லால் சிங் சத்தா (நெட்பிளிக்ஸ்)
ஹாலிவுட்டில் வெளிவந்து பெரும் வெற்றிபெற்ற ‘பாரஸ்ட் கம்ப்’ படத்தின் ரீமேக்தான் லால் சிங் சத்தா. ஆமிர்கான் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருடன் நாக சைதன்யா, கரீனா கபூர் உட்பட பலர் நடித்துள்ளனர்.
அப்பாவியான ஒரு இளைஞனின் சுயசரிதைக்குள் பொற்கோவிலுக்குள் ராணுவம் நுழைந்தது, இந்திராகாந்தி சுட்டுக் கொல்லப்பட்டது, மும்பை நட்சத்திர ஓட்டலுக்குள் பயங்கரவாதிகள் நுழைந்தது, கார்கில் போர் போன்ற பல சம்பவங்களைப் புகுத்தி கதை சொல்லி இருக்கிறார்கள்.
கடந்த ஆகஸ்ட் மாதம் இப்படம் தியேட்டர்களில் வெளியான நிலையில், 2015ம் ஆண்டு இந்தியாவில் சகிப்புத்தனமைக் குறித்து அமீர்கான் பேசியிருந்ததை குறிப்பிட்ட நெட்டிசன்கள், ‘லால் சிங் சத்தா’ படத்தை புறக்கணிக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் லால் சிங் சத்தா வெளியாகி உள்ளது.
ஒட்டு – மலையாளம் (அமேசான் பிரைம்)
அரவிந்த் சுவாமி, குஞ்சாக்கோ போபன், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘ஒட்டு’. இப்படம் தமிழில் ‘ரெண்டகம் என்ற பெயரில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.
காசுக்காக சிறு சிறு குற்றங்களைச் செய்யும் குஞ்சாக்கோ போபனுக்கு காதலியுடன் வெளிநாட்டில் போய் செட்டிலாவதற்கு நிறைய பணம் தேவைப்படுகிறது. இந்த நேரத்தில் அவருக்கு ஒரு வேலை வருகிறது. ஒரு தாக்குதல் சம்பவத்தில் தன் பழைய நினைவுகளை இழந்த முன்னாள் நிழலுலக தாதாவான அரவிந்த் சுவாமிக்கு மீண்டும் பழைய நினைவுகளை வரச்செய்ய வேண்டும் என்பதுதான் அவருக்கு கொடுக்கப்படும் வேலை. இந்த வேலையை குஞ்சாக்கோ போபன் முடித்தாரா என்பதுதான் படத்தின் கதை.
சஸ்பென்ஸ் திரில்லரான இப்படம் மலையாளத்திலும், தமிழிலும் வெற்றிபெற்ற நிலையில் தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
பப்ளி பவுன்சர் – இந்தி (ஹாட்ஸ்டார்)
பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்த கிராமத்து பெண்ணான பப்ளி (தமன்னா) டெல்லியில் பணிபுரியும் தனது பள்ளி ஆசிரியையின் மகன் அபிஷேக்கை ஒருதலையாகக் காதலிக்கிறார். காதலுக்காகக் கிராமத்திலிருந்து டெல்லி பப்பில் பவுன்சராக வேலைக்கும் சேர்கிறார்.
தமன்னாவின் காதல் கைகூடியதா, ஒரு லேடி பவுன்சராக தனது வாழ்க்கையில் அவர் வெற்றி பெற்றாரா என்பதே படத்தின் கதை.
தன்னாவுடன் சாஹில் வைத், கரண் சிங் சாப்ரா, அபிஷேக் பஜாஜ் மற்றும் சவுரப் சுக்லா ஆகியோரும் பாப்லி பவுன்சரில் முக்கிய வேடங்களில் நாடித்துள்ளனர். மதுர் பண்டார்கர் இயக்கியுள்ள இப்படம் ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ளது. இப்படத்தை தமிழிலும் பார்க்கலாம்.
கார்த்திகேயா 2 – தெலுங்கு (ஜீ5)
2014 ஆம் ஆண்டு வெளியான கார்த்திகேயா திரைப்படத்தின் இரண்டாம் பாகம்தான் கார்த்திகேயா 2’.
பீப்பள் மீடியா ஃபேக்டரியும், அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் நிகில் சித்தார்த்தா, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்து மத புராணங்களை சிறப்பித்துக் காட்டும் இந்த மர்மத் திரில்லர் படம், கோவர்தன் கிரி, துவாரகாவின் தெருக்கள், புந்தேல்கண்ட் பாலைவனம் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஆறுகள் என இந்தியாவின் அற்புதமான பன்முகத்தன்மையை பிரதிபலிக்கிறது. தெலுங்கு மற்றும் இந்தியில் பெரும் வெற்றி பெற்ற இப்படத்தை ஜீ5 ஓடிடியில் பார்க்கலாம்.