வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு என்று ஒவ்வொரு காலத்திலும் ஒரு சில காய்கறிகளின் விலை உயர்ந்து மக்களை பாதிக்கும். அந்த வகையில் இது எலுமிச்சை பழங்களின் காலம்.
சில நாட்கள் முன்புவரை கிலோ 50 ரூபாய்க்கு விற்கப்பட்டிருந்த எலுமிச்சைப் பழங்களின் விலை இப்போது ரூ.200-ஐ தொட்டுள்ளது. இதனால் வெயில் காலத்தில் தங்கள் தாகத்தை தீர்க்க எலுமிச்சை பழங்களை அதிகம் நம்பியிருக்கும் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் நிலைமை இன்னும் மோசம். கிலோ ரூ.350 வரை எலுமிச்சை பழங்கள் விற்கப்படுகின்றன. எலுமிச்சை பழம் அதிகமாக விளையும் குஜராத்தில் தொடர்ந்து பெய்த மழையால் விளைச்சல் பாதித்து, அதனால் டெல்லியிலும், வட மாநிலங்களிலும் இந்த விலை உயர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சரி… சென்னையில் எலுமிச்சைப் பழங்களின் விலை உயர என்ன காரணம்?
கோயம்பேடு சிறு மொத்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் முத்துக்குமாரிடம் இதுபற்றி கேட்டோம்:
தமிழகத்தில் திருநெல்வேலி, திண்டுக்கல் போன்ற பகுதிகளில் எலுமிச்சை பழங்கள் விளைந்தாலும், அவை அப்பகுதி மக்களின் தேவையைத் தீர்க்கவே சரியாக இருக்கின்றன. இந்த நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து எலுமிச்சை பழங்கள் வருகின்றன.
வழக்கமாக தினமும் 10 லோடு எலுமிச்சைப் பழங்கள் கோயம்பேடு சந்தைக்கு வரும். சென்னை மக்களின் தேவைக்கு இது ஓரளவு சரியாக இருக்கும். ஆனால் கோடைகாலத்தில் மக்களின் தேவை அதிகரித்துள்ளதால், தினமும் 30 லோடு அளவுக்கு எலுமிச்சைப் பழங்கள் தேவைப்படுகின்றன. ஆனால் எப்போதும் வருவதுபோல் 10 லோடு எலுமிச்சம் பழங்கள் மட்டுமே வருகின்றன. அதனால் இங்கு கிலோ 120 ரூபாய் வரை விற்கப்படுகின்றன.
வெளிச்சந்தையில் அதை தரம் பிரித்து விற்கும்போது கிலோவுக்கு ரூ.200 வரை விலை வைத்துவிடுகின்றனர். இதனால் ஒரு பழம் ரூ.10 வரை விற்கப்படுகிறது.
இந்த திடீர் விலை உயர்வுக்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமான காரணம் ஆன்லைன் மார்க்கெட். மக்களில் பலர் இப்போது சந்தைக்கோ, கடைகளுக்கோ போய் காய்கறிகளை வாங்காமல் ஆன்லைன் முறையில் வாங்குகின்றனர்.
ஆன்லைன் வியாபாரிகளிடம் யாரும் பேரம் பேசுவதில்லை. அவர்களும் குறைந்த விலைக்கு விவசாயிகள் மற்றும் மொத்த சந்தைகளில் வாங்கி, ரூ9.90-க்கு விற்பதாக மக்களை ஏமாற்றி எலுமிச்சம் பழத்தை விற்கின்றனர். மேலும் அவர்கள் அதிக அளவில் பொருட்களை வாங்கி பதுக்கி வைப்பதால் அதற்கு தட்டுப்பாடும் ஏற்படுகிறது. எனவே பொருட்களின் விலை குறைய வேண்டுமானால் முதலில் மக்கள் ஆன்லைனில் பொருட்களை வாங்குவதை விட்டு கடைகளுக்கு நேரில் செல்லவேண்டும்.
விலை உயர்வுக்கு அடுத்த காரணமாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு மற்றும் சுங்கக் கட்டணங்கள் உள்ளன. பெட்ரோல் டீசல் கட்டண உயர்வைக்கூட ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் சுங்கக் கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ள முடியாது.
சுங்கக் கட்டணத்தை அரசு ரத்து செய்யாவிட்டாலோ, அல்லது குறைக்காவிட்டாலோ அதன் பொருட்களின் விலை கடுமையாக உயரும். சுங்கக் கட்டணத்தை அதிகமாக வசூலிக்கும் அரசு, சாலை வரியை ஏன் வாங்குகிறார்கள் என்று தெரியவில்லை.
இப்படி விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கும்போது அதற்கு வியாபாரிகளை மட்டும் குறைசொல்வது சரியல்ல” என்கிறார் முத்துக்குமார்