கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதையாகிவிட்டது. சின்ன பூதமாக இருந்தால் பரவாயில்லையே இது ஆங்கிலப் படங்களில் வரும் Vampire போல விஸ்வரூபமெடுத்துள்ளது. இதில் சிக்குண்டவர் நேற்றுவரை ‘இசைக் கடவுள்’ என்று கோடம்பாக்கத்தால் கொண்டாடப்பட்ட இசைஞானி இளையராஜா.
சட்டமேதை அம்பேத்கரை பிரதமர் மோடியுடன் ஒப்பிட்டு எழுதப்பட்ட ஒரு புத்தகத்துக்கு ராஜாவின் மூன்று பக்க முன்னுரைதான் பிரச்சினை. ஏறத்தாழ அம்பேத்கரின் பத்துக்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு செயல்வடிவம் தந்துள்ளார் மோடி என்று இசைஞானி அலசியுள்ளார், அந்த முன்னுரையில்.
சட்டமேதை அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டதுதான் இந்த பூகம்பம் வெடிக்க காரணமாகியுள்ளது. அது எப்படி தாழ்த்தப்பட்ட மக்கள் நலனுக்காக, உரிமைக்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடி அதில் வெற்றியும் பெற்ற அந்த மகா புருஷருடன் இந்துத்வா பேசும் மோடியை ஒப்பிடுவது என்பதுதான் ராஜாவின் மீது கணைகளை சரமாரியாக தொடுக்கும் விமர்சனக்காரர்களின் குற்றச்சாட்டு.
சொல்லப் போனால் அத்தனை ட்விட்டர் பதிவுகளும் யூடியுப் சேனல்களும் யாரோ ஒரு பிரமுகரை அழைத்து வைத்துக் கொண்டு ராஜாவை உண்டு இல்லை என்ற அளவுக்கு தாக்குகிறார்கள்.
இந்த அர்ச்சனை எல்லை மீறிப் போய் ராஜாவின் தனிப்பட்ட வாழ்க்கை, அவரது பூர்வீகம், அவரது சாதி…. என அனைத்து அஸ்திரங்களையும் எடுத்துக் கொண்டு சிலம்பம் ஆடுகின்றனர்.
நடுவில் கொஞ்சம் ராஜாவுக்கு ஆதரவாக பேசிய டைரக்டர் பாக்யராஜும் சட்டென்று ஜகா வாங்கிவிட்டார். ஞானியோ மௌனியாகிவிட்டார். தான் எது பேசினாலும் அது அடுத்த புயலாக இன்னும் தீவிரமாகும் என்று உணர்ந்திருக்கலாம். ’நான் உன்னை நீங்க மாட்டேன்’ என்று ட்விட்டரில் 27 விநாடி பாடலுடன் தனது உணர்வைக் கூறியிருக்கிறார்.
அம்பேத்கரை மோடியோடு ராஜா ஒப்பிட்டதை யாரும் நியாயப்படுத்த முடியாது. சொல்லப் போனால் அது வரலாற்று தவறு.
அவர் என்ன நோக்கத்துக்காக அப்படி செய்தார் என்று நம்மால் ஓரளவுக்கு மேல் யூகிக்க முடியாது. சாடுபவர்கள் சொல்வது போல் ஆதாயங்களுக்காக, ஜிஎஸ்டி காரணமாக அல்லது அவருக்கு இன்னும் மிஞ்சியிருக்கும் ‘பாரத ரத்னா’வுக்காக இருக்கலாம் அல்லது வேறு ஏதோ ஒரு அஜெண்டா கூட இருக்கலாம். அது இருக்கட்டும்.
அதற்காக இந்தியாவின் பெருமையாக கௌரவமாக கருதப்படும் ஒரு மகா கலைஞனை இப்படியா சகட்டு மேனிக்கு விளாசுவது? ராஜா செய்தது தவறுதான். ஆனால் இப்படிப்பட்ட தவறுகள் இப்போதுதான் சுதந்திர இந்தியாவில் நடக்கிறதா?
இங்கே எத்தனை எத்தனை ஊழல் தலைவர்களை மகாத்மாவுடனும் பட்டேலுடனும் சாஸ்திரியுடனும் காமராஜருடனும் ஜீவாவுடனும் ஒப்பிட்டுப் பேசியிருக்கிறோம். சின்னச் சின்ன ஆதாயங்களுக்காக சமூகத்தில் பெரிய அந்தஸ்த்தில் இருப்பவர்கள் கூட இப்படி செய்துள்ளனர்.
வள்ளுவர் பட்டம் முதல் வேலு நாச்சியார் பட்டம் வரை எத்தனையோ பட்டங்களை உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு தந்து அழைத்துள்ளனர்.
சமீபத்தில் கூட மோடிக்கு லதா மங்கேஷ்கர் நினைவு விருதை அவரது தன்னலமற்ற சேவைக்காக தருவதாக செய்தி வந்துள்ளது. விருது தந்தவர் லதாவின் தங்கை ஆஷா போன்ஸ்லே. இதுமட்டுமா? தகுதியற்ற எத்தனை பேர் டாக்டர் பட்டத்துடன் அலைகின்றனர். இப்படி நமக்கு எல்லாமே மரத்துப் போய்விட்ட நிலையில் திடீரென்று ‘ராஜாவின் முன்னுரை’யைப் பார்த்து விழித்துக் கொண்டு அலறுகிறோம்.
ஒரு முறை சென்னை வாணி மகாலில் நடந்த மகாகவி பாரதியார் பற்றிய பட்டிமன்றத்தில் பேசிய முன்னாள் எம்.பி. வசந்தி ஸ்டான்லி சொன்னதும் அதற்கு நடுவர் சாலமன் பாப்பையா அளித்த அருமையான பதிலும் இப்போது நினைவுக்கு வருகிறது.
பாஞ்சாலி சபதத்தைப் பற்றி பேசிய வசந்தி ஸ்டான்லி, திரௌபதி துயில் உரிக்கப்படும்போது அங்கிருந்தவர்கள் பெட்டைபோல புலம்பிக் கொண்டிருந்தனர் என்கிறார் பாரதியார்.
பெண் உரிமைக்காக, பெண் சுதந்திரத்துக்காக போராடிய பாரதியே இப்படி பேசலாமா என்று நிறுத்த அரங்கத்தில் கைத் தட்டு.
பின்பு பேசிய நடுவர் பாப்பையா ரொம்ப நாசுக்காகக அழகாக ஒரு விஷயத்தை நினைவுப்படுத்தினார். ”வசந்தி பேசிய கருத்தில் தவறில்லை. ஆனால் பாரதி போன்ற உன்னத மனிதர்களைப் பற்றி பேசும்போது இதுபோன்ற விஷயங்களை சிறு சறுக்கலாக நினைத்து விட்டுவிட வேண்டும். பெரிதுபடுத்தக்கூடாது. காரணம் அவர் இந்த தமிழ் சமூகத்திற்கு செய்தது அவ்வளவு. புரிகிறதா வசந்தி…” என்றபோது அந்த பெரும் கூட்டம் இந்த மனிதரின் ஆழ்ந்த சிந்தனையை புரிந்துகொண்டு தொடர்ந்து கரவொலி எழுப்பியது!
எதற்கு இந்த கதை என நீங்கள் கேட்கலாம். ராஜா என்ற உன்னத கலைஞன் இந்த மண்ணுக்கு செய்த இசை சேவையை மனதில்கொண்டு, ‘மோடி – அம்பேத்கர் ஒப்பீடு’ விஷயத்தையும் கண்டனத்தோடு விட்டிருக்க வேண்டும். அவரை வீதிக்கு இழுத்திருக்கக் கூடாது என்பதே…
உடனே பாரதியையும் ராஜாவையும் எப்படி ஒப்பிடலாம் என மீண்டும் கச்சை கட்டிக்கொண்டு யாரும் கிளம்பிவிட வேண்டாம்.