உலகக் கோப்பைக்கான இறுதி யுத்தத்துக்கு நாள் குறிக்கப்பட்டுவிட்டது. 19-ம் தேதி நடக்கும் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு அடுத்து கிரிக்கெட்டில் நம் பரம எதிரியான ஆஸ்திரேலியாவை எதிர்த்து இந்தியா ஆடப்போகிறது. உலகக் கோப்பையில் இந்தியாவை எதிர்த்து இதுவரை 13 ஆட்டங்களில் ஆடியிருக்கும் ஆஸ்திரேலியா, 8 ஆட்டங்களில் ஜெயித்துள்ளது. இந்தியாவுக்கு கிடைத்தது வெறும் 5 வெற்றிகள் மட்டுமே. இந்த சூழலில் வலுவான ஆஸ்திரேலிய அணியை இறுதிப் போட்டியில் ஜெயிக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
1.டாஸ் வென்றால் பேட்டிங்:
இறுதிப் போட்டியில் டாஸ் வென்றால் ரோஹித் சர்மா எந்த யோசனையும் செய்யாமல் பேட்டிங்கை எடுக்க வேண்டும். இரவில் பனி பெய்யும், ஆடுகளத்தின் தன்மை மாறும் என்றெல்லாம் யார் என்ன காரணம் சொன்னாலும் பீல்டிங்கை தேர்ந்தெடுக்க கூடாது. நாக் அவுட் போட்டிகளில் எதிரணி 250 ரன்களுக்கு மேல் குவித்தால் எப்போதும் சேஸிங் செய்யும் அணிக்கு ஒருவித பதற்றம் வந்துவிடும். அதேநேரம் முதலில் பேட்டிங் என்றால் பதற்றம் இல்லாமல் பேட்டிங் செய்யலாம். மிகப்பெரிய ஸ்கோரை எட்டி எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கலாம். இதுவரை நடந்த 12 உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் 8 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகள்தான் ஜெயித்துள்ளன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
2.தாக்குதலுக்கு ரோஹித்… நிலைத்து ஆட கோலி
இந்த உலகக் கோப்பையை பொறுத்தவரை இந்தியாவின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் கோலியும் ரோஹித்தும்தான். ஆரம்ப கட்டங்களில் விக்கெட்டைப் பற்றி கவலைப்படாமல் ரோஹித் சர்மா அடித்து ஆட, அடுத்து வரும் கோலி நங்கூரம் பாய்ச்சி கடைசி ஓவர்கள் வரை நிலைத்து ஆடுகிறார். இதுதான் இந்திய பேட்டிங்கை இதுவரை காத்துள்ளது. அதை ஃபைனலிலும் தொடர வேண்டும். விராட் கோலியும், ஸ்ரேயர் ஐயரும் நிலைத்து ஆடுவதில் கவனம் செலுத்த, மற்ற வீர்ர்கள் அவர்களைச் சுற்றி அதிரடி காட்ட வேண்டும். இந்த வேகமும் விவேகமும் நிறைந்த ஆட முறை எதிரணியை கலங்கடிக்கும்.
3.ஷமியிடம் புதிய பந்து
லீக் போட்டிகளில் பொதுவாக பும்ராவுடன் இணைந்து முகமது சிராஜ்தான் புதிய பந்தை வீசுகிறார். ஷமி 8 ஓவர்களுக்கு மேல்தான் பந்துவீச வருகிறார். இறுதிப் போட்டியில் அதை கொஞ்சம் மாற்றிப் பார்க்கலாம். இப்போது காற்று ஷமியின் பக்கம் வீசுவதால் அவரிடம் புதிய பந்தைக் கொடுக்கலாம். ஆஸ்திரேலியாவின் விக்கெட்களை முதலிலேயே வீழ்த்தி அவர்களுக்கு நெருக்கடி கொடுக்கலாம்.
4.சிராஜுக்கு பதில் அஸ்வின்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க திணறியது. அதனால் தைரியமாக இறுதிப் போட்டியில் சிராஜுக்கு பதில் அஸ்வினை முயற்சித்துப் பார்க்கலாம். அஸ்வின் பேட்டிங்கும் செய்வார் என்பது அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும்.
5.பயத்தை அகற்றுங்கள்:
2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணி, இதுவரை ஒரு ஐசிசி கோப்பையைக்கூட ஜெயிக்கவில்லை. லீக் ஆட்டங்களில் சிறப்பாக ஆடும் இந்திய வீர்ர்கள், நாக் அவுட் சுற்றுகளில் தடுமாறுகிறது., இதற்கு காரணம் பயம்.
முக்கியமான நாக் அவுட் போட்டிகள் வந்தாலே, அதில் ஜெயிக்க வேண்டுமே என்ற ஒருவித பயம் இந்திய வீர்ர்களுக்கு வந்துவிடுகிறது. முன்காலத்தில் தோனி, காம்பீர், யுவராஜ் சிங் ஆகியோரைப் போன்ற பயத்தை வென்ற வீர்ர்கள் பலர் இந்திய அணியில் இருந்தார்கள். இதனால் வெற்றிகளும் வரிசைகட்டி வந்தன.
இப்போதுள்ள பேட்ஸ்மேன்கள் முக்கிய போட்டிகளில் பயப்படுவதால் பதற்றத்தில் ஆடி விக்கெட்களை விடுகிறார்கள். எனவே இறுதிப் போட்டியில் ஆடும் வீர்ர்கள் அந்த பயத்தை அகற்ற வேண்டும். என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற தைரியத்துடன் பந்துகளை எதிர்கொள்ள வேண்டும். அடுத்தடுத்து சில விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், பதற்றப்படாமல் புதிய இன்னிங்சை கட்டமைக்க வேண்டும்.