இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் புதிதாக ஒரு நடைமுறையை அறிமுகப்படுத்தி இருக்கிறார் இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் டி.திலிப். ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக பீல்டிங் செய்யும் வீரரை தேர்ந்தெடுத்து போட்டிக்கு பிறகு நடக்கும் டீம் மீட்டிங்கில் ஒரு சிறப்பு பதக்கத்தை அணிவிப்பதே இந்த புதிய நடைமுறை.
இதன் காரணமாக ஒவ்வொரு போட்டியிலும் பீல்டிங்குக்காக பதக்கம் பெறுவது யார் என்ற போட்டி இந்திய வீர்ர்காளிடையே அதிகரித்துள்ளது. இதனால் இந்திய அணியின் பீல்டிங் தரமும் உயர்ந்துள்ளது. முதல் போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன், விராட் கோலி ஆகியோர் சிறப்பாக பீல்டிங் செய்து இந்த பதக்கத்துக்கு போட்டியிட்டனர். கடைசியில் ஸ்லிப் பகுதியில் நின்று சூப்பராக டைவ் அடித்து கேட்ச் பிடித்ததற்காக விராட் கோலி இந்த பதக்கத்தை வென்றார்.
பீல்டிங் பயிற்சியாளர் திலிப் அந்த பதக்கத்தை கழுத்தில் அணிவித்ததும், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீர்ர்களைப் போல், அந்த பதக்கத்தை ஸ்டைலாக கடித்து போஸ் கொடுத்திருக்கிறார் விராட் கோலி.
ரஷித் கான் கொடுத்த நன்கொடை
ஆப்கானிஸ்தானில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட நில நடுக்கத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்தும், படுகாயம் அடைந்தும் உள்ளனர். இந்த சூழலில் தான் ஒரு சிறந்த கிரிக்கெட் வீர்ர் மட்டுமின்றி, சிறந்த மனநேயர் என்பதையும் நிரூபித்திருக்கிறார் ஆப்கானிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான்.
இந்த உலகக் கோப்பை தொடரில் ஆடுவதற்காக தான் வாங்கும் சம்பளம் முழுவதையும் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதாக ரஷித் கான் அறிவித்துள்ளார். இதுபற்றி தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலர் உயிரிழந்திருப்பது துக்கம் தரும் செய்தி. அவர்களுக்காக இந்த உலகக் கோப்பை தொடரில் நான் பெறும் சம்பளத்தை நன்கொடையாக வழங்குகிறேன். விரைவில் அவர்களுக்காக நிதிதிரட்டும் முயற்சியிலும் நான் ஈடுபட உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் சுப்மான் கில்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி முடிந்ததும், இந்திய அணி டெல்லிக்கு பறக்க, சுப்மான் கில் மட்டும் சென்னையிலேயே தங்கிவிட்டார். டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள அவர், சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், சுப்மான் கில்லால் சக வீர்ர்களுடன் டெல்லிக்கு பறக்க முடியவில்லை.
ரத்த்த்தில் பிளேட்லட்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் அவர் விமானத்தில் பயணம் செய்ய டாக்டர்கள் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. பிளேட்லட் குறைவாக இருப்பதால், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமின்றி, சனிக்கிழமை நடக்கவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் கில் ஆடுவது சந்தேகமாக இருக்கிறது.