No menu items!

அண்ணாமலை அமெரிக்க விசிட் மர்மம் – மிஸ் ரகசியா!

அண்ணாமலை அமெரிக்க விசிட் மர்மம் – மிஸ் ரகசியா!

“செய்திகளை வரிசையாக சொல்கிறேன். விரைவாக குறித்துக்கொள்ளுங்கள்” என்று வரும்போதே பரபரப்பாக இருந்தாள் ரகசியா.

“ஏன் இந்த பதற்றம். எங்கயாவது போக வேண்டி இருக்கா?”

“ஆமாம். திமுக தலைவர் பதவிக்கு போட்டியிட முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்னைக்கு அறிவாலயத்தில் மனு தாக்கல் செய்றாரு. இந்த நிகழ்ச்சிக்கு போகவேண்டி இருக்கு.”

“அதுக்கு ஏன் இத்தனை டென்ஷன். இந்த தேர்தல் சம்பிரதாய தேர்தல்தானே? ஸ்டாலின்தானே எப்படியும் தலைவர் தேர்தலில் ஜெயிக்கப் போகிறார்?”

“ஆமாம். இது சம்பிரதாய தேர்தல்தான். ஸ்டாலின் தான் திமுக தலைவர்ங்கிறதுல எந்த மாற்றமும் இல்லை. இருந்தாலும் முதல் முறையாக தேர்தல் மூலம் தான் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுறதுல ரொம்பவே த்ரில்லாக இருக்கிறாராம் முதல்வர். இதுக்கு முன்னாடி அவரை திமுக பொதுக்குழுதான் தலைவரா தேர்ந்தெடுத்தது. அப்ப கட்சித் தேர்தல் நடக்கலை. இப்ப கட்சித் தேர்தல் நடந்த பிறகு தலைவர் தேர்தல் நடக்குது. இப்படி முறையாக தான் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதில் முதல்வருக்கு கூடுதல் மகிழ்ச்சின்னு அறிவாலயத்துல பேசிக்கிறாங்க. தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட செயலாளர்களுக்கு போனில் வாழ்த்து சொன்ன முதல்வர், அப்படியே ‘கட்சித் தலைவர் பதவிக்கு நான் போட்டியிடுகிறேன். நீங்கள் எனக்கு ஆதரவை தாருங்கள்’ என்று வேண்டுகோளும் விடுத்துள்ளாராம். ‘தளபதியே என்னிடம் ஆதரவு கேட்டார்’னு மாவட்ட செயலாளர்கள் இதைப்பற்றி பெருமையா பேசிக்கிறாங்க.”

“நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஏதோ வருத்தத்தில இருக்கிறதா கேள்விப்பட்டேனே?”

“மதுரை மாநகர மாவட்ட செயலாளரா தன்னை நியமிக்கலைங்கிறதுல அவருக்கு வருத்தமாம். இந்த பதவிக்காக அவர் பல முயற்சிகளைச் செஞ்சிருக்கார். திமுக தலைமைகிட்டகூட உதவி கேட்டிருக்கார். ஆனா மதுரையில கட்சிக்காரங்க மத்தியில அவருக்கு குறிப்பிடும்படியா ஆதரவு இல்லைன்னு கட்சித் தலைமை நினைச்சிருக்கு. அவர் வருத்தத்துல இருக்கிறார்ன்ற செய்தி தலைமையின் காதுக்கு போயிருக்கு. இப்ப எதுவும் செய்ய முடியாது, அப்புறம் அவரை சமாதானப்படுத்தலாம்னு கட்சித் தலைமை சொல்லியிருக்காம்”

“காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் பத்தி ஏதாவது செய்தி இருக்கா?”

“தமிழக காங்கிரஸ் தலைவர்களைப் பொறுத்தவரைக்கும் மல்லிகார்ஜுன கார்கேவுக்குதான் ஆதரவு அதிகமா இருக்கு. ‘சோனியா காந்தி, ராகுல் காந்தியோட விருப்பம் மல்லிகார்ஜுன கார்கேதான். அதனால அவருக்குதான் வாக்கு’ன்னு தமிழக தலைவர்கள் பலரும் முடிவு பண்ணி இருக்காங்க. ஆனால் கட்சித் தலைமைக்கு எதிரா அப்பப்ப சண்டை போடற கார்த்தி சிதம்பரம் மட்டும் தலைவர் தேர்தல்ல சசி தரூருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருக்கார். கார்த்தி சிதம்பரம் உள்பட ஆறு பேர் தமிழ்நாட்டில் இருந்து சசி தரூரோட வேட்புமனுவை முன்மொழிஞ்சு கையெழுத்து போட்டிருக்காங்க. கார்த்தி சிதம்பரத்தோட இந்த நிலைப்பாட்டால ப.சிதம்பரத்துக்குத்தான் சிக்கல் வந்திருக்கு.”

“சிதம்பரத்துக்கு என்ன சிக்கல்?”

“மல்லிகார்ஜுன கார்கே கட்சித் தலைவர் பதவியில் போட்டியிடறதால, ராஜ்யசபா காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அந்தப் பதவி தனக்கு வரும்னு ப.சி எதிர்பார்த்துக்கிட்டு இருக்கும்போது கார்த்தி இப்படி செஞ்சது அவருக்கு தர்மசங்கடம். இப்ப ப.சிதம்பரத்துக்கு அந்த பதவி கிடைக்குமாங்கிறது சந்தேகமா இருக்கு.”

“இதுக்கு நடுவுல சசி தரூர் ஆதரவு திரட்டறதுக்காக தமிழ்நாட்டுக்கு வந்தாரே?”

“அவர் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த அன்னைக்கு கார்த்தி சிதம்பரத்தோட அதரவாளர்களைத் தவிர வேற யாரும் சத்தியமூர்த்தி பவனுக்கு வரலையாம். அதனால சசி தரூருக்கு வருத்தம்.”

“கனிமொழிகிட்ட பாஜக நெருங்கிறதா செய்திகள் வருதே?”

“தூத்துக்குடி எம்.பியான கனிமொழிக்கு ஏற்கெனவே வேதியல் மற்றும் உரங்கள் துறை நிலைக்குழு தலைவர் பதவியை கொடுத்திருந்தாங்க. இப்ப புதுசா கிராமப்புற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழு தலைவரா நாடாளுமன்ற சபாநாயகர் கனிமொழியை நியமிச்சிருக்கார். இதுக்கு பிரதமர் அலுவலகம்தான் சிபாரிசு செஞ்சதா சொல்றாங்க. அதேமாதிரி வெளிநாட்டில் சிகிச்சைக்காக ராஜாத்தி அம்மையார் போனப்ப உள்துறை அமைச்சர் அமித் ஷா எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சு கொடுத்ததாவும் சொல்றாங்க. அவர் சிகிச்சை முடிச்சு சென்னை திரும்பினதும், அமித் ஷா கனிமொழியை போனில் தொடர்புகொண்டு ராஜாத்தி அம்மையாருக்கு தரப்பட்ட சிகிச்சை மற்றும் உடல்நலம் பற்றி விசாரித்திருக்கிறார். இதை வச்சுத்தான் கனிமொழிகிட்ட பாஜக நெருங்கறதா செய்திகள் பரவுது. ஆனா பாஜக எதிர்ப்புல கனிமொழி உறுதியா இருக்காங்க. கனிமொழிக்கு இன்னொரு ஹேப்பியான நியூஸும் வந்துருக்கு”

“என்னது?”

“சுப்புலட்சுமி ஜகதீசன் வகிச்ச துணைப் பொதுச் செயலாளர் பதவி கனிமொழிக்கு வரப் போகுது. கூடவே மேலும் இரண்டு துணைப் பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டு வெள்ளக்கோவில் சாமிநாதனும் ஜெகத்ரட்சகனும் துணைப் பொதுச்செயலாளர் ஆகிறார்கள்”

“கனிமொழி துணை பொதுச்செயலாளர் ஆனா அவங்களோட மகளிரணி செயலாளர் பொறுப்பு யாருக்குப் போகும்? அதை கொடுக்கிறதுக்கு மனசில்லைனு சொல்லிக்கிட்டு இருந்தாங்களே?”

“ஆமாம். மகளிரணி பொறுப்பு தனி அதிகாரம் உடையது. ஆனா அண்ணனே தலையிட்டு சொன்னப் பிறகு கனிமொழியால் தட்ட முடியலையாம்”

”திமுகவின் பொருளாளர் பதவியும் போட்டியில் இருக்குதுன்னாங்களே?

“ஆமாம். ஆனால் அது டி.ஆர்.பாலுவிடமே தொடர்கிறது. எ.வ.வேலு நிறைய முயற்சி பண்ணார், ஆனா கிடைக்கல. அதுல அவர் அப்செட்.”

“பாஜக செய்திகள் ஏதாவது இருக்கா?”

“கமலாலயத்தைத் தவிர்த்து பெசன்ட் நகர் பக்கத்துல தனியாக ஒரு ஆபீஸ் வச்சு நடத்திட்டு வர்றார் அண்ணாமலை. அதுக்கு காவிக் கட்சிக்காரங்க ‘வார் ரூம்’னு பேர் வச்சிருக்காங்க. அங்க இருந்துதான் அண்ணாமலையோட அறிவிப்புகள், ட்விட்டர் பதிவுகள் வெளியாகிட்டு வருது. இந்த ஆபீஸ்ல முக்கியமான நபரா கிருஷ்ணகுமார். முதல்வர் ஸ்டாலின் பற்றி அவதூறு சுவரொட்டி ஒட்டிய விவகாரத்துல இவரை கைது செய்யப்பட்டு ஜெயில்ல இருந்தார். இப்ப ஜாமின்ல வெளில வந்திருக்கார். இவரை கைது செஞ்சப்போ இவரோட மொபைல், லேப்டாப் எல்லாத்தையும் போலீஸ் பறிமுதல் செய்திருக்கு. ஆனா இன்னும் திருப்பித் தரல. அதுல பல விவகாரமான விஷயங்கள் இருக்கே என்று காவிக் கட்சிக்காரர்கள் டென்ஷனில் இருக்கிறார்கள்”

”அண்ணாமலை திடீர்னு அமெரிக்கா போயிருக்காரே. என்ன காரணம்?

“தொடர்ந்து கட்சிப் பணில இருந்ததுனால அவருக்கு கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டதாக கட்சிக்காரங்க சொல்றாங்க. ஆனா அங்க கொஞ்சம் அரசியலும் செய்கிறார்னும் சொல்றாங்க. அமெரிக்காவுல இருக்கிற இலங்கைத் தமிழர்களை சந்தித்து பேசுகிறார். அவங்களை திமுகவுக்கு எதிரா திருப்பும் முயற்சில இருக்கிறார்னும் சொல்றாங்க”

“இந்தியாவுல அவங்களுக்கு வாக்குரிமையே இல்ல. இலங்கைத் தமிழர்கள் ஆதரவை வச்சு தமிழ்நாட்டுல என்ன அரசியல் செய்ய முடியும்?”

“சரியானா கேள்வி. இதைதான் அண்ணாமலைக்கு எதிரா இருக்கிற பாஜகவினரும் கேட்டிருக்காங்க. இலங்கைத் தமிழர் பிரச்சினை தமிழ்நாட்டுல பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. இங்க பாஜகவினர் இடங்கள்ல பெட்ரோல் குண்டு வீசிக்கிட்டு இருக்கிற சூழல்ல இவர் ஏன் அமெரிக்க போகணும்னு கேக்குறாங்க. சும்மா இலங்கைத் தமிழரை சந்திக்கிறேன்னு சீன் போடுறார்னு வெளிப்படையாவே சொல்றாங்க. டெல்லி மேலிடத்துக்கும் கடிதம் அனுப்பியிருக்காங்களாம்”

”தலைமையை மாத்தப் போறாங்கனும் செய்தி வந்துச்சே”

“ஆமா. வானதி சீனிவாசனை தலைவர் பதவிக்கு போடணும்னு ஒரு க்ரூப் சுத்திக்கிட்டு இருக்கு. நயினார் நாகேந்திரனும் முயற்சிக்கிறார். ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் முடியற வரை அண்ணாமலைக்குதான் தமிழ்நாட்டு பாஜக தலைவர் பதவி என்று அவர் ஆதரவாளர்கள் சொல்றாங்க. பாஜகவுல தமிழக காங்கிரசுக்கு ஈக்வலா கோஷ்டிகள் இருக்கிறது. தேசியக் கட்சினாலே கோஷ்டிகள்தான் அடையாளம் போல” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...