவை போற வழியில் சென்னைக்கு வந்துட்டு போயிருக்கார். தமிழ் நாடு அரசின் சார்பா யாரும் வரவேற்க போகலைனு சொல்றாங்களே?”

“வழக்கமா பிரதமர், உள்துறை அமைச்சர் போன்றவர்கள் சென்னை வந்தால் கவர்னர் மாளிகையில்தான் தங்குவார்கள். ஆனால் அமித்ஷா அங்கு தங்கவில்லை. சிஆர்பிஎஃப் விருந்தினர் மாளிகையில் தங்கினார். கவர்னர் இங்கே சர்ச்சைக்குள்ளான நிலையில் அங்க தங்க வேண்டாம் என்று நினைத்திருக்கலாம். கவர்னர் பிரச்சினையிலிருந்து தாங்கள் தள்ளி நிற்பதாகவும் காட்டிக் கொள்ளலாம் என்றும் கருதியிருக்கலாம். அமித்ஷாவை சந்திக்க அதிமுகவினரும் ஆர்வம் காட்டவில்லை என்பதையும் பார்க்க வேண்டும். வழக்கமா அமித்ஷா வந்தால் அதிமுகவின் இரட்டைத் தலைவர்கள் அவரை சந்திக்க ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் இந்த முறை அவர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லையாம்”

“அதிமுக கூட்டணியில் இல்லைன்றதுனால இருக்கலாம்ல”

“கூட்டணியைத் தாண்டிய புனிதமான நட்பாயிற்றே அவர்களுடையது” என்று சிரித்தார் ரகசியா.

”பாஜக தலைவர்கள் நிறைய பேர் சந்திச்சிருக்காங்கனும் பேப்பர்ல படிச்சேன். என்ன ஆலோசனை செஞ்சாங்களாம்?”

“நிறைய பேர் சந்திக்கல. கொஞ்ச பேர்தான் சந்திச்சு பேசியிருக்காங்க. அதிலே பாஜகவினர் சிலருக்கு வருத்தம். தங்களை சந்திக்க அனுமதிக்கலனு. பொதுவா திமுகவை தோற்கடிப்பதற்கான வியூகம்தான் விவாதிக்கப்பட்டிருக்கு. பெரிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படலை. அண்ணாமலைதான் அமித்ஷா சந்திப்பை ஆக்கிரமிச்சு இருந்தார்னு சொல்றாங்க. குஜராத் மொழில திருக்குறள் புத்தகத்தையும் இந்தி மொழியில தொல்காப்பியம் புத்தகத்தையும் அமித்ஷாவுக்கு கொடுத்திருக்கிறார் அண்ணாமலை”

”அவர்தான் 20 ஆயிரம் புக் படிச்சவராச்சே. எந்த புத்தகம் கொடுக்கிறதுனு அவருக்கு தெரியும்”

சிரித்துக் கொண்டே கிளம்பினார் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...