உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானின் தொடர் தோல்விகளுக்கு அந்த அணி வீரர்களின் உணவுப் பழக்கம் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. வீர்ர்கள் உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிக்காததால் உடல் எடை கூடி ஆடுவதற்கு தகுதியற்றவர்களாகி விட்டதாக அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீர்ர்கள் பலரும் புகார் கூறியுள்ளனர்.
குறிப்பாக பாகிஸ்தானின் முன்னாள் கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான வாசிம் அக்ரம் விளையாட்டு சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “பாகிஸ்தான் கிரிக்கெட் வீர்ர்களுக்கு உடல் தகுதி தேர்வு நடந்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஒவ்வொரு வீரரையும் பாருங்கள். இஷ்டத்துக்கு சாப்பிட்டு உடல் எடை கூடியவர்களைப் போல் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் தினம் சுமார் 8 கிலோ கறியையாவது சாப்பிடுவார்கள் என்று அகலமாகி இருக்கும் அவர்களின் முகத்தைப் பார்த்தாலே தெரிகிறது” என்று விமர்சித்துள்ளார். வாசிம் அக்ரமைப் போலவே மேலும் பல முன்னாள் வீர்ர்கள் பாகிஸ்தானின் இப்போதைய அணியை உணவு விஷயத்தில் விமர்சித்து வருகிறார்கள்.
ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் இந்தியாவில் தாங்கள் தங்கும் நகரங்களில் எங்கு சுவையான உணவு கிடைக்குமோ, அதை தேடிப்பிடித்து சாப்பிட்டு வருகிறார்கள் பாகிஸ்தான் வீர்ர்கள். கொல்கத்தாவில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஆடப்போன நேரத்தில் ரெஸ்டாரண்டுக்கு சென்று சாப்பிடுவதைத் தவிர்த்த அவர்கள், அங்குள்ள புகழ்பெற்ற உணவகமான ஜம் ஜம் ரெஸ்டாரண்டில் இருந்து சொமாட்டோ ஆப் மூலம் உணவை கொண்டுவரச்செய்து சாப்பிட்டிருக்கிறார்கள். “பாகிஸ்தான் வீர்ர்கள் இரவு உணவுக்காக பிரியாணி, கெபாப் மற்றும் சாப் ஆகியவற்றை எங்களிடம் இருந்து ஆர்டர் செய்து சாப்பிட்டனர்” என்று பெருமையாக சொல்கிறார் அந்த உணவகத்தின் மேலாளரான சட்மான் பைஸ்.
இதை வைத்து பார்த்தால் வாசிம் அக்ரம் சொல்வது உண்மைதான் போலிருக்கிறது.
சச்சினுக்கு மும்பையில் சிலை
மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் சச்சின் டெண்டுல்கரின் சிலை இன்று திறந்து வைக்கப்பட உள்ளது. வான்கடே ஸ்டேடியத்தில் உள்ள சச்சின் டெண்டுல்கர் ஸ்டாண்ட் அருகே இந்த சிலையை திறந்து வைக்கிறார்கள். மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.
பிரபல சிற்பியான பிரமோத் காம்ளே வடித்துள்ள இந்த சிற்பம் 14 அடி உயரம் கொண்டதாக உள்ளது. டெண்டுல்கர் சிக்சர் அடிப்பதைப் போன்ற தோற்றத்தில் இந்த சிலை வடிக்கப்பட்டுள்ளது. “இந்த சிலையை வடிப்பதற்கு முன்பாக நான் சச்சினிடம் பேசினேன். நீங்கள் சாதாரணமாக நிற்பதுபோன்ற சிலையை உருவாக்க வேண்டுமா அல்லது கிரிக்கெட் ஆடுவதைப் போன்ற சிலையை உருவாக்க வேண்டுமா என்று சச்சினிடம் கேட்டேன். அதற்கு அவர், தான் ஆடுவதுபோல் சிலை இருந்தால் நன்றாக இருக்கும் என்றார். அதனால் அவர் விருப்ப்ப்படி இந்த சிலையை வடித்துள்ளேன்” என்று பிரமோத் காம்ளே கூறியுள்ளார்.