இந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் சுற்றில் நாம் அவசியம் பார்க்க வேண்டிய விறுவிறுப்பான போட்டிகள்…இந்திய நேரத்தில்.
பிரான்ஸ் – டென்மார்க் (நவம்பர் 26. இரவு 9.30 மணி)
டி பிரிவில் நவம்பர் 26-ம் தேதி நடக்கும் போட்டியில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணி, டென்மார்க் அணியைச் சந்திக்கிறது. சர்வதேச கால்பந்து தரவரிசைப் பட்டியலில் பிரான்ஸ் 4-வது இடத்திலும் டென்மார்க் 10-வது இடத்திலும் இருக்கின்றன. டி விரிவில் முதலிடத்தைப் பிடிக்கும் அணி எது என்பதை நிர்ணயம் செய்யும் போட்டியாக இது இருக்கும். .
சமீபத்தில் நடந்த நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பிரான்ஸை 2-0 என்ற கோல்கணக்கில் டென்மார்க் அணி வென்றுள்ளது. இதனால் உலகக் கோப்பையிலும் பிரான்ஸை வெல்ல முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் டென்மார்க் வீரர்கள் களம் புகுவார்கள். அத்துடன் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் அரை இறுதிவரை முன்னேறியதும் அந்த அணிக்கு கூடுதல் தன்னம்பிக்கையை கொடுத்துள்ளது. அதேநேரத்தில் நேஷன்ஸ் லீக் போட்டியில் தங்களை தோற்கடித்த டென்மார்க் அணியை பழிவாங்க வேண்டும் என்ற வெறியுடன் பிரான்ஸ் வீரர்கள் ஆடுவார்கள் என்பதால் போட்டி கடுமையாக இருக்கும்.
ஸ்பெயின் – ஜெர்மனி (நவம்பர் 28. அதிகாலை 12.30)
கால்பந்து உலகில் கடந்த பல ஆண்டுகளாக முன்னிலை வகிக்கும் அணிகள் ஸ்பெயினும், ஜெர்மனியும். சர்வதேச கால்பந்து தரவரிசைப் பட்டியலில் ஸ்பெயின் 7-வது இடத்திலும், ஜெ\ர்மனி 11-வது இடத்திலும் இருக்கின்றன.
தரவரிசைப் பட்டியலில் 11-வது இடத்தில் இருந்தாலும் உலகக் கோப்பை போட்டிகளில் புலியெனப் பாய்வது ஜெர்மனியின் வழக்கம். கடந்த உலகக் கோப்பை போட்டியில்தான் அந்த வழக்கம் ஸ்லிப் ஆனது. முதல் ரவுண்டைத் தாண்டாமல் ஜெர்மனி வெளியேறியது. 2018 உலகக் கோப்பைக்கும் சேர்த்து இந்த உலகக் கோப்பையில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் ஜெர்மனிக்கு மிகப்பெரிய சவாலாக இந்தப் போட்டி இருக்கும்.
போர்ச்சுக்கல் – உருகுவே (நவம்பர் 29. அதிகாலை 12.30)
கால்பந்து உலகில் முக்கிய நட்சத்திரங்களாக விளங்கும் வீரர்கள் ரொனால்டோவும், லூயிஸ் சுவாரஸும். போர்ச்சுக்கலுக்காக ரொனால்டோவும், உருகுவேவுக்காக சுவாரஸும் களம் காண்கிறார்கள். இந்த சூழலில் இந்த இரு பிரம்மாண்ட நாயகர்கள் மோதும் போர்க்களமாக போர்ச்சுக்கல் – உருகுவே ஆட்டம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதிலும் இந்த 2 வீரர்களுக்கும் இது கடைசி உலகக் கோப்பையாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என்பதால் போட்டியும் கடுமையாக இருக்கும்.
2018-ல் உருகுவே அணியிடம் தோற்றுத்தான் போர்ச்சுக்கல் அணி உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது என்பது இப்போட்டியின் சுவாரஸ்யத்துக்கு மற்றொரு சாட்சி.
ஈரான் – அமெரிக்கா (நவம்பர் 30. அதிகாலை 12.30)
கால்பந்து உலகைப் பொறுத்தவரை ஈரானும் அமெரிக்காவும் மிகப்பெரிய சக்தி இல்லை. இருந்தபோதிலும் இந்த 2 நாடுகளிடையேயான போட்டிக்கு சுவாரஸ்யம் கூட்டும் விஷயம் அரசியல்.
சர்வதேச அளவில் எதிரெதிர் துருவங்களாக முறைத்துக்கொண்டு நிற்கும் அமெரிக்காவும், ஈரானும் இந்த போட்டியை கவுரவப் போட்டியாக நினைக்கின்றன. அதனால் இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைப் போல இதில் அனல் பறக்கும். எந்தப் போட்டியில் தோற்றாலும் இந்த போட்டியில் மட்டும் தோற்கக் கூடாது என்று இரு அணிகளின் வீரர்களும் இருப்பார்கள் என்பதால் அனல் பறக்கும் ஆட்டத்துக்கு இது காரண்டியாக இருக்கும்.
குரோஷியா – பெல்ஜியம் (டிசம்பர் 1. இரவு 8.30)
குரூப் எஃப் பிரிவில் முதலிடம் பிடிக்கப்போகும் அணி எதுவாக இருக்கும் என்பதை நிர்ணயிக்கப்போகும் போட்டியாக இது இருக்கும். கடந்த உலகக் கோப்பை தொடரில் 2-வது இடம் பிடித்த அணியாக குரோஷியாவும், 3-வது இடம்பிடித்த அணியாக பெல்ஜியமும் இருப்பது இந்த போட்டியின் வீரியத்தை அதிகரிக்கிறது. தற்போதைய சூழலில் கால்பந்து தரவரிசைப் பட்டியலில் பெல்ஜியம் 3-வது இடத்தில் இருக்க குரோஷிய அணி 12-வது இடத்தில் இருக்கிறது.