இந்த உலகக் கோப்பை தொடரில் 2 அதிசயங்கள் அரங்கேறி உள்ளன. உலகக் கோப்பைகளை வெல்வதற்காகவே அவதாரம் எடுத்த ஆஸ்திரேலிய அணி, அரை இறுதிக்குக்கூட முன்னேறாமல் வெளியேறியது முதல் அதிசயம். உலகக் கோப்பைகளில் ஒருமுறைகூட அரை இறுதியை எட்டாத ஒப்புக்குச் சப்பாணியான ஆப்கானிஸ்தான் அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இரண்டாவது அதிசயம்.
இதில் முதல் அதிசயத்தை நடத்திக் காட்டியவர் ரோஹித் சர்மா. ஆஸ்திரேலியாவிடம் கணக்கு தீர்க்க அவருக்கு 2 காரணங்கள் இருந்தன. கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பை டெஸ்ட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவை ஆஸ்திரேலியா வீழ்த்தியது முதல் காரணம். அதே ஆண்டில் நடந்த ஒருநாள் கோப்பைக்கான உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவை ஆஸ்திரேலியா வீழ்த்தியது இரண்டாவது காரணம். இந்த 2 தோல்விகளிலும் இந்தியாவின் கேப்டனாக இருந்தவர் என்பதாலேயே மற்ற எல்லோரையும்விட ஆஸ்திரேலியாவை ஜெயிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு இருந்தது.
ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியா அதிரடியாக ஆடாததுதான் தோல்விக்கு முதல் காரணம் என்று ரோஹித் சர்மா உணர்ந்திருந்தார். அதனாலேயே நேற்றைய ஆட்டத்தில் ஆரம்பம் முதல் சரவெடி வெடித்தார். தொடக்க ஜோடியாக அவருடன் ஆடவந்த விராட் கோலி அவுட் ஆனபோதிலும், ரோஹித் சர்மாவை ஆஸ்திரேலியாவால் கட்டுப்படுத்த முடியவில்லை. மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளை பறக்கவிட்டு ஆஸ்திரேலியாவை திணறடித்தார் ரோஹித் சர்மா. தன் அதிரடி மூலம் இந்த தொடரில் இருந்தே ஆஸ்திரேலியாவை வெளியேற்றினார்.
இந்த ஆட்டம் பற்றி போட்டிக்கு பிறகு கருத்துச் சொன்ன ரோஹித் சர்மா, “ஆட்டம் தொடங்கியபோதே மைதானத்தில் பலத்த காற்று வீசியது. பவர் பிளே ஓவர்களில் பந்துவீச்சாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்த்து அதற்கு தகுந்தார்போல் விளையாடுவது என் வழக்கம். நேற்று அவர்கள் காற்று வீசும் திசைக்கு எதிராக பந்துவீசி என்னை ஆட்டமிழக்க வைக்க திட்டமிட்டார்கள். இதைப் புரிந்துகொண்ட நான் மைதானத்தின் பக்கவாட்டு பகுதிகளில் பந்தை விளாசினேன். மைதானத்தின் அனைத்து பகுதிகளையும் பயன்படுத்தி ரன்களைக் குவித்தேன். அதன்மூலம் பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுத்தேன். இந்த போட்டியில் சதம் அடிக்காததில் எனக்கு வருத்தம் இல்லை. சத்த்தைவிட அணியின் வெற்றியே எனக்கு முக்கியம்” என்றார்.
இந்த உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானை அரை இறுதிப் போட்டிக்குள் அழைத்துச் சென்றதில் அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான டேரன் பிராவோவுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.
இந்த உலகக் கோப்பை தொடருக்கு சில நாட்கள் முன்னர்தான் அதன் பயிற்சியாளராக பதவியேற்றார் பிராவோ. அணியின் பயிற்சியாளராக பதவியேற்ற நாள்முதல் அணியில் ஒருவராகவே மாறிப்போனார் பிராவோ.
உலகக் கோப்பை தொடர் நடக்கும் மேற்கிந்திய தீவுகளில் வேகமாக பந்து வீசுவதைவிட மித வேகத்தில் பந்துவீச்சுவதுதான் விக்கெட்டை பெற்றுத் தரும். மேற்கிந்திய வீர்ரான பிராவோவுக்கு இது நன்றாக தெரியும். இந்த வகையில் பந்துவீச ஆப்கானிஸ்தான் வீர்ர்களை அவர் பழக்கினார். அதுதான் இப்போதைக்கு கைகொடுத்துள்ளது.
பொதுவாக கால்பந்து போட்டிகளில்தான் பயிற்சியாளர்கள் மைதானத்தின் பவுண்டரி லைனில் நின்று வீர்ர்களை உற்சாகப்படுத்துவார்கள். இந்த உலகக் கோப்பை தொடரில் அதே பாணியை கிரிக்கெட்டுக்கும் கொண்டுவந்தார் பிராவோ. பல முக்கிய போட்டிகளில் பவுண்டரி லைனில் நின்று தனது அணி வீரர்களை உற்சாகப்படுத்தியும், அறிவுரை கூறியும் வழிநடத்தி உள்ளார் பிராவோ.
அவரது உற்சாகம் இன்று ஆப்கானிஸ்தானை அரை இறுதிக்கு கொண்டு சென்றதுடன், ஆஸ்திரேலியாவையும் உலகக் கோப்பையில் இருந்து விரட்டி அடித்துள்ளது.