இன்றைய தினம் சர்வதேச யோகா தினமாக அனுசரிக்கப்படுகிறது. யோகாசனத்தைப் பற்றிய சுவாரஸ்யமான 10 விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்:
உலகின் மிக பழமையான உடற்பயிற்சி கலையாக யோகாசனம் உள்ளது. சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் யோகாசனம் தோன்றியுள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட வேதங்களில் யோகாசனத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
1893-ம் ஆண்டில் சுவாமி விவேகானந்தரின் சிகாகோ பயணத்தின்போதுதான் அமெரிக்காவுக்கு யோகா அறிமுகமானது. இன்றைய காலகட்டத்தில் அமெரிக்காவில் சுமார் 2 கோடி பேர் யோகாசனம் செய்வதாக அந்நாட்டு பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.
2019-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கின்படி சர்வதேச அளவில் யோகா துறையின் பண மதிப்பு 37,460 கோடி அமெரிக்க டாலர்கள். 2027-ல் இது 66,220 அமெரிக்க டாலர்களாக உயரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
தற்போது பிரபலமாக உள்ள யோகா மேட் எனப்படும் யோகா செய்வதற்காக விரிக்கப்படும் பாய் 1982-ம் ஆண்டில் ஏஞ்சலா ஃபார்மர் என்பவரால் வடிவமைக்கப்பட்டது.
மனிதர்களைப் போலவே நாய்களுக்கும் யோகாசனம் உள்ளது. நியூயார்க் நகரைச் சேர்ந்த சூசி டீடெல்மேன் என்பவர் 2002-ம் ஆண்டு இந்த யோகாசனத்தை அறிமுகம் செய்தார்.
மலேசியாவில் உள்ள ஒரு இஸ்லாமியா அமைப்பு 2008-ம் ஆண்டில் யோகாவை தடை செய்தது. இது இஸ்லாம் மதத்தின் மீதான நம்பிக்கையை குறைக்கும் என்பது இந்த அமைப்பின் தெரிவித்தது. ஆனால் மலேசிய அரசு அதை ஏற்கவில்லை. இஸ்லாமியரும் யோகா செய்யலாம் என்று தெரிவித்தது.
ஆண்களைவிட பெண்கள்தான் யோகா பயிற்சியில் அதிகம் ஈடுபடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்று இது தொடர்பாக நடத்தியுள்ள ஆய்வில் யோகா பயிற்சி செய்பவர்களில் 72 சதவீதம் பேர் பெண்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இதய நோய், அல்சீமர்ஸ் நோய், மன அழுத்தம் ஆகியவை வராமல் தடுக்க யோகாசனம் உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மனம், உடல், ஆன்மா ஆகிய மூன்றையும் யோகாசனம் ஒருங்கிணைக்கிறது.