விராட் கோலிக்கும், ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக்குக்கும் இடையே ஐபிஎல் தொடரின்போது மோதல் ஏற்பட்டது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இத்தொடரின்போது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக நவீன் உல் ஹக் ஆடினார். ஆர்சிபி – லக்னோ அணிகள் ஐபிஎல் போட்டியில் ஆடியபோது இருவருக்கும் இடையில் பற்றிக்கொண்டது. போட்டி முடிந்த பிறகு மைதானத்தில் இருவரும் கடுமையாக மோதிக்கொண்டனர்.
இந்த சூழலில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று டெல்லியில் நடந்த ஆட்டத்தில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டெல்லி விராட் கோலியின் சொந்த ஊர் என்பதால், இங்கு போட்டி நடக்கும்போது நவீனுக்கு எதிராக ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அப்போது நவீனுக்கு ஆதரவாக செயல்பட்ட கோலி, ரசிகர்களை அமைதிப்படுத்தினார்.
இதைத்தொடர்ந்து போட்டி முடிந்த பிறகு விராட் கோலியை தேடிப்போய் கைகுலுக்கினார் நவீன் உல் ஹக். இந்த கைகுலுக்கலுடன் அவர்களின் மோதல் முடிவுக்கு வந்தது.
போட்டிக்கு பின்னர் விராட் கோலியைப் பற்றி கருத்து தெரிவித்த நவீன் உல் ஹக், “விராட் கோலி ஒரு சிறந்த வீரர். நல்ல மனிதர். எங்களுக்குள் மைதானத்தில் மோதல் இருக்கலாம். ஆனால் மைதானத்துக்கு வெளியே எங்களுக்குள் எந்த மோதலும் இல்லை. ஆனால் ரசிகர்கள்தான் மைதானத்தில் நடக்கும் மோதல்களை பெரிதாக்கி பார்க்கின்றனர்” என்று கூறியிருக்கிறார்.
பாகிஸ்தானின் புதிய நாயகன்
இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கும்வரை பாகிஸ்தான் அணியின் நாயகனாக பாபர் ஆசம்தான் இருந்தார். இந்த முறை பாகிஸ்தான் அணி உலகக் கோப்பையை வெல்வது பாபர் ஆசமின் பேட்டிங்கை பொறுத்துதான் என்று ரசிகர்கள் நம்பியிருந்தனர். ஆனால் முதல் 2 போட்டிகளிலும் மிகக் சுறைவான ரன்களை எடுத்து ரசிகர்களை ஏமாற்றினார் பாபர் ஆசம்.
இப்படி பாபர் ஆசம் ரசிகர்களை ஏமாற்றிய நிலையில், அந்த அணியின் புதிய நாயகனாக உருவாகி இருக்கிறார் விக்கெட் கீப்பரான முகமது ரிஸ்வான். நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் அணிக்காக அதிக ரன்களைக் குவித்துள்ளார் முகமது ரிஸ்வான். இலங்கைக்கு எதிரான போட்டியில் சதம் அடித்ததன் மூலம், இந்த தொடரில் அதிக ரன்களைக் குவித்தவர்கள் வரிசையில் முகமது ரிஸ்வான் முதல் இடத்துக்கு முன்னேறி இருக்கிறார்.
அதேநேரத்தில் இலங்கை அணிக்கு எதிரான தனது இன்னிங்ஸை, காஸாவில் உள்ள சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் அர்ப்பணிக்கிறேன் என்று அவர் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய அணியுடன் இணைந்த கில்
டெங்கு பாதிப்பால் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில், இன்று இந்திய அணியுடன் மீண்டும் இணைந்துள்ளார். இருப்பினும் முழுமையாக குணமாகாததால், இன்று அவர் இந்திய அணியுடன் இணைந்து அகமதாபாத்தில் பயிற்சியில் ஈடுபட மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கில் ஆடுவதும் இப்போதைக்கு சந்தேகத்துக்கு உரியதாக இருக்கிறது. அதுபற்றி அணி நிர்வாகம் வெள்ளிக்கிழமை இறுதி முடிவு எடுக்கும் என்று கூறப்படுகிறது. கில் ஆடாமல் இருந்தால் அவருக்கு பதில் ரோஹித் சர்மாவுடன் இணைந்து இஷான் கிஷன் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கவுள்ளார்.